Paristamil Navigation Paristamil advert login

 பிரபல கால்பந்து நட்சத்திரத்திற்கு எதிராக தீர்ப்பு

 பிரபல கால்பந்து நட்சத்திரத்திற்கு எதிராக தீர்ப்பு

23 மாசி 2024 வெள்ளி 04:06 | பார்வைகள் : 1175


பார்சிலோனா இரவு விடுதியில் பெண் ஒருவரை துஸ்பிரயோகம் செய்த வழக்கில் முன்னாள் பார்சிலோனா மற்றும் பிரேசில் கால்பந்து வீரர் டானி ஆல்வ்ஸ் குற்றவாளி என ஸ்பெயின் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அவருக்கு நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கால்பந்து வரலாற்றில் கொண்டாடப்படும் வீரர்களில் ஒருவரான டானி ஆல்வ்ஸ், தம் மீதான குற்றச்சாட்டுகளை தொடக்கத்தில் மறுத்தே வந்துள்ளார்.

கடந்த 2022 டிசம்பர் 31ம் திகதி நள்ளிரவு தொடர்புடைய துஸ்பிரயோகம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று அவர் தரப்பு சட்டத்தரணிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.

தண்டனை காலத்திற்கு பின்னர், 5 ஆண்டுகள் டானி ஆல்வ்ஸ் கண்காணிப்பில் வைக்கப்படுவார் என்றும் நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்டவருக்கு 150,000 யூரோ இழப்பீடாக அளிக்க டானி ஆல்வ்ஸ் ஒருகட்டத்தில் ஒப்புக்கொண்டதை, நீதிமன்றம் அவருக்கு எதிரான தீர்ப்பில் கருத்தில் கொண்டுள்ளதுடன், 9 ஆண்டுகள் சிறை தண்டனை என்ற கோரிக்கையை நிராகரித்துள்ளது.

ஆனால், சம்பவத்தின் போது டானி ஆல்வ்ஸ் மது அருந்தியிருந்ததால், குறைவான தண்டனை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. மது அருந்தியிருந்தும் அவரது நடத்தையை அது பாதிக்கவில்லை என்றே நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இரவு விடுதியில் சந்தித்த அந்த பெண், அவரது ஒப்புதல் இன்றியே டானி ஆல்வ்ஸ் அத்துமீறியதாக விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

2023 ஜனவரி மாதத்தில் இருந்தே விசாரணைக் கைதியாக சிறையில் இருந்துள்ள டானி ஆல்வ்ஸ் பலமுறை தமது வாக்குமூலத்தை மாற்றியதாகவும் கூறப்படுகிறது.

தற்போது 40 வயதாகும் டானி ஆல்வ்ஸ் பார்சிலோனா அணிக்காக 400 முறை களமிறங்கியுள்ளார். 

2022 உலகக் கிண்ணம் பிரேசில் அணியிலும் டானி ஆல்வ்ஸ் இடம்பெற்றிருந்தார். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்