ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் லால் சலாம் படம் என்ன சொல்கிறது?
10 மாசி 2024 சனி 08:41 | பார்வைகள் : 1974
மத ஒற்றுமை, சாதி ஆதிக்கம், கோவில் பிரச்னை, கிரிக்கெட் மோதல் என தமிழ் சினிமாவில் சமீப காலங்களில் பேசப்பட்ட சில விஷயங்களை ஒரே படத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். கிராமத்துக் கதைக் களத்தில் ஆரம்பித்து, கிரிக்கெட் மைதானத்தில் நகர்ந்து, மும்பை பக்கம் சென்று, திரும்ப கிராமத்துக்கே வந்து ஆன்மிகத்தில், மத ஒற்றுமையில் முடிகிறது கதை.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள மூரார்பாத் என்ற கிராமத்தில் ஹிந்துக்களும், முஸ்லிம்களும் மிக ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். அந்த ஒற்றுமையால் பாதிக்கப்படும் ஒரு சாதிக் கட்சியின் அந்த வட்டார அரசியல்வாதி கிரிக்கெட் போட்டியில் ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பகையை உருவாக்கி மதக் கலவரத்தை ஏற்படுத்தி இரண்டு மதத்தினரையும் பிரிக்கிறார். அந்தப் பகையில் இந்த ஊரைச் சேர்ந்தவரும் தற்போது மும்பையில் பெரிய ஆளாக இருக்கும் மொய்தீன் பாய் (ரஜினிகாந்த்) மகன் சம்சுதீன் (விக்ராந்த்) கையை வெட்டி விடுகிறார் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஹிந்து இளைஞர் திரு (விஷ்ணு விஷால்). திருவின் அப்பாவும் மொய்தீனும் நெருங்கிய நண்பர்கள். இருந்தாலும் தனது மகனின் கையை வெட்டிய திருவையும் அவரது குடும்பத்தையும் மன்னிக்க மறுக்கிறார் மொய்தீன். இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
மேலே சொன்னதுதான் படத்தின் மையமான, நேரடியான கதை. இதில் ஹிந்துக்களும், முஸ்லிம்களும் எதிரெதிர் அணியாக மோதிக் கொள்ளும் கிரிக்கெட் போட்டி, கோவில் தேரை வைத்து ஒடுக்கப்பட்ட சாதியினரும், மற்றொரு சாதியினரும் மோதிக் கொள்வது என சில கிளைக் கதைகளும் சேர்ந்து கிளைமாக்சில் மையக் கதை, கிளைக் கதைகளுக்கெல்லாம் சேர்த்து கிளைமாக்சை முடித்துள்ளார்கள். சொல்ல வந்த விஷயத்தை சுற்றி வளைத்து சொல்கிறது திரைக்கதை. கிளைமாக்ஸில் மத நல்லிணக்கத்திற்காக சரியான செயல் ஒன்றைச் செய்து முடிகிறது படம். அதற்காக இயக்குனரை அதிகமாகவே பாராட்டலாம்.
படத்தில் இரண்டு கதாநாயகர்கள் என்றாலும் விஷ்ணு விஷால்தான் படம் முழுவதும் வருகிறார். கோபக்கார இளைஞராக, ஆவேசமான கிரிக்கெட் வீரராக நடித்திருக்கிறார். விக்ராந்த் மீது சிறு வயதிலிருந்தே வெறுப்பாக இருக்கிறார். அதுதான் அவரது கையை வெட்டும் அளவிற்கான கோபத்தில் வந்து நிற்கிறது. கிரிக்கெட்டில் ரஞ்சிப் போட்டிக்காக தேர்வாகி ஒரு கை போனதால் தனது வாழ்க்கை பறிப்போன கோபத்துடன் இருப்பவர் விக்ராந்த். கிடைத்துள்ள குறைவான வாய்ப்பில் தனது பங்களிப்பை சரியாகவே செய்திருக்கிறார். விஷ்ணு விஷால் ஜோடியாக அனந்திகா சனில் குமார், அதிக வேலையில்லாமல் வந்து போகிறார்.
மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் வந்து மத நல்லிணக்கம், ஊர் ஒற்றுமை, ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமை, மகனின் நிலையைக் கண்டு பரிதவிக்கும் அப்பா என எமோஷனல் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த். ஒரு சில காட்சிகளில் ஹீரோயிசமும், சில காட்சிகளில் மொய்தீன் பாயின் நல்ல குணங்களும் வெளிப்படும் கதாபாத்திரம். சிறப்புத் தோற்றம் என்றாலும் படம் முழுவதும் வரும்படியான பிளாஷ்பேக் காட்சிகள்.
ஊர் மக்களைக் கட்டுப்படுத்தி வைக்கும் பெரிய மனிதராக தம்பி ராமையா, கோவில் பூசாரியாக செந்தில், விஷ்ணு விஷாலுக்கு உதவி செய்யும் ஊரைச் சேர்ந்த கிறிஸ்துவர் மைக்கேல், என சில கதாபாத்திரங்களின் அமைப்பு பாராட்ட வைக்கிறது. விஷ்ணு அம்மாவாக ஜீவிதா, விக்ராந்த் அம்மாவாக ரஜினி ஜோடியாக நிரோஷா நடித்திருக்கிறார்கள்.
ஏஆர் ரகுமான் இசையில் 'ஜலாலி, ஜலாலி…' பாடல், 'தேர்த் திருவிழா' பாடல், தேவா பாடும் 'அன்பாளனே..' பாடல் ஹிட் பாடல்கள். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு கிராமம், மைதானம், மும்பை, சண்டை, திருவிழா என பல தளங்களில் சுழன்றடிக்கிறது.
திரைக்கதை அடிக்கடி தடம் மாறிச் செல்வதால், எதை நோக்கி படம் நகர்கிறது என்ற குழப்பம் வருகிறது. ஒரே பாதையில் பயணித்திருந்தால் முக்கியமானதொரு படமாக அமைந்திருக்கும். கிளைமாக்ஸ் மற்றும் அதற்கு முந்தைய காட்சிகள் இந்தக் காலத்திற்குத் தேவையான ஒன்று. அதை அழுத்தம், திருத்தமாய் சொல்லியிருக்கிறார்கள்.