மாகாண சபை தேர்தலை இலக்கு வைத்து நகரும் அரசியல்…!

24 ஆனி 2018 ஞாயிறு 14:48 | பார்வைகள் : 11569
கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைந்து சில மாதங்கள் கடந்து விட்டது. வடக்கு மாகாண சபையின் காலம் முடிவதற்கு நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருட முற்பகுதியில மகாணசபைத் தேர்தல் நடைபெறும் என்ற நிலையே உள்ளது. இந்த தேர்தலுக்கான நகர்வுகளில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. இதனையே அண்மைய சம்பவங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.
தென்னிலங்கையின் பிரதான இரு கட்சிகளும் தமது வாக்கு வங்கியை அதிகரிக்கும் நோக்கில் வடக்கு நோக்கி தனது கவனத்தை திருப்பியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி வன்னியில் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஊடாகவும், யாழில் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஊடாகவும் மற்றும் நேரடியாக தனது கட்சி உறுப்பினர்கள் ஊடாகவும் வாகடகு வேட்டைக்கான தனது நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் அதிரடியாக வடக்கின் இரு பிரதான தேர்தல் மாவட்டங்களுக்கும் இரு பிரதி அமைச்சுக்களை நியமித்துள்ளது. யாழ் மாவட்டத்தில் அங்கஜன் இராமநாதனும், வன்னியில் கே.கே.மஸ்தான் அவர்களுக்கும் பிரதி அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டு சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கி அதிகரிப்புக்காக களம் இறக்கப்பட்டுள்ளனர். கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இருவரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கான ஆதரவுத் தளத்தை அதிகரித்துக் காட்டியிருந்தனர்.
அதனடிப்படையில் இம் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டதாக காட்டப்பட்டாலும் உண்மையில் அடுத்த வடக்கு மாகாண சபை தேர்தலை நோக்கிய நகர்வே இது. அத்துடன் ஜனாதிபதியின் கீழ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் அவர்களும் வடக்கில் கால் ஊன்றியுள்ளார்.
இவ்வாறு தென்னிலங்கை தேசிய கட்சிகளினுடைய தேர்தல் நோக்கிய செயற்பாடுகள் ஒருபுறமிருக்க தமிழ் கட்சிகளும் தற்போது வடக்கு மாகாணசபை குறித்து கவனம் செலுத்தியுள்ளது. இதனால் புதிய கட்சிகள், புதிய கூட்டுக்கள் பற்றி எல்லாம் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
ஈபிடிபி சார்பில் அதன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முதல்வர் வேட்பாளராக களம் இறங்கவுள்ளதாக தெரிவித்துள்ளதுடன், அந்தக் கட்சியும் அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இளைஞர்கள் பலரை உள்வாங்கி கிராம மட்டத்தில் கட்சி கட்டமைப்பை வளர்ப்பதற்கான தீவிர வேலைகளில் அண்மை நாட்களாக ஈபிடிபி ஈடுபட்டுள்ளது.
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவையடுத்து மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்ளத்தக்க முன்னேற்பாடுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாக உள்ளூராட்சி தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்கான காரணங்களை ஆராய்ந்துள்ள கூட்டமைப்பு அதை நிவர்த்தி செய்ய என்ன செய்யலாம் என்ற வழிவகைகள் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளது.
இந்த நிலையிலேயே கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதுவரை அரசுக்கு முண்டு கொடுத்து வந்ததாகவும் இனியும் அவ்வாறு தொடரமுடியாது. அரசுடனான தொடர்பை துண்டிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளதுடன், வடமராட்சி கிழக்கு மீனவர்களின் போராட்டத்திலும் பங்கெடுத்திருந்தார். கடந்த 450 நாட்களுக்கு மேலாக காணி விடுவிப்புக்காகவும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும் பாதிக்கப்பட்ட மக்களால் ஜனநாயக ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் போராட்டங்களில் கலந்து கொள்ளாத சுமந்திரன் வடமராட்சி கிழக்கு மீனவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டமையும், மேற்சொன்ன கூற்றும் தேர்தல் நோக்கிய நகர்வு என்பதையே வெளிப்படுத்துகின்றது.
