Paristamil Navigation Paristamil advert login

பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு: ரொக்க பணம் குறித்த தகவல் இல்லை

பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு: ரொக்க பணம் குறித்த தகவல் இல்லை

1 தை 2026 வியாழன் 08:09 | பார்வைகள் : 153


பொங்கல் பண்டிகையையொட்டி, 2.22 கோடி ரேஷன் அரிசி கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு நேற்று அறிவித்தது. இதில், தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை இடம்பெற்றுள்ள நிலையில், ரொக்கப் பணம் குறித்த தகவல் இல்லை.

ரேஷன் கார்டுதாரர் களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பை அரசு வழங்குகிறது. கடந்த ஆண்டு பொங்கலுக்கு, கார்டுதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதில், பணம் இடம்பெறவில்லை.

இரு வாரங்கள் இந்த ஆண்டு ஏப்ரலில், தமிழக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. எனவே, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு, 3,000 ரூபாய் ரொக்கப் பணத்துடன், 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவை வழங்க, அரசு முடிவு செய்தது.

அதேசமயம், 'பொங்கல் பரிசாக, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன .

இந்நிலையில், ஆங்கிலப் புத்தாண்டு இன்று பிறந்த நிலையில், பொங்கலுக்கு இரு வாரங்களே உள்ளன. எனவே, சர்க்கரை, பச்சரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணியில், தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் ஈடுபட்டுள்ளது.

அதேசமயம், கரும்பு கொள்முதல் செய்ய, நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து, 2.22 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான அரசாணையை, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை செயலர் சத்யபிரதா சாஹு நேற்று பிறப்பித்துள்ளார். அதில், ரொக்கப் பணம் குறித்த தகவல் இல்லை.

அரசாணையில், 'பொங்கல் பரிசு தொகுப்பாக, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு நீள கரும்பு ஆகியவற்றை, மொத்த செலவினத் தொகை 248.66 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்து, ரேஷன் கடைகள் வாயிலாக, 2.22 கோடி கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்ய, நிதி ஒதுக்கி அரசு ஆணையிடுகிறது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை
இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பொங்கல் பரிசில், தலா ஒரு கார்டுதாருக்கு, 3,000 ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டது. கடைசி நேரத்தில், 5,000 ரூபாய் வழங்கலாமா என, அரசு தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

அந்த தொகையை வழங்கினால் ஏற்படும் செலவை எப்படி ஈடு செய்வது என, நிதித்துறை ஆலோசித்து வருகிறது. பொங்கல் பரிசு தொகுப்பை, கார்டுதாரர்களுக்கு வரும் 8ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். எனவே, ரொக்கப் பணம் குறித்து முடிவு செய்து, தனி அரசாணை வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்