Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

உலகின் மிகப்பெரிய தாவரம் கண்டுபிடிப்பு

உலகின் மிகப்பெரிய தாவரம் கண்டுபிடிப்பு

14 ஆனி 2022 செவ்வாய் 18:03 | பார்வைகள் : 18634


ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் ஷார்க் விரிகுடாவில் 'பூமியின் மிகப்பெரிய தாவரம்' இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அபூர்வமான தாவரம், 200 சதுர கிமீ பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது.

 
ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள ஷார்க் விரிகுடாவில் பூமியின் மிகப்பெரிய தாவரம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறும் விஞ்ஞானிகள், சுமார் 200 சதுர கிமீ பரப்பளவில் அது விரிந்துள்ளதாக ஆச்சரியப்படுகின்ரனர்.
 
இந்த ராட்சதத் தாவரம், Posidonia australis இனத்தைச் சேர்ந்தது. இது ஃபைபர்-பால் தாவரம் அல்லது ரிப்பன் (fibre-ball weed or ribbon weed) என்றும் அழைக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையோரங்களில் காணப்படும் தாவரம் இது.
 
இந்த ஷார்க் விரிகுடா முழுவதும் ரிப்பன் களைகளில் மரபணு வேறுபாடுகளைத் தேடும் போது விஞ்ஞானிகளுக்கு பல தடுமாற்றங்களும் ஏற்பட்டன.
 
ஆனால், இறுதியில் 180 கிமீ தொலைவில் உள்ள தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், அவை ஒற்றைத் தாவரம் என்று உறுதிபடுத்தியிருக்கின்றன. பொசிடோனியா ஆஸ்ட்ராலிஸின் பல தாவரம் இது அல்ல என்றும் ஒற்றைத் தாவரம் என்றும் தெரியவந்தது அபூர்வமான கண்டுபிடிப்புதான்.  
 
இந்த அபூர்வ கண்டுபிடிப்பு பற்றி கூறும் ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழக சூழலியல் நிபுணர் டாக்டர் மார்ட்டின் ப்ரீட், "இங்கே என்ன நடக்கிறது?" என்று எங்களுக்கு புரியவில்லை. அனைவருக்கும் திகைப்பும் வியப்பும்தான் ஏற்பட்டது" என்று கூறினார்.
 
சுமார் 18,000 மரபணு குறிப்பான்களைக் கொண்டு தாவரங்களின் இனங்களின் மாறுபாடுகள் ஆய்வு செய்யப்பட்டன, இது மறுசீரமைப்பு திட்டங்களில் பயன்படுத்த மாதிரிகளைத் தேர்ந்தெடுக்க உதவும் என்று மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் (UWA) மாணவர் ஆராய்ச்சியாளர் ஜேன் எட்ஜெலோ கூறினார்.
 
ஆனால், வேர்த்தண்டின் கிழங்குகளைப் பயன்படுத்தி பரவிய தாவரம் இது என்பது குறிப்பிடத்தக்கது. புல்வெளி அதன் விளிம்புகளிலிருந்து பரவுவது போலவே இந்த தாவரம் விரிந்து படர்ந்து வளந்துள்ளது. 
 
"தற்போதுள்ள 200 சதுர கி.மீ ரிப்பன் புல்வெளிகள் ஒரு ஒற்றை, காலனித்துவ நாற்றுகளில் இருந்து விரிவடைந்த தாவரம் என்று தோன்றுகிறது" என்று எட்ஜெலோ கூறினார்.
 
ராயல் சொசைட்டியின் ப்ரோசீடிங்ஸ் B இல் இந்த ஆராய்ச்சி வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிபுணர்களின் கூற்றுப்படி, ரிப்பன் களை வேர்த்தண்டுக் கிழங்குகள் ஆண்டுக்கு 35 செ.மீ வரை வளரும்.
 
இந்த கணக்கின்படி பார்த்தால், இந்த தாவரம் சுமார் 4,500 ஆண்டுகளாக வளர்ந்திருக்கலாம் என்பது மிகவும் ஆச்சரியமான தகவலாக இருக்கிறது.  
 

வர்த்தக‌ விளம்பரங்கள்