தமிழரசுக் கட்சி தமது மக்கள் பலத்தை நிரூப்பிக்கும் வகையில் இளைஞர் மாநாடு ஒன்றினை நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளது. ஆனாலும் தமிரசுக் கட்சி தனித்து இளைஞர் மாநாடு நடத்தாமல் கூட்டமைப்பின் இளைஞர் மாநாடாக நடத்துமாறு பங்காளிக்கட்சிகள் வலியுறுத்தி வருவதால் அதில் இழுபறி நிலை காணப்படுகின்றது. தமிழரசுக் கட்சி தனித்து ஒரு இளைஞர் மாநாட்டை நடத்தினால் அது பங்காளிக்கட்சிகளுக்குள் உள் முரண்பாடுகளை மேலும் வலுவடையச் செய்வதுடன், வடக்கு முதலமைச்சர் தலைமையிலான புதிய அனி அல்லது கூட்டுக்கு சாதகமாக அமைய வாய்ப்பும் உள்ளது. கட்சி ஒற்றுமையை பாதுகாத்து வாக்கு வங்கியை தக்க வைப்பதா அல்லது கூட்டமைப்பை மேலும் உடைவுறச் செய்வதா என்பது தமிழரசுக் கட்சியின் கைகளிலேயே தங்கியுள்ளது.
இவ்வாறானதொரு பரபரப்பான நிலையில் வடக்கு முதலமைச்சரின் நடவடிக்கைகள் இந்த விவகாரத்தை மேலும் சூடு பிடிக்கச் செய்துள்ளது. வடக்கு முதலமைச்சர் தலைமையில் ஒரு அணியும் மாகாணசபை தேர்தலில் களம் இறங்கவுள்ளது. அண்மைக் காலமாக வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் ஒரு மாற்று அணி அல்லது புதிய கட்சி உருவாகப்படவுள்ளதாக பேசப்பட்டு வருகின்ற போதும் அது தொடர்பில் முதலமைச்சர் சூட்சுமான முறையில் சில நகர்வுகளை செய்கின்றாரே தவிர பகிரங்கமாக எதனையும் கூறவில்லை.
தமிழ் மக்கள் பேரவையின் ஆதரவுடன் வடக்கு முதலமைச்சர் தலைமையில் ஒரு கூட்டு அல்லது புதிய கட்சி உருவாக்கப்படுவதற்கான வேலைகள் நடைபெறுகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சவால் அளிக்கத்தக்க வகையில் அந்த கூட்டு அமைய வேண்டுமானால் அது முதலமைச்சர் தலைமையிலான அணி, தமிழ் தேசிய மக்கள் முன்னனி, ஈபிஆர்எல்.எப் ஆகியன இணைவதன் மூலமே சாத்தியம். அதுவே வடக்கு மாகாணசபையில் ஒரு போட்டி நிலையை உருவாக்கும். இந்த அணிகளை இணைக்கும் போது முதலமைச்சர் தனது பலத்தையும், செல்வாக்கையும் நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றார்.
குறிப்பாக கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டமைப்பு பின்னடைவைச் சந்தித்து இருந்தது. இதனை முதலமைச்சர் வெளிப்படுத்தியும் இருந்தார். அதேநேரம் தமிழ் தேசிய மக்கள் முன்னனி கணிசமான வாக்குகளைப் பெற்று வடக்கில் கூட்டமைப்புக்கு சவால் அளித்துள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணத்தின் சில சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு கூட்டமைப்புக்கு கடும் நெருக்கடி நிலையையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் கூட்டமைப்புக்கு போட்டியான மாற்று அணி என்ற நிலையை தமிழ் தேசிய மக்கள் முன்னனி தக்க வைக்க முயல்கிறது. அது ஒருபுறமிருக்க, முதலமைச்சர் தலைமையில் புதிய கூட்டு உருவாக்கப்பட்டால் தமிழ் தேசிய மக்கள் முன்னனி சில நிபந்தனைகளுடன் இணையக் கூடிய சூழலே இருக்கிறது. தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வாக்கு வங்கி அதிகரிப்பு முதலமைச்சருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
புதிய கட்சி அல்லது கூட்டு அமைக்கப்படும் பட்சத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியை விட தனக்கு அதிக செல்வாக்கு உள்ளது என்பதை வெளிப்படுத்த வேணடிய தேவையும் முதலமைச்சருக்கு எழுந்திருக்கின்றது. அதன் மூலமே ஏனைய கட்சிகளுடன் சமாந்தரமாக நின்று பேசி ஒரு மாற்றுத் தலைவராக தன்னை நிலைநிறுத்தி ஏனைய கட்சிகளை எந்தவித நிபந்தனைகளையும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி விதிக்காத வகையில் புதிய கூட்டுக்குள் கொண்டுவரமுடியும்.
