Paristamil Navigation Paristamil advert login

ஆட்சியில் பங்கு கேட்பது ஏன்? தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் பதில்

ஆட்சியில் பங்கு கேட்பது ஏன்? தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் பதில்

7 தை 2026 புதன் 05:20 | பார்வைகள் : 368


சட்டசபை தேர்தல் என்பதால்தான் ஆட்சியில் பங்கு கேட்கிறோம்' என, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதிக்கு, காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறுமா அல்லது வெளியேறுமா என்ற குழப்பம் உருவாகி உள்ளது. தி.மு.க., கூட்டணியில் நீடிக்க வேண்டுமானால், 41 தொகுதிகள், மூன்று அமைச்சர்கள், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவி வேண்டும் என, காங்கிரஸ் டில்லி மேலிடம் கறார் காட்டி வருகிறது.

நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க., உடன் கூட்டணி அமைக்கவும், காங்கிரஸ் ரகசிய பேச்சு நடத்தி வருகிறது. ராகுலுக்கு நெருக்கமானவராக கருதப்படும் பிரவீன் சக்கரவர்த்தி, விஜயை சந்தித்து பேசினார். அத்துடன், தமிழக அரசை விமர்சித்தும், உ.பி., அரசுடன் ஒப்பிட்டும் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டார்.

அதைத் தொடர்ந்து, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் அவரை கடுமையாக விமர்சித்தனர். அதற்கு மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்தார். 'கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் யாராலும் வெற்றி பெற முடியாது' என்ற கருத்தை வெளியிட்டார்.

இதற்கு பதில் அளித்த தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, 'காங்கிரசில் இருந்து யார் பேசினாலும், தி.மு.க.,வில் இருந்து யார் பேசினாலும் அது தனிப்பட்ட கருத்துதான். லோக்சபா தேர்தல் முடிந்துவிட்டது என்பதால் மாணிக்கம் தாகூர் பேசுகிறார். எந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வும் இது போன்று பேசவில்லை. கடந்த 2019ம் ஆண்டு பார்முலாவின்படி நாங்கள் நடக்கிறோம். இந்த தேர்தலிலும் இரு சகோதரர்கள் எடுக்கும் முடிவுதான். எதுவென்றாலும், அது முதல்வர் ஸ்டாலினும், ராகுலும் இறுதி முடிவு எடுப்பர்' என்றார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆட்சியில் பங்கு கேட்டு காங்கிரஸ் சட்டசபை தலைவர் ராஜேஷ்குமார் பேசிய பதிவுகளை, மாணிக்கம் தாகூர் தன் 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டார். அத்துடன், ஆர்.எஸ்.பாரதியின் கருத்துக்கும் பதிலடி கொடுத்துள்ளார். அதில், 'லோக்சபா தேர்தல் முடிந்து விட்டது.

ஆட்சியில் பங்கு குறித்து எம்.எல்.ஏ., யாரும் கேட்கவில்லை என்பது சரியான கூற்று அல்ல. லோக்சபா தேர்தலில், மாநில ஆட்சியில் பங்கு கேட்பது பொருத்தமற்றது. பாடத்திட்டத்திற்கு வெளியே கேள்வி கேட்பது போல் உள்ளது. சட்டசபை தேர்தல் என்பதால் தான், ராஜேஷ்குமார் போன்றோர் ஆட்சியில் பங்கு கேட்கின்றனர்' எனக் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, அவரை தி.மு.க.,வினர் கடுமையாக விமர்சிக்கத் துவங்கி உள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்