மீண்டும் பாலிவுட் படத்தில் யோகிபாபு..
27 மாசி 2024 செவ்வாய் 12:42 | பார்வைகள் : 2792
படங்களில் வெறும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்காமல் கதையின் நாயகர்களாகவும் நகைச்சுவை நடிகர்கள் நடித்து வரும் போக்கு தமிழ் சினிமாவில் சமீப காலமாக அதிகரித்துள்ளது. நடிகர்கள் சூரி, யோகிபாபு இந்த வரிசையில் வருவார்கள். நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாகவும், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில், அவர் மீண்டும் பாலிவுட்டிலும் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் யோகிபாபு ஏற்கனவே ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கானுடன் நடித்திருந்தார். இந்த நிலையில், அவர் மீண்டும் புதிய பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. பாலிவுட்டில் இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் அக்ஷய்குமார் நடித்து கடந்த 2007ம் ஆண்டு வெளியான ஹாரர் காமெடி படம் ’பூல் புலையா’. இந்த படத்தின் இரண்டாம் பாகம், கார்த்திக் ஆர்யன் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியானது.
இந்நிலையில் இதன் மூன்றாம் பாகத்தை அனிஸ் பாஸ்மி இயக்க இருக்கிறார். இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க யோகிபாபுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.