Paristamil Navigation Paristamil advert login

பராசக்தி படம் ரசிகர்களை கவர்ந்ததா ?

பராசக்தி படம்  ரசிகர்களை கவர்ந்ததா ?

11 தை 2026 ஞாயிறு 04:18 | பார்வைகள் : 299


1960களில் மதுரை, சிதம்பரம், பொள்ளாச்சி, சென்னை ஆகிய இடங்களில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள், அவற்றை மாணவர்கள் ஒருங்கிணைத்து போராடிய விதம், அப்போதைய அரசியல் நிலவரம், மொழிப்போருக்கு எதிரான மத்திய, மாநில அரசின் அடக்குமுறைகள், மொழிக்காக செய்த தியாகங்கள் ஆகியவற்றை உண்மையும், கொஞ்சம் கற்பனையும் கலந்து பேசி உள்ள படம் ‛பராசக்தி'.

மதுரையில் கல்லுாரி மாணவராக இருக்கும் சிவகார்த்திகேயன், ‛புறநானுாறு' என்ற இளைஞர் படையை உருவாக்கி, ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார். ஒரு ரயில் எரிப்பு போராட்டத்தில் சில விஷயங்கள் நடக்க, அந்த பாதையில் இருந்து விலகி, ரயில்வேயில் ஊழியராக வேலை செய்கிறார். சிதம்பரத்தில் படிக்கும் அவர் தம்பியான அதர்வா முரளியும் அண்ணனை போல ஹிந்திக்கு எதிராக போராட அவருக்கு என்ன நேர்கிறது. மீண்டும் களத்தில் இறங்கும் சிவகார்த்திகேயன் அப்போதைய பிரதமர் கவனத்தை ஈர்த்து, பொள்ளாச்சிக்கு அவர் வரும்போது ஒரு விஷயத்தை செய்ய நினைக்கிறார். அதை தடுக்கும் போலீஸ் அதிகாரியான ரவி மோகன் என்ன செய்கிறார். பொள்ளாச்சி மாணவர் போராட்டத்தின் முடிவு என்ன? என்பதை தமிழகத்தில் அப்போது நடந்த சில உண்மை சம்பவங்கள் பின்னணியில் விவரிக்கிறது கதை. இதில் அண்ணன், தம்பி பாசம், காதல், பாடல், அரசியல், பழிவாங்கல், சண்டை என பல விஷயங்களை கலந்து டாக்குமென்ட்ரி படமாக அமைந்துவிடாதபடி, கமர்ஷியலாக இயக்கியிருக்கிறார் சுதா கொங்கரா.

செழியன் என்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டக்காராக, பாசக்கார அண்ணனாக, நல்ல நண்பனாக, அழகான காதலனாக தனது பங்கை சிறப்பாக செய்து இருக்கிறார் சிவகார்த்திகேயன். அதர்வாவுக்கும், அவருக்குமான அந்த அண்ணன், தம்பி பாசம் நன்றாக வொர்க் அவுட் ஆகி இருக்கிறது. பக்கத்து வீட்டு எம்பி மகளான ஸ்ரீலீலாவை காதலிக்கிறார். இவர்களின் அடி அலையே, ரத்னமாலா பாடல்கள், பாடல்காட்சிகள் அவ்வளவு அழகு. தமிழை காக்க, ஹிந்தி திணிப்புக்கு எதிரான அவரின் வசனங்கள், கோப போராட்டங்கள், ரவி மோகன் உடனான சண்டைக்காட்சிகள் சிறப்பு. ஆனாலும், கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம். டில்லி காட்சிகளிலும் சினிமாதனத்தை குறைத்து இருக்கலாம்.

வில்லனாக அறிமுகம் ஆகியிருக்கிற ரவி மோகனின் கேரக்டர் பின்னணி, சைலண்டாக அவர் செய்கிற வில்லத்தனம், அந்த பழிவாங்கல் பார்வை, ஸ்டைலிசான தோற்றம் பிரமாதம். அவர் வில்லனாகவும் ஜெயித்து இருக்கிறார்.

ஹீரோ தம்பியாக வருகிற அதர்வா முரளி இடைவேளை வரை தான் வருகிறார். ஆனாலும், அவரின் தோற்றம், அந்த ஹேர்ஸ்டைல், துறுதுறுப்பு படத்தை அழகாக்குகிறது.

தெலுங்கு பெண்ணாக இருந்தாலும், ஹிந்தி எதிர்ப்பில் தீவிரமாக இருக்கிற ஸ்ரீலீலா பார்ப்பதற்கு அழகு. மாணவர்களுக்கு உதவ அவர் செய்கிற செயல்களும், கிளைமாக்ஸ் நடிப்பு இன்னும் அழகு.

