Paristamil Navigation Paristamil advert login

திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் வழக்கு: இரு நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு

திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் வழக்கு: இரு நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு

6 தை 2026 செவ்வாய் 13:34 | பார்வைகள் : 117


மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான உத்தரவை, இரு நீதிபதிகள் அமர்வு இன்று பிறப்பிக்கிறது.

திருப்பரங்குன்றம் மலை தர்காவில் நாளை சந்தனக்கூடு உருஸ் திருவிழா நடக்கிறது. இதில் ஆடு, கோழி பலியிடக் கூடாது. விழாவில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில நிபந்தனைகள் விதித்து தனி நீதிபதி எஸ்.ஸ்ரீமதி ஜன., 2ல் உத்தரவிட்டார்.

தர்கா நிர்வாகம் தரப்பு வழக்கறிஞர் பிரபு ராஜதுரை, நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் நேற்று முறையிட்டதாவது: சந்தனக்கூடு விழாவில் அதிகம் பேர் பங்கேற்பது வழக்கம்; 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என கட்டுப்பாடு விதித்தது ஏற்புடையதல்ல. எங்கள் தரப்பில் போதிய விளக்கமளிக்க தனி நீதிபதி வாய்ப்பளிக்கவில்லை. 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்ய தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றார்.

நீதிபதிகள்: அவசர வழக்காக விசாரிக்க வாய்ப்பில்லை. ஆடு, கோழி பலியிடும் விவகாரம் தொடர்பான வழக்கில் ஏற்கனவே மூன்று நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது தர்கா தரப்பில் கோரப்படும் நிவாரணம் தொடர்பாக தீபத்துாண் வழக்கில் விவாதிக்கப்பட்டுள்ளது. அதில் இன்று ( ஜன., 6) இந்த அமர்வு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளது. அதன் முடிவைப் பொறுத்து தர்கா நிர்வாகம் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் விசாரிக்கப்படும். இவ்வாறு தெரிவித்தனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு எதிராக, தமிழக அரசு மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, இதே இரு நீதிபதிகள் அமர்வில் டிச., 18 ல் முடிந்தது. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை, 10:30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது. சந்தனக்கூடு உருஸ் விழா இன்றிரவு, 10:30 மணி முதல் நடக்கவுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்