Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

காதலிக்கும் போது அறிவு மங்கிவிட என்ன காரணம்?

காதலிக்கும் போது அறிவு மங்கிவிட என்ன காரணம்?

1 மாசி 2018 வியாழன் 10:15 | பார்வைகள் : 15041


 நவீன கால காதலில் வன்முறையும், சதியும் அதிகம் காணப்படுகிறது. அதனால் பிள்ளைகள் காதலித்தாலே பெற்றோர்கள் பயந்துவிடுகிறார்கள். இன்றைய காதலர்களிடம் பொதுவாகவே பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியமும், சாதுரியமும் குறைந்துவிட்டது. அதனால் அவர்கள் ‘ரோமியோ-ஜூலியட்’, ‘அம்பிகாபதி-அமராவதி’ போன்ற ஜோடிகளை நினைவில் வைத்துக்கொண்டு ஓரளவு போராடிப்பார்த்துவிட்டு உயிரைவிடவும் தயாராகிவிடுகிறார்கள். 

 
‘ரோமியோ - ஜூலியட்டை நினைத்துக்கொண்டிருந்தால், காதல் ஒரு வெறித்தனமாக மாறிவிடும். காதலுக்கு அங்கீகாரம் கிடைக்காவிட்டால் ‘ஒன்றாக சேர்ந்து வாழத்தான் முடியவில்லை. ஒன்றாக மாண்டுவிடலாம்’ என்ற முடிவுக்கு வந்துவிட அது வகைசெய்துவிடும். அல்லது காதலர்களில் யாராவது ஒருவர் காலைவாரிவிட்டால், அவரை பழி வாங்க வேண்டும் என்ற உணர்வு வந்து விடக்கூடும். இவை இரண்டும் கிட்டத்தட்ட வன்முறை கலந்த உணர்வுதான்.
 
காதல் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியும். ஒவ்வொரு மனிதர்களும் காதலுக்காக படைக்கப்படவில்லை. வாழ்வதற்காக படைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் காதல் வந்து போகும் அவ்வளவுதான். பார்த்தவுடன் வருவது காதல் அல்ல. அது அந்தப் பருவத்தில் வருகின்ற ஒருவித ஈர்ப்பு. அதற்காக ஏன் உயிரை விடவேண்டும்.
 
பொழுது போக்குக்காகவோ, பணத்திற்காகவோ உருவாகும் காதல் எவ்வளவு காலம் நீடித்தாலும் அது நிஜமான காதல் ஆகாது. இதனால் பல்வேறு இழப்புகள் ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவீர்கள். அதனால் அதனை போகிறவரை போகட்டும் என்று இழுத்துக்கொண்டே செல்லாதீர்கள். திடீரென்று அது உங்களையும் சேர்த்து இழுத்துச் சென்றுவிடும். 
 
அதனால் அந்த காதலை துண்டித்துவிட்டு அடுத்த வேலையை பார்க்கவேண்டியதுதான். அதுபோல் ஆழமாக காதலிக்கும் காதலன். ‘நமது காதலுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனால் நாம் சேர்ந்து இறந்துவிடலாம்’ என்று சொன்னால், அவர் அறிவிலி என்ற முடிவுக்கு வந்துவிடலாம். அவர் வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு தோல்விக்கும் அந்த பெண்ணை தற்கொலைக்கு தூண்டுபவராக இருந்துவிடக்கூடும். அவரை நம்பி பலன்இல்லை.
 
 
 
பிரபலமான தொலைக்காட்சித் தொடர் இளம் நடிகை ஒருவர், உடன் நடித்துக் கொண்டிருந்த இளைஞரை காதலித்தார். ஷூட்டிங் நடந்துக் கொண்டிருக்கும் போதும் இருவரும் கலகலப்பாக பேசிக் கொண்டிருப்பார்கள். பின்பு காதலித்தார்கள். அவர்கள் இருவரும் காதலர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது. அவர்கள் நடித்துக்கொண்டிருந்த தொடர் முடிவுக்கு வந்தது. நடிகை இன்னொரு தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் அதில் நடிக்கத் தொடங்கிவிட்டார். அதேபோன்று அந்த இளைஞரும் வேறு ஒரு தொடரில் நடிக்கச் சென்றுவிட்டார். இருவரும் சந்தித்துக் கொள்வது தடைபட்டது. பேசிக் கொள்வதும் குறைந்து போனது.
 
இந்த காலகட்டத்தில் இன்னொரு மாற்றம் நிகழ்ந்தது. புது தொடரில் நடித்துக்கொண்டிருந்த நடிகைக்கும், அந்த இளைஞருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. அதனால் பழைய காதலியோடு பேசுவது நின்று போனது. விஷயம் அறிந்த அந்த நடிகை மனமுடைந்தார். பழைய கலகலப்பு அவரிடம் இருந்து காணாமல் போனது. வீட்டிலும் சரி... ஷூட்டிங்கிலும் சரி விரக்தியாக காணப்பட்டார். 
 
