நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் கிடைக்காதது ஏன்? சீமானுக்கு அண்ணாமலை பதிலடி
3 பங்குனி 2024 ஞாயிறு 13:17 | பார்வைகள் : 3723
நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதாலும், முறையாக விண்ணப்பிக்காததாலும் தான், அக்கட்சிக்கு முன்னர் ஒதுக்கப்பட்ட சின்னம் கிடைக்கவில்லை என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: தமிழக அரசு மக்களை ஒருங்கிணைத்து போதைப்பொருள் தடுப்புக்கான சமுதாய இயக்கமாக மாற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் ஒரு பக்கம் அரசியல் செய்கிறோம்.
அப்போது தான் இந்த விவகாரத்தை மக்களிடம் கொண்டு செல்ல முடியும். மறுபக்கம், சமுதாய அக்கறையுடன் தீர்வு காண முயல்கிறோம் என்றார்.
தொடர்ந்து, நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் கிடைக்காதது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அண்ணாமலை அளித்த பதில்:
முதலில் சின்னம் வேண்டுமானால், அதற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் விண்ணப்பிக்கவில்லை. இதற்கு வெள்ள நிவாரண பணிகளை மேற்கொண்டதால் விண்ணப்பிக்க முடியவில்லை என சீமான் காரணம் சொல்கிறார்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்தால், சின்னம் கிடைத்து இருக்கும். நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல. அப்படி இருக்கையில், சின்னம் மீண்டும் கிடைக்க வேண்டுமானால், விண்ணப்பித்து இருக்க வேண்டும். ஆனால், விண்ணப்பிக்கவில்லை.
விண்ணப்பிக்காமல் இருக்க உங்களை யார் தடுத்தது? சீமான் கையை பிடித்து சின்னம் கேட்டு விண்ணப்பிக்க வேண்டாம் என நானா கூறினேன்?. அண்ணாமலைக்கும், நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் கிடைக்காததற்கும் என்ன சம்பந்தம்?. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை டில்லி உயர்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
சம்பந்தமே இல்லாமல், என் மீது சீமான் பழியை போடுகிறார். நியாயமாக தொண்டர்கள் சீமான் மீது தான் கோபப்பட வேண்டும். ஒரு கட்சி தலைவர் சின்னத்திற்கு விண்ணப்பிக்காதது சீமானின் தவறா? என் தவறா?. விண்ணப்பிக்க வேண்டியது சீமானின் பொறுப்பு. அதனை செய்யாமல் என் மீது வீண் பழி போடுகிறார்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றால் என்ன? எத்தனை எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் பெற வேண்டும்? என சீமானுக்கு தெரியுமா. உண்மையை உணர்ந்து பேச வேண்டும். முதலில் மோடியை திட்டியவர். தற்போது என்னை விமர்சனம் செய்கிறார். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.