Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

வாழ்க்கையை உற்சாகமாக நகர்த்துவது எப்படி..?

வாழ்க்கையை உற்சாகமாக நகர்த்துவது எப்படி..?

21 வைகாசி 2022 சனி 08:18 | பார்வைகள் : 13393


 உற்சாகம், மன உளைச்சல் இவை இரண்டுமே அலுவலக வாழ்க்கையில் இயல்புதான் என்றாலும், இவை இரண்டிலுமே நம் மனது ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்துவிடக்கூடாது. உற்சாகத்தில் இருந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வெகுநாட்களாகாது. மன உளைச்சல் மற்றும் மன வேதனையில் இருந்து மனம் மீள்வது கொஞ்சம் கடினமாக ஒன்றுதான். அதிலிருந்து மீண்டு வர சில யோசனைகள்...

 
நம்பிக்கை
 
 என்ன நடந்ததோ, நடக்கிறதோ, நடக்க இருக்கிறதோ எல்லாமும் சரிதான் என்ற நேர்மறை எண்ணங்களை விதைத்திடுங்கள். நினைத்தது நடந்தது சரி என்றும், நடக்காததை ரொம்பச் சரி என்றும் நினைத்துக்கொள்ளலாம். இதுவே, நம் பாதி மன உளைச்சலைக் குறைத்துவிடும். கலர் கலர் பேப்பரில் ரிப்பன் கட்டித் தராவிட்டாலும், நமது வாழ்க்கை ஒரு அழகான பரிசுதான்.
 
பயணம்
 
நம்மில் எத்தனை பேர் சூரிய உதயத்தைப் பார்க்கிறோம் என்று நமக்குள்ளே கேள்வி எழுப்பிக்கொள்வோம். விடை நமக்குள்ளாகவே இருக்கட்டும். இனி வாரம் ஒருமுறை ‘சன்ரைஸ்' பார்க்கலாம் என்ற முடிவை எடுங்கள். இதனுடன், பவுர்ணமி நிலவின் அழகையும் ரசித்திடுவோம். மாதம் ஒருமுறை இயற்கை சுற்றுலா செல்லுங்கள். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பிடித்த இடங்களைச் சுற்றிப் பாருங்கள். இப்படி, உங்களின் பயணம் முடிவில்லாமல் தொடங்கட்டும்.
 
மாற்றம்
 
மாற்றங்களைப் பார்க்க அனைவருக்கும் ஆசைதான். அது நம்மிலிருந்து தொடங்குவது இன்னும் சிறப்பானது. விரைவில், நம் மாற்றம் நாம் விரும்பும் மாற்றமாகும். நம் வாழ்வியல் பழக்கங்களிலும், உணவுப் பழக்கங்களிலும் ஆரோக்கியமான மாற்றங்களைக் கொண்டு வருவோம். காபி அடிக்‌ஷனாக இருந்தாலும் சரி, ‘லேட் நைட்’ தூங்குவதாக இருந்தாலும் சரி, முதலில் தீயவற்றைக் கைவிடுவதும், புதிய முடிவை எடுப்பதும் நாமாக இருப்பின், அதுவே மாற்றத்திற்கான முதல் மற்றும் அடிப்படை வெற்றி.
 
அன்பு
 
உற்சாகம், ஊக்கம், ஆற்றல் என என்றென்றும் ‘பவர் பேக்டு’ மனிதராக மாறிவிடுங்கள். உற்சாகமான மனிதர்களைச் சந்திப்போம். உற்சாகத்தைப் பகிர்ந்தளிப்போம். இதோடு மற்றவர் உணர்வையும், அவர்களது சூழ்நிலையையும் அறியவேண்டும். இதுவே நம்மைச் சுற்றி ஒரு அன்பு வட்டத்தை அமைத்துக்கொடுக்கும்.
 
உற்சாகம்
 
உங்களது நேரத்தை கடந்த கால நினைவுகளுக்கும், பிடிக்காத விஷயங்களுக்கும், புறம்பேசுவதற்கும், எதிர்மறை எண்ணங்களுக்கும் வீணடிக்க வேண்டாம். எதிலும், ஒரு நன்மையைத் தேடிக் கண்டுபிடித்து, உங்களை நீங்கள் உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.
 
இயற்கை
 
பிளாஸ்டிக் டூத் பிரஷ்ஷையோ, பிளாஸ்டிக் சீப்பையோ மாற்றுவது கடினம்தான். ஆனால், நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில், சாப்பாட்டு பை, பிளாஸ்டிக் தட்டு ஆகியவற்றை நிச்சயம் மாற்ற முடியும். இப்படி, சின்ன சின்ன மாற்றங்கள் செய்து இயற்கையோடு கொஞ்சம் இணைவோம்.
 
நேரம்
 
பிடித்தவர், உறவினர், நண்பர்கள் என உங்களின் விருப்பப் பட்டியலில் இருப்பவர்களுக்கு உங்களின் நேரமே அவர்களுக்குப் பரிசாக அமையட்டும். பொருட்களைப் பரிசளிப்பதைவிட, உங்களின் நேரத்தைப் பரிசளிப்பது அவர்களுடன் உங்களின் உறவைப் பலப்படுத்தும்.
 
சேமிப்பு
 
பணத்தைச் சேமிக்க எத்தனையோ திட்டங்கள் உண்டு. ஆனால், உங்களின் மகிழ்ச்சியைச் சேமிக்க ஒரு வங்கியைத் தொடங்குங்கள். அதன் பெயர் மகிழ்ச்சி வங்கி. அலுவலகத்தில் நீங்கள் இன்கிரிமென்ட் வாங்கினாலும் சந்தோஷம்தான். அதேபோல பிடித்த ஆடையை அணிந்து, அந்த ஆடையில் உங்கள் தோற்றத்தைக் கண்ணாடியில் பார்ப்பதும் சந்தோஷம்தான். சாக்லேட் வாங்கப் போய் சாக்லேட் கேக் கிடைத்தால், குழந்தை எப்படி குஷியாகுமோ அப்படி உங்கள் மனதை மெருகேற்றிக்கொள்ளுங்கள். குட்டிகுட்டி சந்தோஷங்களைக்கூட பேப்பரில் எழுதி, ஒரு பாக்ஸில் சேமித்து வையுங்கள். மகிழ்ச்சி வங்கியின் கணக்கின் முதல் கோட்டீஸ்வரர் நீங்கள்தான்.
 
மந்திர வார்த்தைகள்
 
நன்றி, மன்னிப்பு இந்த இரண்டு வார்த்தைகளையும் தாராளமாகப் பயன்படுத்துங்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தெரிவித்து விடுங்கள். ‘சின்ன உதவிதானே’ என்றோ ‘சின்ன தப்புத்தானே’ என்றோ அலட்சியம் வேண்டாம். கொஞ்சம் பெருந்தன்மையாக இருப்பது, நிறைய விஷயங்களை சாதிக்கும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்