கைகளை இழந்த கிரிக்கெட் வீரரை சந்தித்த சச்சின்....
26 மாசி 2024 திங்கள் 09:12 | பார்வைகள் : 2171
இரு கைகளையும் இழந்து கழுத்தில் பேட்டை வைத்து விளையாடும் கிரிக்கெட் வீரர் அமீர் உசேனை சச்சின் டெண்டுல்கர் நேரில் சந்தித்தார்.
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், வாகாமா கிராமம் பிஜ்பெஹாராவைச் சேர்ந்தவர் அமீர் உசேன் (34). இவர் ஒரு மாற்றுத் திறனாளி கிரிக்கெட் வீரர் ஆவார். 2013 -ம் ஆண்டு முதல் தொழில் முறை கிரிக்கெட்டை அமீர் உசேன் விளையாடி வருகிறார்.
இவர் தனது தோள்பட்டைக்கும் கழுத்துக்கும் இடையில் பேட்டைப் பிடித்து பேட்டிங் செய்தும், கால்களை வைத்து பௌலிங் செய்தும் வருகிறார்.
தனது திறமையினால் தற்போது பாரா கிரிக்கெட் அணியின் கேப்டனாக அமீர் உசேன் உயர்ந்துள்ளார்.
இவர் தனது 8 வயதில் தந்தையில் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு கைகளையும் இழந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி அணிந்து கிரிக்கெட் விளையாடும் அமீர் உசேனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டன் அமீர் உசைனை இன்று சச்சின் டெண்டுல்கர் நேரில் சந்தித்து பேசினார்.
முன்னதாக, பேட்டி ஒன்றில் பேசிய அமீர் தனக்கு சச்சின் டெண்டுல்கரை பார்க்க ஆசை இருப்பதாக தெரிவித்திருந்தார்.
அவரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக காஷ்மீர் சென்றுள்ள சச்சின், அமீரை சந்தித்து பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.