எல்லோரிடமும் வெறுப்பை உமிழ்ந்தார். சோகம் தந்த வேதனையில் ஏதேதோ செய்யத் தொடங்கினார். உடனிருந்தவர்கள் எவ்வளவோ அறிவுரை சொல்லியும் நடிகையால் இயல்புக்கு திரும்பமுடியவில்லை. இந்த நிலை நீடித்தால் தொடரில் இருந்து நீக்க வேண்டியிருக்கும் என்று தயாரிப்பாளர் எச்சரித்தார். அந்த எச்சரிக்கையை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. காதல் தந்த தோல்வியால் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளான அவர், எடுக்கக்கூடாத முடிவினை எடுத்துவிட்டார். மிக அற்புதமான வாழ்க்கையை அவர் வீணாக்கி விட்டார். இளமை, அழகு, புகழ், பணம் எதையும் அவரால் அனுபவிக்கமுடியாமல் போனது.
 
காதல்தான் உலகம். அதுவே மிகசிறந்தது என்ற முடிவுக்கு யாரும் வரவேண்டியதில்லை. அதற்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்தால் பிரிவு வரும்போது மனது உடைந்துபோகும். அந்த சோகத்தில் இருந்து மீளமுடியாமல் தவிக்கவேண்டியதிருக்கும். இதனால் தன் குடும்பத்திற்கும், உடனிருக்கும் உறவினர் களுக்கும் மனவருத்தம் ஏற்படும். உங்கள் காதல் தோல்விக்காக குடும்பத்தினர் மனதை நோகடிப்பது சரியான செயல் இல்லை. குடும்பத்தினரை மகிழ்ச்சியடைய வைப்பதுதான் உங்கள் நோக்கமாக இருக்கவேண்டும். கவலையடையவைப்பது உங்கள் நோக்கமாக இருக்கக்கூடாது. காதல் வாழ வழிசெய்யவேண்டும். சாக வழி காட்டக்கூடாது.
 
 
 
காதலிக்கும்போது அறிவாளியாக இருப்பவர்கள், காதல் தோல்வி அடையும்போது ஏன் அறிவற்றவர்களாக மாறவேண்டும். மனித வாழ்க்கையில் எல்லாவற்றிலும் வெற்றி-தோல்வி உண்டு. அப்படியிருக்கும்போது காதல் மட்டும் எப்படி தோல்விக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். அதிலும் தோல்வி உண்டு. அதில் துவண்டுபோகாத அளவுக்குத்தான் மனித இயல்பு இருக்கவேண்டும்.
 
காதல் ஒன்றும் மோசமானதல்ல. காதலர்கள் நடந்துகொள்ளும் முறையால்தான் மற்றவர்கள் காதலை மோசமானதாக கருதி எதிர்க்கிறார்கள். காதலரில் ஒருவர் பிரியும்போது இன்னொருவர் தற்கொலை செய்துகொண்டால், அது காதலுக்கு களங்கம். அந்த களங்கம் பெற்றோர் மனதில் நிலைத்துவிடும்போது, தங்கள் பிள்ளைகள் காதலித்தால் எதிர்ப்பார்கள். ஏன்என்றால் அவர்களது காதல் தோற்றுவிட்டால், அவர்களும் அதுபோன்ற கொடிய முடிவை எடுத்துவிடுவார்களே என்று பயப்படுவார்கள்.
 
காதலர்கள் தங்கள் காதலை ஒரு ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். உடல் கவர்ச்சி, ஈர்ப்பு, பணம் சார்ந்த விஷயங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, காதல் ஆய்வை மேற்கொள்ள வேண்டும். தங்கள் காதல் சுயநல மற்றதாக இருக்கிறதா? புத்திசாலித்தனமாக இருக்கிறதா? இருவரது நோக்கமும் எப்படி இருக்கிறது? அந்த காதலால் குடும்பத்திற்கோ, சமூகத்திற்கோ பாதிப்பு வருமா? என்றெல்லாம் பல வழிகளில் சிந்தித்து பார்க்கவேண்டும். எப்போது அந்த காதல், ‘தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும் பாதிக்கும்’ என்று கருதுகிறீர்களோ அப்போதே அதை புரியவைத்து, அதில் இருந்து விலகிக்கொள்ள முன்வரவேண்டும். அப்படி ஏற்றுக்கொண்டு விலகும் பக்குவம் இல்லாதவர்கள் காதலிக்கக்கூடாது. அந்த நேரத்தை வேறு ஏதாவது நல்ல சேவைக்கு பயன்படுத்தலாம்.
 
முதல் காதலிலேயே வாழ்க்கை முடிந்துபோய்விடாது என்பதை காதலிக்கும் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். காதலில் எந்த நேரத்திலும் இடர்வரலாம். அப்போது இருவரில் யாரும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் இருவருமே மிகக் கவனமாக இருக்கவேண்டும். காதலிக்கும்போது பழகியது, பேசியது எல்லாம் மீண்டும் மீண்டும் நினைவில் வரத்தான் செய்யும். மனதை வாட்டத்தான் செய்யும். உடனே அதனை மறக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் மறந்துவிட முடியும் என்பது அதைவிட பெரிய உண்மை. அந்த உண்மையை உணர பொறுமையும், நிதானமும், குடும்பத்தினரின் மீதான அக்கறையும் மிக அவசியம்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்