இந்த பின்னனியிலேயே தமிழ் மக்கள் பேரவை முதலமைச்சர் தலைமையில் இளைஞர் மாநாடு ஒன்றை நடத்த முயல்கிறது. இந்த இளைஞர் மாநாட்டில் வரும் இளைஞர்கள் எண்ணிக்கையே வடக்கு முதல்வரின் ஆரவுத் தலத்தை வெளிப்படுத்தப் போகிறது. வடக்கு முதல்வர் தலைமையில் எழுக தமிழ் பேரணி வடக்கிலும், கிழக்கிலும் இடம்பெற்ற போது பெரும் மக்கள் வெள்ளத்தை காணமுடிந்தது. அந்த மக்கள் திரட்டலுக்கு பேரவை துருப்புச் சீட்டாக இருந்தாலும் களத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னனி மற்றும் ஈபிஆர்எல்எப் என்பனவே வேலை செய்திருந்தது. அதிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பங்களிப்பு அதிகம் என்றே சொல்லாம்.
இதேபோல் வடக்கு முதலமைச்சருக்கு எதிராக தமிழரசுக் கட்சியால் அரச கட்சிகளுடன் இணைந்து நம்பிக்கையில்லா பிரரேரணை கொண்டுவரப்பட்ட போது நல்லூர் வீதியால் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முதலமைச்சரின் இல்லத்தை நோக்கி திரண்டார்கள். அதிலும் தமிழரசுப் கட்சி அதிருப்தியாளர்கள், கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் இளைஞர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னனியினர், ஈபிஆர்எல்எப்பினர் எனப் பலரும் இருந்தனர். இந்த நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னனி, ஈபிஆர்எல்எப் என்பன புதிய கூட்டுக்குள் தனிக்கட்சிகளாக தம்மை அடையாளப்படுத்தி இணையுமாயின் முதலமைச்சரும் தனது செல்வாக்கை வெளிப்படுத்தி தனிக்கட்சியாக வெளிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது.
இதனை வெளிப்படுத்தவே இளைஞர் மாநாடு ஒன்றை நடத்த முயற்சிகள் இடம்பெறுகிறது. முதலமைச்சரின் பலத்தை நிரூப்பிக்க நடைபெறும் இளைஞர் மாநாட்டுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி, ஈபிஆர்எல்எப் என்பன ஆதரவு வழங்கினாலும் மனப்பூர்வமாக முதலமைச்சரின் பலத்தை காட்ட அணிதிரட்டலை செய்வார்களா என்ற கேள்வி எழுகிறது. மறுபுறம் பேரவையில் உள்ளவர்களும் பெரியளவில் மக்களை அணி திரளச் செய்யக் கூடியவர்கள் அல்ல. அவர்கள் கருதுருவாக்கத்தை ஏற்படுத்துவர்களே தவிர மக்களுடன் நேரடித் தொடர்பு குறைந்தவர்கள்.
முதலமைச்சருக்கு ஆதரவு இருக்கின்ற போதும் அவர் கீழ் மட்டத்தில் இறங்கி அணிதிரட்டலை செய்யக் கூடியவர் அல்ல. தற்போது உள்ள சூழலில் முதலமைச்சர் தன்னுடன் நெருக்கமாகவுள்ள ஐங்கரநேசன், அனந்தி சசிதரன், அருச்தவபாலன் ஆகியோரை வைத்தே அவ்வாறான தொரு அணிதிரட்டலை செய்ய வேண்டும். அவர்களால் பெரியளவிலான அணி திரட்டலை செய்ய முடியுமா என்ற கேள்வியும் உள்ளது. இந்த பின்னனியிலேயே முதலமைச்சரின் புதிய அணி அல்லது புதிய கூட்டு தொடர்பான வேலைகள் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றது.
ஆக, தேர்தல் நோக்கிய நகர்வில் கட்சிகளும், தலைவர்களும் தீவிரமாக இறங்கியுள்ளார்கள். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் தேசிய மக்களது அபிலாசைகளையும், அவர்களது உரிமைகளையும் எந்தவித விட்டுக் கொடுப்புமின்றி முன்னகர்த்தி செல்வதற்கான ஒரு தலைமையே தமிழ் மக்களுக்கு தேவைப்படுகிறது. கூட்டமைப்பு அந்த நிலையில் தடுமாறி நிற்கின்றது. இதனாலேயே மாற்றுத் தலைமைக்கான தேடல் தொடங்கியது. அந்த மாற்று தலமை என்பது வெறும் தேர்தல் நோக்கிய கட்சி அரசியலாக இல்லாது உண்மையான ஒரு கொள்கை கொண்டதும், தமிழ் மக்களது அபிலாசைகள் நோக்கி நகரக் கூடியதுமானதாக அமையவேண்டும். அவ்வாறான தொரு கூட்டினை அமைப்பதற்கான தேவையே தற்போது எழுந்திருக்கின்றது. இதனை முதலமைச்சர் மற்றும் கட்சித் தலைமைகள் புரிந்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக வலுவான ஒரு அணியாக செயற்பட முன்வரவேண்டும் என்பதே பலரதும் எதிர்பார்ப்பு.
நன்றி - சமகளம்