Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

திருமண வாழ்வில் பொய் சொல்வதால் ஏற்படும் விளைவுகள் ...

திருமண வாழ்வில் பொய் சொல்வதால் ஏற்படும் விளைவுகள் ...

18 மாசி 2022 வெள்ளி 11:57 | பார்வைகள் : 14620


கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்துவதுடன், உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்பது பொதுவான கருத்து. ஆனால், எதார்த்த வாழ்க்கையில் நாம் அப்படியே உண்மையை கடைப்பிடிக்க முடிவதில்லை. சின்ன, சின்ன விஷயங்களை சமாளிப்பதற்காக அவ்வபோது சாதாரண பொய்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

 
ஆனால், மிக முக்கியமான விஷயங்களில் உண்மைகளை மறைத்து நாம் பொய் பேசினால், அதுவே பெரிய பிரச்சனைகளுக்கு அடித்தளமாக அமைந்துவிடும். ஆகவே, பொய் பேசுவதால் திருமண வாழ்வில் ஏற்படும் விளைவுகள் குறித்து இந்த செய்தியில் தெரிந்து கொள்ளலாம்.
 
 பொய் சொல்வதன் மூலமாக உங்கள் சுயநல தன்மை அப்பட்டமாக தெரிந்து விடுகிறது. மற்றவர்களின் நலன்களை புறம்தள்ளி உங்களைப் பற்றி மட்டுமே நீங்கள் சிந்திக்கிறீர்கள் என்று பொருள் கொள்ளப்படும். திருமண பந்தத்தில் நீங்கள் முழுமையாக இணையவில்லை என்பதை இது உணர்த்தும். ஆகவே, உங்கள் வாழ்க்கைத் துணை உங்கள் மீது அன்பை இழக்கக் கூடும்.
 
ஒருமுறை நீங்கள் பெரும் உண்மையை மறைத்து, மிகப்பெரிய பொய் சொல்லி விட்டீர்கள் என்பது உங்கள் வாழ்க்கைத் துணையின் மனதில் பதிந்து விட்டால், அதன் பிறகு நீங்கள் எப்போதுமே பொய் சொல்வீர்கள் என்ற அச்சத்துடனே அவர் வாழ வேண்டியிருக்கும். ஒருமுறை பொய் சொல்லி விட்டால் அதற்கு பிறகு நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விஷயம் குறித்தும் அவர்கள் அடுக்கடுக்காக கேள்வி எழுப்ப தொடங்குவார்கள். அதுமட்டுமல்லாமல் உங்கள் நடவடிக்கைகள் அத்தனையிலும் சந்தேகம் கொள்ள நினைப்பார்கள்.
 
ஒரு பொய்யை சொல்வதன் மூலமாக உங்கள் வாழ்க்கை துணையின் மீது நீங்கள் மரியாதை கொண்டிருக்கவில்லை என்பது உறுதியாகி விடும். எந்த ஒரு உறவுகளுக்கும் இடையே பலமான பந்தம் ஏற்பட அடித்தளமாக இருப்பது மரியாதை. அது குறையத் தொடங்கினால் வாழ்க்கையில் ரொம்பவே சீரியசான பிரச்சினைகள் ஏற்படும். இறுதியாக, ஒருவருக்கொருவர் எந்த மரியாதையும் இன்றி, இழிவாக திட்டிக் கொள்ளும் போக்குகள் அதிகரிக்கும்.
 
சமநிலையற்ற தன்மை : திருமண வாழ்வில் பொய்கள் நிரம்பும் போது வாழ்க்கைத்துணை இருவருமே ஒரு சமநிலையை கடைப்பிடிப்பது கடினம் ஆகிவிடும். ஒருவருக்கு, ஒருவர் புரிந்து கொள்ளவும், நம்பிக்கை ஏற்படுத்தவும் சமநிலைத் தன்மை என்பது மிக முக்கியமானது. இது தவறும் பட்சத்தில், நிதானம் இழந்து எதற்கு எடுத்தாலும் கோபா கொள்வது வழக்கமாகிவிடும்.
 
பொய்யைப் பூசி மெழுகுவது : ஒரு பொய்யை சமாளிக்க நீங்கள் அடுக்கடுக்காக அடுத்தடுத்த பொய்களை சொல்ல வேண்டியிருக்கும். இதன் விளைவாக உங்கள் மீதான நம்பிக்கையையும், விசுவாசத்தையும் அவர்கள் இழக்கக்கூடும். தொடர்ச்சியான பொய் கூறுபவர்களின் வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. இது மீட்டெடுக்க முடியாத துயரங்களை திருமண வாழ்க்கையில் கொடுத்துவிடும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்