Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

2000 ஆண்டுக்கு முற்பட்ட மனிதனின் கைப்பதிவு கண்டுபிடிப்பு

2000 ஆண்டுக்கு முற்பட்ட மனிதனின் கைப்பதிவு கண்டுபிடிப்பு

27 சித்திரை 2022 புதன் 17:33 | பார்வைகள் : 16378


கிருஷ்ணகிரி மாவட்ட  அரசு அருங்காட்சியகம், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் கிருஷ்ணகிரி அருகே உள்ள மகாராஜகடை கிராமத்தை சேர்ந்த அரசு மருத்துவர் லோகேஷ் மற்றும் நண்பர்கள் அளித்த தகவலின் பேரில், வரலாற்றுக் குழுத் தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில், மகாராஜகடை மலையின் அருகே உள்ள  பூதிகுட்டையில் ஆய்வு பணியை அன்மையில்  மேற்கொண்டனர். 
 
இந்தப் பகுதியில் நுாற்றுக்கணக்கான கல்திட்டைகள் அழிக்கப்பட்டு இருப்பதை ஆய்வின் போது காண முடிந்தது. சிறிது சிதைந்த நிலையில் இருந்த மூன்று கல்திட்டைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் செ.கோவிந்தராஜ் கூறியதாவது:
 
இந்த பாறை ஓவியங்கள் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காணக் கிடைக்கும் கல்திட்டையில் அதிக எண்ணிக்கையில்  பாறை ஓவியங்கள் இங்குதான் காணக் கிடைக்கின்றன. ஏற்கனவே இந்த ஓவியங்களை துரைசாமி போன்ற ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். என்றாலும் எங்கள் ஆய்வின்போது 3 முக்கிய செய்திகளை கண்டறிந்தோம். 
 
முதலாவது இங்குள்ள கருஞ்சாந்து ஓவியங்கள். கருஞ்சாந்து ஓவியத்தில், ஒரு விலங்கின் மீது இருவர் செல்வது போலவும் அதற்கு அருகிலேயே இரண்டு மனித உருவங்களும், 3 அடி அகலமுள்ள மயில்போன்ற உருவம் கருந்சாந்து புள்ளிகளால் வரையப்பட்டுள்ளது. தேர்போன்ற அமைப்பு வெண்சாந்தும், கருஞ்சாந்தும் சேர்த்து வரையப்பட்டுள்ளது. இது இரண்டும் சமகாலம் என அறிய முடிகிறது.
 
இரண்டாவதாக, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தய மனிதனின் உள்ளங்கை அச்சு (கையில் வெண்சாந்து தடவி) இரண்டு இடங்களில் பதிக்கப்பட்டுள்ளது). கீழே கை கோட்டுருவத்தில் வரையப்பட்டுள்ளது.
 
மூன்றாவதாக, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வட இந்தியாவுடனான வணிகத்தொடர்பு இருந்ததைக் கூறும் வகையில், வெண்சாந்தில் உஜ்ஜெய்னி குறியீடு ஒரு கல்திட்டையில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. 
 
இதே போன்ற ஒரு குறியீடு ஐகுந்தம் பகுதியில் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்திற்கான வாழ்விடப்பகுதியை கண்டறிந்து அகழாய்வு செய்தால் இந்த இடந்திலிருந்த மக்களின் வாழ்வியலை அறியலாம் என அவர் கூறினார்.
 
வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் கூறுகையில், இதற்கு முன் கொங்கனப்பள்ளியில் பாறையில் கருஞ்சாந்து ஓவியம் வரையப்பட்டு இருந்தது. அந்த இடத்திலிருந்து இந்த இடம் 13  கிலோ மீட்டர் தொலைவு என்றாலும், இதே மலைத்தொடரில் வருவது குறிப்பிடத்தக்கது. 
 
கிருஷ்ணகிரியில் இந்த இடத்தில் அதிக அளவு கருஞ்சாந்து ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது என்றார். ஆய்வுப்பணியில் சதானந்த கிருஷ்ணகுமார், சரவணகுமார், பிரகாஷ், அசோக், உள்ளுரைச் சேர்ந்த தேவராஜ், சீனிவாசன், முனிரத்தினம் உள்பட பலர் பங்கேற்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்