சிறிலங்காவை தலைகுனிய வைத்த மேர்வின் சில்வா!
9 புரட்டாசி 2013 திங்கள் 19:13 | பார்வைகள் : 15973
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை விமர்சிக்க முற்பட்டதன் விளைவை அரசாங்கம் இப்போது அனுபவிக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக, அமைச்சர் மேர்வின் சில்வா விவகாரத்தில், அரசாங்கம் மன்னிப்புக் கோருகின்ற அளவுக்கு நிலைமை சென்றிருக்கிறது.
நவநீதம்பிள்ளையை பக்கசார்பானவர் என்று ஒரு பக்கம் விமர்சித்துக் கொண்டே, அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய நிலை வரும் என்று அரசாங்கம் நினைத்துக் கூடப் பார்த்திருக்காது.
ஐ.நா மற்றும் மேற்குலகப் பிரமுகர்களை மோசமாக விமர்சிப்பது இலங்கையில் உள்ள அமைச்சர்களின் வழக்கம் தான்.
ஐ.நா நிபுணர் குழு அமைக்கப்பட்ட போது, அதைக் கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கு எதிராக அமைச்சர் விமல் வீரவன்ஸ உண்ணாவிரதமிருந்தார்.
அது அரசாங்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்திய போது, அந்த உண்ணாவிரதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே முடித்து வைத்தார்.
போர்நிறுத்த காலத்தில், நோர்வே தூதுவர்களை புலிகளின் ஏஜென்ட் என்று விமர்சித்தும், புலிகளின் சீருடையுடன் சுவரொட்டிகளை ஒட்டியும் குழப்பங்களை விளைவித்த சம்பவங்களின் பின்னாலும் விமல் வீரவன்ஸ போன்றவர்கள் இருந்தனர்.
இலங்கைக்கு எதிரான ஜெனீவாவில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்த போது, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு, செருப்பு மாலை அணிவித்து அவமரியாதை செய்யப்பட்ட ஒரு பேரணிக்கு வெளிவிவகாரத் துணை அமைச்சர் ஒருவரே தலைமை தாங்கியிருந்தார்.
இலங்கை அரசுக்கு எதிராக யார் யாரெல்லாம் கருத்து வெளியிடுகின்றனரோ, அவர்களையெல்லாம் புலிகள் என்று விமர்சிப்பதும், புலிகளிடம் பணம் வாங்குவதாக, குற்றஞ்சாட்டுவதும், இழிவான வகையில் கருத்துகளை வெளியிடுவதும் சிங்கள அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலை.
அவர்களில் அமைச்சர்கள் கூட விதிவிலக்கானவர்கள் இல்லை.
அரசாங்கத்துக்கு எதிராக வருகின்ற விமர்சனங்கள், கருத்துகள், சிங்கள மக்களிடத்தில், தமக்கு எதிரான உணர்வைத் தோற்றுவித்து விடக் கூடாது என்பதற்காக, அத்தகைய கருத்துகள், குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களை கேவலப்படுத்துவது அல்லது குற்றவாளிகளாக அறிமுகம் செய்வது ஆளும்தரப்பு அரசியல்வாதிகளின் தந்திரமாக உள்ளது.
இலங்கையில் பல காலமாகவே இந்த தந்திரோபாயம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய கேவலப்படுத்தல்களுக்காக, தாம் கைதட்டல்களை வாங்குவதற்காக எத்தகைய மோசமான பழிகளையும் சுமத்த இவர்கள் அஞ்சுவதில்லை.
அதுவும், தமக்கு எதிராக கருத்து வெளியிடுபவர்கள் எந்த நாட்டின் எத்தகைய உயர் பிரமுகராக - மதிப்புக்குரியவராக இருந்தாலும், அவர்களுக்குப் புலி முத்திரை குத்தி விமர்சிப்பதில் சிங்கள அரசியல் தலைமைகளுக்கு அலாதியான பிரியம்.
இவ்வாறு தான், நவநீதம்பிள்ளையையும் பெண் புலி என்றும், புலிகளிடம் பணம் வாங்குபவர் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
அதையெல்லாம் அவர் அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை.
இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய், மஹரகமவில் பௌத்த பிக்குகள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் மேர்வின் சில்வா, நவநீதம்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு, இலங்கையை சுற்றிக் காட்டத் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
முஸ்லிம்கள் 4 திருமணங்களை செய்யும் போது, தாமும் அவ்வாறு செய்தால் என்ன என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதே மேர்வின் சில்வா, சில வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் சென்று, ஆளும்கட்சி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்த போதும், யாழ்ப்பாணப் பெண்ணைத் திருமணம் செய்யப் போவதாக கூறியிருந்தார்.
