Paristamil Navigation Paristamil advert login

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ! எப்போது, எங்கு கரையை கடக்கும்?

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ! எப்போது, எங்கு கரையை கடக்கும்?

9 தை 2026 வெள்ளி 05:37 | பார்வைகள் : 161


வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகரும் வேகம் அதிகரித்துள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் - பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் - பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவியது.

இது, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று. மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை தென்மேற்கு வங்கக்கடல் - பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில், ஹம்பாந்தோட்டைக்கு (இலங்கை) கிழக்கு – தென்கிழக்கே சுமார் 410 கிலோ மீட்டர் தொலைவிலும், மட்டகிளப்பிற்கு (இலங்கை) கிழக்கு – தென்கிழக்கே 420 கிலோ மீட்டர் தொலைவிலும், திரிகோணமலைக்கு (இலங்கை) தென்கிழக்கே 520 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 810 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே 980 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது, அடுத்த 36 மணி நேரத்திற்கு, மேற்கு-வடமேற்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வழியாக நகர்ந்து, இலங்கை கடலோரப் பகுதிகளில், ஹம்பாந்தோட்டை (இலங்கை) மற்றும் கல்முனைக்கு (இலங்கை) இடையே நாளை (09-01-2026) மாலை அல்லது இரவு கரையை கடக்கக்கூடும். தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

இந்நிலையில், வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகரும் வேகம் தற்போது அதிகரித்துள்ளது. அதன்படி 13 கி.மீ. வேகத்தில் இருந்து தற்போது 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே 940 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டை நெருங்காது. நாளை (09.01.2026) இரவு இலங்கையில் கரையை கடக்கும்.” என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்