Paristamil Navigation Paristamil advert login

கருத்து வேறுபாடு ஜனநாயகத்தின் அடிப்படை; துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன்

கருத்து வேறுபாடு ஜனநாயகத்தின் அடிப்படை; துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன்

4 தை 2026 ஞாயிறு 12:18 | பார்வைகள் : 943


பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்க வேண்டியது, ஜனநாயகத்தின் அடிப்படை. கருத்து வேறுபாடுகள் இல்லையென்றால், ஜனநாயகமே இருக்காது,'' என துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனை கவுரவிக்கும் விழா நடந்தது. இதில், அவர் பேசியதாவது: பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்க வேண்டியது, ஜனநாயகத்தின் அடிப்படை. கருத்து வேறுபாடுகள் இல்லையென்றால், ஜனநாயகமே இருக்காது. கருத்து வேறுபாடுகள் அவசியம். ஆனால், அவை கட்டுப்பாடாகவும், சமூக நலனை முன்னிறுத்தியும் இருக்க வேண்டும். எதிர்ப்பு என்பதற்காகவே எதிர்ப்பது சரியான வழிமுறை அல்ல.

நம் அணுகுமுறை எப்போதும் நேர்மையானதாகவும், சமூகத்திற்கு பயன் தருவதாகவும் இருக்க வேண்டும். நம் கருத்துக்களை வெளிப்படுத்துவதுடன், பிறரின் கருத்துக்களையும், பொறுமையுடன் கேட்க வேண்டும். இறுதியாக ஒரு முடிவு எடுக்கப்பட்டால், அதை ஏற்று நடைமுறைப்படுத்த, அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். குழு மனப்பான்மை, அணி மனப்பான்மை என, இரண்டு விதமான மனப்பான்மைகள் உள்ளன. இரண்டிற்கும் இடையிலான வேறுபாடு சிறியது; ஆனால் அதன் தாக்கம் மிகப்பெரியது.

குழு மனப்பான்மை, சில தனிநபர்களின் ஆசைகளுக்கே சேவை செய்யும். ஆனால், அணி மனப்பான்மை, தனிநபர் பங்களிப்புகளை அங்கீகரித்தபடியே, சமூகத்தின் மொத்த நலனுக்காக செயல்படும். பதவியும், பணமும் அதிகரிக்கும்போது, பணிவும் அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்

விழாவில் கவர்னர் ரவி, மத்திய அமைச்சர் முருகன், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், இசையமைப்பாளர் இளையராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்