IPL 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடவுள்ள இலங்கை வீரர்
25 மாசி 2024 ஞாயிறு 09:42 | பார்வைகள் : 1738
2024 ஆம் ஆண்டிற்கான IPL தொடரின் போட்டி அட்டவணை வெளியாகிய நிலையில், இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் வீரரொருவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது சீசன் சென்னையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்தியாவில் பொதுத் தேர்தல்கள் நடைபெறுவதால் திகதிகள் மற்றும் இடங்கள் குறித்து பல வாரங்களாக சந்தேகங்கள் இருந்தது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இறுதியாக ஒரு தீர்வை எடுத்துள்ளது.
இந்தியாவில் வைத்து நடைபெறும் லோக்சபா தேர்தல் 2024ஐ கருத்தில் கொண்டு IPL 2024 சீசனின் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
மற்ற போட்டிகள் குறித்த அறிவிப்புகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் விளையாடவுள்ளதாக தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 17 வயது இளம் வீரர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வலைப்பந்துவீச்சாளராக ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார்.
மார்ச் 19, 2024 அன்று சென்னை சூப்பர்கிங்ஸ் குழாமில் வலைப்பந்து வீச்சாளராக சேர இருக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீரரின் பெயரை விரைவில் வெளியிடுவோம்.
மேலும், அவரது பெற்றோர், பாடசாலை , கல்வி அமைச்சர் மற்றும் இலங்கை கிரிக்கட் பேரவை ஆகியோரிடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது என இலங்கையின் தேசிய கிரிக்கெட் வீரர்களின் முகவராகச் செயற்படும் அமில கலுகலகே தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.