இவர்களை தவிர, பாட்டியாக வரும் கொலப்புளி லீலா, மறைந்த முதல்வர் அண்ணாதுரையாக வரும் சேத்தன், முன்னாள் முதல்வர் பக்தவச்சலமாக வரும் பிரகாஷ், தீவிர மொழி போராளிகளாக வரும் மாணவர்களும் பக்காவாக பொருந்தி இருக்கிறார்கள். இரண்டு சீன்களில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியாக வருகிறார் குரு சோமசுந்தரம். கிளைமாக்சில் கவுரவ வேடத்தில் தெலுங்கு நடிகர் ராணாவும், மலையாள நடிகர் பசிலும் வரும் சீன்கள் செம எனர்ஜி. நடிகர்கள் தேர்வில், அவர்களை நடிக்க வைத்ததில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார் இயக்குனர்.

சுதா, அர்ஜூன் நடேசன் வசனங்கள், மாணவர் போராட்டங்களின் வீரியம், அவர்கள் கூடும் திட்டம், கடைசியில் மற்ற மாநில மாணவர்கள் ஒருங்கிணையும் விதம், அவர்கள் கோபம் ஆகியவை சினிமாவை தாண்டி, நல்ல பதிவாக இருக்கிறது. ஜி.வி.பிரகாசின் பாடல்கள், பின்னணி இசை விறுவிறுப்பாக்குகிறது. அதேபோல் அந்தக்கால தமிழகத்தை சூப்பராக காண்பித்து இருக்கிறது ரவி கே சந்திரன் கேமரா. அண்ணாதுரையின் கலை இயக்கத்துக்கு விருது கொடுக்கலாம். தொழில்நுட்ப ரீதியாக பராசக்தி வலுவாக இருக்கிறது.

ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் பின்னணி, அப்போது நடத்த அடங்குமுறைகள், மாணவர்கள் போராடிய, ஒருங்கிணைந்த விதம், அரசியல் சிக்கல்கள், குறிப்பாக, சிதம்பரத்தில், பொள்ளாச்சியில் நடந்த போராட்டங்களின் பின்னணியை, பல தகவல்களை திரட்டி அந்த கால சம்பவங்களை ஓரளவு அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறார் இயக்குனர். திமுவுக்கு சில சீன்களில் ஆதரவு, பல சீன்களில் காங்கிரசுக்கு எதிர்ப்பு என அரசியல் பார்வை இருக்கிறது. நீங்க செய்கிற செயல்களுக்கு இனி எந்த காலத்திலும் தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாது என்ற காங்கிரசுக்கு எதிரான அரசியல் வசனம் கவனிக்கப்படுகிறது. அப்போது மாநிலத்தை, மத்தியில் ஆளும் அரசுகளின் மனநிலை, மாணவர்களுக்கு எதிராக அவர்கள் எடுத்த நிலைப்பாடு, தமிழுக்கு எதிரான, ஹிந்திக்கு ஆதரவான அரசியல் விஷயங்களையும் சொல்லியிருக்கிறார். இன்றும் பலருக்கும் தெரியாத பொள்ளாச்சி போராட்டத்தில் நடந்த விஷயங்களை, ரத்தமும், சதையுமாக உணர்வு பூர்வமாக காண்பித்து இருப்பது புதுசு. இப்போதைய திமுகவினருக்கே தெரியாத பல விஷயங்களை சொல்லியிருப்பது புதுசு

அதேசமயம், போராட்டங்களை விரிவாக காண்பித்த இயக்குனர், ஹிந்தியால் என்ன பாதிப்பு, எப்படிப்பட்ட பாதிப்பு என்பதை இன்னும் பல உதாரணங்களுடன் அழுத்தமாக சொல்லவில்லை. சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா காதல் காட்சிகள் படத்துக்கு கொஞ்சம் வேகத்தடை. இந்தியாவையே வியக்க வைத்த இந்திரா கேரக்டரை ஏதோ சாதாரண அரசியல்வாதி மாதிரி காண்பித்தது ஏனோ? மற்ற மொழி மாணவர்களும் தமிழக, ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பெற்றார்கள் என்பதில் சினிமாதனம் அதிகம். கிளைமாக்ஸ் காட்சி இன்னமும் உணர்வுப்பூர்வமாக எடுத்து இருக்கலாம். அந்த கிளைமாக்ஸ் ரயில் சண்டை ஒட்டவில்லை. இன்றைய இளம் தலைமுறை, ஏன் நடுத்தர வயதினருக்கு கூட ஹிந்தி போராட்டம், அந்த கால அரசியல், ஹிந்தியால் வந்த பாதிப்பு, மும்மொழி கொள்கை இதெல்லாம் அதிகம் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. அவர்களை இந்த கதை எந்தளவுக்கு இம்ப்ரஸ் செய்யும் என தெரியவில்லை. சிவகார்த்திகேயன் படங்களை குழந்தைகள் ரசிப்பார்கள், இதில் சொல்லப்பட்ட விஷயத்தை அவர்கள் புரிய வாய்ப்பில்லை. பெண்கள், இளைஞர்களை ஈர்க்கும் கமர்ஷியல் சீன், காமெடி இதெல்லாம் இல்லாத மொழிப்போராட்டம் பற்றி பதிவாக இருக்கிறது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மொழி உணர்வு, அந்த தியாகம் கனக்ட் ஆனால் பராசக்தி வெற்றி படமாக அமையும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்