Paristamil Navigation Paristamil advert login

T20 தொடர் - 14 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானை சொந்த மண்ணில் வீழ்த்திய இலங்கை

 T20 தொடர் - 14 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானை சொந்த மண்ணில் வீழ்த்திய இலங்கை

12 தை 2026 திங்கள் 12:45 | பார்வைகள் : 112


14 ஆண்டுகளுக்கு பிறகு, T20 போட்டியில் பாகிஸ்தானை இலங்கை தனது சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது. 
இலங்கைக்கு வருகை தந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 3 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. 
முதல் போட்டியில், பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனையடுத்து, 3வது T20 போட்டி நேற்று தம்புலாவில் நடைபெற்றது.
மழை காரணமாக போட்டி 12 ஓவர்களாக குறைக்கப்பட்டு, தாமதமாக தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 
முதலில் துடுப்பாட்டம் ஆடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ஓட்டங்கள் குவித்தது. 
அதிகபட்சமாக இலங்கை தரப்பில், அணித்தலைவர் தாசுன் ஷனகா 9 பந்துகளில் 34 ஓட்டங்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில், முகமது வசீம் ஜூனியர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
161 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 12 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்கள் குவித்தது. 
அதிகபட்சமாக பாகிஸ்தான் தரப்பில் அணித்தலைவர் சல்மான் ஆஹா, 12 பந்துகளில் 45 ஓட்டங்கள் குவித்தார். இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 
இதன் மூலம் இலங்கை அணி, 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், 3 T20 போட்டிகள் கொண்ட தொடரை இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமன் செய்தன. 
2012 ஆம் ஆண்டுக்கு பிறகு, முதல்முறையாக பாகிஸ்தானை இலங்கை அணி தனது சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தியுள்ளது. 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்