வறண்ட சருமம் பளபளக்க.....

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 13282
இந்த குளிர் காலத்தில் பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். அதிலும் இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு இன்னும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.
இத்தகையவர்களுக்காகவே கைகொடுக்கிறது ஆரஞ்சு பழமும், தேனும். வறண்ட சருமம் உடையவர்கள் மட்டுமல்லாது எண்ணெய் வடியும் முகத்தை கொண்டவர்களுக்கும் இந்த இரண்டும் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.
வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி மினு மினுப்படையும் என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்களும், டயட்டீசன்களும்.
பொதுவாக மேனி வறண்டுபோகாமல் இருக்க வழக்கமாக கூறப்படும் ஆலோசனை, அதிக அளவில் தண்ணீர் அருந்துவது. அது ஒரு வகையில் பலனளிக்கும் என்றாலும், ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை புரியும் மாயஜாலம் அற்புதமானவை என்கிறார்கள் நிபுணர்கள்.
ஆரஞ்சு பழ சுளைகளை உண்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதனை காயவைத்து பவுடராக்கி தண்ணீருடன் குழைத்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் போயே போச்சு.
அதேப்போன்று அரை மூடி எலுமிச்சை பழச்சாறில் ஒரு டம்ளர் சுடு நீரை கலந்து, அதனுடன் ஓரிரு ஸ்பூன் தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மேனி மினு மினுப்படைவதோடு, உடம்பில் உள்ள தேவையற்ற சதைகள் குறைந்து உடம்பும் "சிக்"கென்று இருக்கும்.
தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை உள்ளவர்கள் தக்காளி பழக்கூழுடன், தயிர் கலந்து தடவி சிறிது நேரம் காயவிட்டு, பின் கழுவி வர தழும்புகள் மறையும். மக்காச்சோள மாவு மற்றும் தயிர் கலந்த கலவையை தினசரி உடம்பில் தடவி, காயவிட்டு பின்னர் கழுவி வர வறண்ட சருமம் மின்னுவதை காணலாம்.
வெளியில் செல்லும்போது வெயில் படாமல் இருக்க கையில் குடை எடுத்து சென்றால் சூரிய கதிர்களின் வெப்பத்தினால் சருமம் வறண்டு போவதை தடுக்க முடியும். மேற்கூறியவற்றில் உங்களுக்கு எளிமையானதை உபயோகித்து வறண்ட சருமத்தை போக்கி பளபளக்கும் மேனியை பெறுங்கள்.