அதை அப்போது யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஏனென்றால், அவர் தனிப்பட்ட ஒருவரை சுட்டிக்காட்டவில்லை.
ஆனால் நவநீதம்பிள்ளை விடயத்தில் அவ்வாறு இருக்கவில்லை.
நவநீதம்பிள்ளையின் வயது, அவர் வகிக்கும் கௌரவம் மிக்க பதவி எல்லாவற்றுக்கும் அப்பால், திருமணமான ஒரு பெண்ணாக இருந்த போதே, மேர்வின் சில்வா அவரைக் கேவலப்படுத்தியிருந்தார்.
இந்த ஒரு விடயமே, நவநீதம்பிள்ளைக்கு மட்டுமன்றி, உலகத்துக்கே, இலங்கை அமைச்சர்களின் புகழை எடுத்துச் சென்றிருந்தது. மேர்வின் சில்வாவின் கருத்து, நவநீதம்பிள்ளைக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருந்ததில் ஆச்சரியமில்லை.
ஏனென்றால், இதை சாதாரணமானதொன்றாக கருதி ஒதுக்கித் தள்ள, அவர் ஒன்றும் மேற்கு நாட்டுப் பெண் அல்ல.
தென்னாபிரிக்காவில் பிறந்தவர் என்றாலும், அவர் தமிழ் கலாசார விழுமியங்களைப் பின்பற்றுபவர்.
ஒரு குடும்பப் பெண்ணைத் திருமணம் செய்ய விரும்புவதாக, வெளிப்படையாக கூறும் ஒருவரை, தமிழ்ச் சமூகம், எந்தளவுக்கு கேவலமாக மதிக்கும் என்று கூறவேண்டியதில்லை.சிங்கள சமூகம் கூட இதனை இரசிக்கவில்லை.
ஆனால், அமைச்சர் மேர்வின் சில்வா இந் தக் கருத்துக்காக வெட்கப்படவில்லை. மன்னிப்பும் கேட்கவில்லை.
தான் இதற்காக மன்னிப்புக் கேட்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் சார்பில், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவே, நவநீதம்பிள்ளையிடம் மன்னிப்புக் கோரியிருந்தார்.
பின்னர், அமைச்சர்களின் சார்பில் மேர் வின் சில்வாவின் கருத்துக்காக மன்னிப்புக் கோருவதாக, அமைச்சர் டலஸ் அழகப்பெரும செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
இலங்கை தொடர்பாக, நவநீதம்பிள்ளை வெளியிட்ட கருத்துகள், கண்டனங்கள், குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் அரசாங்கமே காரணம்.
அரசாங்கத் தரப்பினர் வெளியிட்ட கருத்துகள், நடந்து கொண்ட முறைகள் என்பன தான், அவரை இவ்வாறு கருத வைத்தன.
இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும் நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்டியிருந்தார்.
அவர் அந்தக் குற்றச்சாட்டுக்கு வேறு யாரையும் ஆதாரம் காட்ட வேண்டியதில்லை.
ஏனென்றால், அவருக்கு எதிராகவே அத்தகைய இழிவுபடுத்தலை மேர்வின் சில்வா மேற்கொண்டிருந்தார்.
இதுவும் ஒரு பெண்களுக்கு எதிரான வன்முறையின் வடிவமாக இருக்கும் நிலையில், சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் நிலையையும், அரசாங்கத்தில் உள்ளவர்களின் மனோநிலையையும் அவரால் தெளிவாக உணர்ந்திருக்க முடியும்.
மேர்வின் சில்வாவை வைத்து நவநீதம்பிள்ளையை அவமானப்படுத்தப் போய், கடைசியில் அரசாங்கமே வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறது.
பெண்களின் உரிமைகளுக்கு அரசாங்கமே சவாலாக இருக்கிறது என்ற கருத்து இப்போது ஐ.நா வரை சென்றுள்ளது என்றால், அதற்குக் காரணம் இந்த அரசாங்கம் தான்.
அமைச்சர்களைப் பொறுத்தவரையில், யாழ்ப்பாணத்திற்குப் போய் இப்படி கூறுவது ஒரு வழக்கமாகி விட்டது.
அமைச்சர்கள் மகிந்தானந்த அழுத்கமகே, டலஸ் அழகப்பெரும, மேர்வின் சில்வா என்று பலரும் யாழ்ப்பாணத்தில் பெண் பார்க்கப் போவதாகக் கூறி கிண்டலடித்தவர்கள் தான்.
இந்த அமைச்சர்களின் வாயை ஆரம்பத்திலேயே அடக்கத் தவறியதன் விளைவால் தான், நவநீதம்பிள்ளையிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய நிலைக்கு அரசாங்கம் வந்து நிற்கிறது.
- கபில்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan