Paristamil Navigation Paristamil advert login

ம.செ.,க்கள் வேலை செய்யவில்லை என பழனிசாமி திட்டு!

ம.செ.,க்கள் வேலை செய்யவில்லை என பழனிசாமி திட்டு!

1 தை 2026 வியாழன் 10:15 | பார்வைகள் : 137


பா.ஜ.,வுடனான கூட்டணி பற்றி கிராம மக்களுக்கு தெரியவே இல்லை. ஊர் ஊராக, வீடு வீடாகச் சென்று, மக்களுக்கு நம் சாதனைகளை எடுத்துச் சொல்வதில் என்ன பிரச்னை? நீங்கள் யாரும் வேலையே செய்வதில்லை' என, அ.தி.மு.க., மாவட்டச் செயலர் களுக்கு, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி, 'டோஸ்' விட்டார்.

தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்க, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று, அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், பழனிசாமி தலைமையில் நடந்தது.

கட்சியில் உள்ள 82 மாவட்டச் செயலர்களுக்கும் பூங்கொத்துகள் வழங்கி, சால்வை அணிவித்து, புத்தாண்டு வாழ்த்து கூறினார் பழனிசாமி.

பூத் கமிட்டி


அதை தொடர்ந்து நடந்த கூட்டத்தில், பிரசாரத்தை தீவிரப்படுத்துவது, கூட்டணியை வலுப் படுத்துவது, வாக்காளர்கள் சேர்ப்பு, காலியாக உள்ள பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

பின், பழனிசாமி பேசியுள்ளதாவது:

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. சில மாவட்டங்களில், பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் சிறப்பாக முடிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் விடுபட்டுள்ள பூத் கமிட்டி நிர்வாகிகளை விரைவில் நியமிக்க வேண்டும்.

தேர்தல் வெற்றிக்கு அடித்தளமே பூத் கமிட்டி நிர்வாகிகள் உழைப்பு என்பதை நாம் மறந்து விடக்கூடாது. தேர்தல் நெருங்குவதால், களப்பணிக்கு தயாராக இருக்க வேண்டும்.

சமூக வலைதளங்கள் வாயிலாக, தேர்தல் பிரசாரத்தை துவக்க வேண்டும். அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வாக்காளர் சேர்ப்பு பணியில் மெத்தனமாக இருந்து விடக்கூடாது.

கள்ள ஓட்டுகள் போடுவதில், தி.மு.க.,வினர் வல்லவர்கள்; கள்ள ஓட்டு எப்படி போட வேண்டும் என்பதில் கைதேர்ந்தவர்கள். எப்படியாவது தேர்தல் அதிகாரிகளின் கண்களில் மண்ணை துாவி, கள்ள ஓட்டு போட்டு விடுவர். அதற்கு இடம் அளிக்காமல், விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும்.

முறியடிப்பு


வெளியூரில் வசிப்பவர்கள், வீடு மாறிய வாக்காளர்களை எல்லாம் சேர்ப்பதில் தி.மு.க.,வினர் ஆர்வம் காட்டுவர்; அதை முறியடிக்க வேண்டும். அ.தி.மு.க.,வின் ஒரு ஓட்டு கூட விடுபடக் கூடாது.

கட்சியின் மா.செ.,வாக இருப்போர் ஒவ்வொருவரும், கிராமங்கள் தோறும் மக்களை தேடிச் செல்ல வேண்டும். மக்களை சந்தித்து, அவர்கள் பிரச்னைகளை கேட்க வேண்டும். முடிந்தால், பிரச்னைகள் தீர உதவியாக இருக்க வேண்டும்.

தெருமுனை கூட்டங்கள்


இதெல்லாம் செய்யாததால் தான், இன்று வரை கிராம மக்களிடம், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி சென்று சேரவில்லை. அதனால், சட்டசபை தொகுதி வாரியாக மக்களை சந்தியுங்கள்; தெருமுனை கூட்டங்கள் நடத்துங்கள்.

சமூக வலைதளங்கள் வாயிலாக பிரசாரத்தை துவக்குங்கள். தேர்தல் நேரம் என்பதால், எந்த சர்ச்சையிலும், பிரச்னையிலும் சிக்கிக் கொள்ளாதீர்கள் .

கூட்டணி பற்றி யாரும் கவலையோ, குழப்பமோ அடைய வேண்டாம். இம்மாத இறுதியில், மேலும் சில கட்சிகள் கூட்டணியில் சேரும். அதனால், நீங்கள் யாரும் கூட்டணி பற்றி பேச வேண்டாம்; நானே பேசிக் கொள்கிறேன்.

அரசு ஊழியர்கள் முதல் அனைத்து தரப்பு மக்களும், அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக இருக்கின்றனர். நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத, திறனற்ற ஸ்டாலினிடம் சிக்கி, தமிழகம் தவித்தது போதும் என மக்கள் பேச துவங்கி விட்டனர்.

விடியா ஆட்சியிடம் இருந்து தமிழகம் விடுதலை பெறும்; அ.தி.மு.க., ஆட்சி மலரும். எனவே, தேர்தல் பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு பழனிசாமி பேசியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்