12 பங்குனி 2023 ஞாயிறு 03:20 | பார்வைகள் : 12467
நெதர்லாந்தில் 1,000 ஆண்டுகள் பழமையான இடைக்கால தங்கப் பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெதர்லாந்தின் டச்சு வரலாற்றாசிரியரான லோரென்சோ ரூய்ட்டர்(27) 1,000 ஆண்டுகள் பழமையான இடைக்கால தங்கப் பொக்கிஷத்தை கண்டுபிடித்துள்ளார்.
10 வயதில் இருந்து புதையல் வேட்டையில் ஈடுபட்டு வரும் லோரென்சோ ரூய்ட்டர், 2021 ஆம் ஆண்டில் நெதர்லாந்தின் சிறிய வடக்கு நகரமான Hoogwoud-இல் மெட்டல் டிடெக்டரைப் பயன்படுத்தி புதையலைக் கண்டுபிடித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்த கருத்தில், "இந்த மதிப்புமிக்க ஒன்றைக் கண்டுபிடிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது, என்னால் அதை விவரிக்க முடியாது. இது போன்ற எதையும் கண்டுபிடிப்பேன் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வரலாற்றாசிரியர் ரூய்ட்டர் கண்டுபிடித்துள்ள பொக்கிஷத்தில், நான்கு தங்க காது பதக்கங்கள், இரண்டு தங்க இலைகள் மற்றும் 39 வெள்ளி நாணயங்கள் உள்ளன என்று டச்சு தேசிய தொல்பொருள் அருங்காட்சியகம் (Rijksmuseum van Oudheden) வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
அத்துடன் இரண்டு ஆண்டுகளாக இதை மறைத்து வைத்து இருந்தது கடினமானதாக இருந்தது, ஆனால் அதன் பிறகு புதையல் பொருட்களை சுத்தம் செய்யவும், ஆய்வு செய்யவும் மற்றும் தேதியிடவும் தேசிய பழங்கால அருங்காட்சியகத்தின் நிபுணர்களுக்கு நேரம் தேவைப்பட்டது என ரூய்ட்டர் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த நாணயங்கள் சுமார் 1250-க்கு முந்தியவை என்றும், நகைகள் அதிலிருந்து இரண்டு நூற்றாண்டுகள் பழமையானது என அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.
வரலாற்றாசிரியரான லோரென்சோ ரூய்ட்டர் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதையலின் தொல்பொருள் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, புதையல் அருங்காட்சியகத்திற்கு கடனாக வழங்கப்பட்டது.
ஆனால் அவை கண்டுபிடிப்பாளர் Lorenzo Ruijter-இன் அதிகாரப்பூர்வ சொத்தாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது