Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

குடும்பத்தின் ஆணி வேராக விளங்கும் மனைவியை மகிழ்விக்கும் விஷயங்கள்

குடும்பத்தின் ஆணி வேராக விளங்கும் மனைவியை மகிழ்விக்கும் விஷயங்கள்

14 வைகாசி 2022 சனி 07:00 | பார்வைகள் : 14458


 கணவன்-மனைவி இடையேயான உறவு பந்தம் பாசப்பிணைப்புடன் பின் தொடர்வதற்கு ஒருவரையொருவர் நன்கு புரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு சில விஷயங்களில் விட்டுக்கொடுத்து செல்வது உறவை வலுவாக்கும். நிம்மதியையும், மகிழ்ச்சியையும் நிலைத்தோங்க செய்யும். குடும்பத்தின் ஆணி வேராக விளங்கும் குடும்ப தலைவி சந்தோஷமாக இருந்தால் இல்லற வாழ்க்கையும் இனிமையாக அமையும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

 
1. கருத்து: ஒரு சில விஷயங்களில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். அந்த சமயத்தில் ஒருவரின் கருத்துக்கு மற்றொருவர் மதிப்பு கொடுக்க வேண்டும். அதில் இருக்கும் நல்ல விஷயத்தை பின்பற்றுவதற்கு தயங்க கூடாது. ஈகோவுக்கு இடம் கொடுக்காமல் நல்ல கருத்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். இருவரில் ஒருவரின் கருத்து ஆட்சேபனைக்குரியதாக இருந்தாலும் சகிப்பு தன்மையுடன் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும். பின்பு அதில் இருக்கும் சாதக, பாதகங்களை பக்குவமாக சொல்லி புரிய வைக்க வேண்டும்.
 
 
2. கர்வம்: கணவர் மட்டுமே சம்பாதிக்கும் நபராக இருக்கும் பட்சத்தில் ஆணாதிக்க மனோபாவத்தை வெளிப்படுத்தக்கூடாது. குடும்ப நிதி நிலைமை, வரவு-செலவு விஷயத்தில் மனைவியின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தன் வருமானத்தை எப்படி வேண்டுமானாலும் செலவிடுவேன் என்ற கர்வம் மனதில் எழுந்துவிடக்கூடாது. குடும்பத்தை வழிநடத்தும் மனைவிக்கு குடும்ப பொருளாதாரம் பற்றி தெரிந்திருக்க வேண்டும். மனைவியும் வேலைக்கு செல்லும் பட்சத்தில் தனது வரவு-செலவு கணக்குகளை கணவரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் தனக்கான முக்கியத்துவம் குறையவில்லை என்ற எண்ணம் மனைவியிடத்தில் நிலைத்திருக்க வேண்டும். அப்போதுதான் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக நகரும்.
 
3. புரிதல்: சின்னச்சின்ன விஷயங்களையெல்லாம் பெரிது படுத்தக்கூடாது. கணவரின் பார்வையில் சாதாரணமாக தெரியும் ஒரு விஷயம் மனைவிக்கு பெரியதாக தெரியலாம். அதை கணவர் புரிந்து கொள்ள வேண்டும். மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அந்த விஷயத்தை அணுக வேண்டும். அதை விடுத்து ‘சின்ன சின்ன விஷயங்களையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்கிறாள்’ என்று கூறினால் பிரச்சினைதான் அதிகரிக்கும். உறவில் விரிசல் ஏற்படக்கூடும்.
 
4. மரியாதை: கணவன் - மனைவி இடையே வாக்குவாதம், கருத்து மோதல் ஏற்படும் சமயத்தில் ஒருவர் அமைதி காக்க வேண்டும். இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபடும்போது குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்களை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும். அவர்களை திட்டுதல், அவதூறாக பேசுதல் போன்றவை பிரச்சினையை பல மடங்கு அதிகரிக்க செய்துவிடும்.
 
5. அணுகுமுறை: கணவர் தனது குடும்ப உறுப்பினர்களை போலவே மனைவியின் வீட்டினரையும் மதிக்க வேண்டும். அவர்களுக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும். அதை விடுத்து தன் வீட்டினருக்கு மட்டும் மதிப்பளித்துவிட்டு மனைவியிடம் அதே மரியாதையை கொடுக்கும்படி எதிர்பார்க்கக் கூடாது.
 
6. சுதந்திரம்: கணவன் - மனைவி இருவரிடத்திலும் கருத்து சுதந்திரம் பேணி பாதுகாக்கப்பட வேண்டும். ஒருவர், மற்றொருவர் சுதந்திரத்திற்கு தடையாக இருக்க கூடாது. ‘நான் மட்டும் எப்போது வேண்டுமானாலும் நண்பர்களுடன் ஊர் சுற்றிவிட்டு வருவேன். ஆனால், நீ கூண்டுக்கிளியாக மட்டுமே இருக்க வேண்டும்’ என்று கூறுவது தவறானது.
 
7. நேர மேலாண்மை: கணவன் - மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் காலை வேளையில் அலுவலகத்திற்கு பரபரப்பாக கிளம்ப வேண்டியிருக்கும். அப்போது நேர மேலாண்மையை கடைப்பிடித்தால் மட்டுமே டென்ஷன் இல்லாமல் புறப்பட முடியும். எல்லா வேலைகளையும் மனைவி பார்த்துக்கொள்வார் என்று கருதக்கூடாது. கணவரும் சின்ன சின்ன உதவிகளை செய்வது மனைவிக்கு ஆறுதல் அளிக்கும். வேலைகளை விரைவாக முடிக்க ஏதுவாகும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்