Paristamil Navigation Paristamil advert login

சளி, இருமல், காய்ச்சலையும் போக்கும் கோழி மிளகு சூப்..

சளி, இருமல், காய்ச்சலையும் போக்கும் கோழி மிளகு சூப்..

26 கார்த்திகை 2025 புதன் 15:32 | பார்வைகள் : 105


அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் போன்ற உடல்நல பிரச்சினைகளை சந்திக்கும் இந்த குளிர் காலத்தில் சூடான கோழிக்கால் மிளகு சூப் வைத்து பருகுவது உடலை கதகதப்பாக வைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலமாக தொற்றுகள் நம்மை நெருங்காத வண்ணம் பாதுகாத்துக் கொள்ளலாம்.

மிளகு, மஞ்சள், பூண்டு மற்றும் மேலும் சில மசாலா பொருட்களுடன் தயார் செய்யப்படும் இந்த சுவையான மற்றும் மணமான சூப் பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு ஒரு இயற்கை தீர்வாக அமைகிறது. பல வீடுகளில் இது ரசம் போல தயாரிக்கப்படுகிறது.

மூக்கடைப்பு, தொண்டை வலி மற்றும் குளிர் காலத்தில் அனைவரும் சந்திக்கும் வழக்கமான சோர்வில் இருந்து உடனடி நிவாரணம் பெறுவதற்கு இது ஒரு அற்புதமான தீர்வு. எனவே நம்முடைய வீட்டில் கோழிக்கால் மிளகு சூப் எப்படி தயார் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: 
மசாலா செய்வதற்கு: 
1 டேபிள் ஸ்பூன் கருப்பு மிளகு
2 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகள்
1 டீஸ்பூன் சோம்பு
2 வர மிளகாய்
1/4 டீஸ்பூன் சீரகம்
ஒரு கொத்து கருவேப்பிலை
2 தக்காளி
6 பல் பூண்டு
சிக்கனை சமைப்பதற்கு:
500 கிராம் சிக்கன் எலும்பு
3/4 டீஸ்பூன் மஞ்சள் பொடி
3/4 டீஸ்பூன் உப்பு
3 டம்ளர் தண்ணீர்
தேவையான பிற பொருட்கள்: 
2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
1/4 டீஸ்பூன் கடுகு
1/4 டீஸ்பூன் சீரகம்
ஒரு கொத்து கறிவேப்பிலை
1/4 கப் உரித்த சின்ன வெங்காயம்
1 கப் தேங்காய் பால்
ஒரு கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள்

செய்முறை: 
முதலில் மசாலா தயாரிப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் குறைவான தீயில் கடாயில் சேர்த்து பொன்னிறமாக வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

பிறகு அதனை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனோடு தக்காளி மற்றும் பூண்டு சேர்த்து, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சாந்தாக அரைத்துக் கொள்ளவும்.

இப்போது சிக்கனை நன்றாக சுத்தம் செய்து ஒரு பிரஷர் குக்கரில் சேர்க்கவும். அதனோடு மஞ்சள் பொடி, உப்பு மற்றும் நாம் அரைத்து வைத்த மசாலா சாந்தை சேர்த்து 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி குறைந்த வெப்பத்தில் 20 நிமிடங்களுக்கு சமைக்கவும்.

பிரஷர் அடங்கியதும் சிக்கனில் உள்ள எலும்புகளை தனியாக பிரித்து எடுக்கவும்.

இப்போது ஒரு கடாயில் நல்லெண்ணையை சூடாக்கி கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

அடுத்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் எடுத்து வைத்த சிக்கனை சேர்த்து கலந்து விட்டு, சிக்கன் வேக வைத்த அந்த மசாலா தண்ணீர் மற்றும் தேங்காய் பாலை ஊற்றவும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து கடைசியாக ஒரு கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
இதனை சூடான சாதத்தோடு சேர்த்து சாப்பிடலாம் அல்லது அப்படியே சூப்பாகவும் பருகலாம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்