Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

ரூ.217 கோடி தருகிறேன் என்னை விட்டுவிடுங்கள்: இடைத்தரகர் சுகேஷ் மனு

ரூ.217 கோடி தருகிறேன் என்னை விட்டுவிடுங்கள்: இடைத்தரகர் சுகேஷ் மனு

29 மார்கழி 2025 திங்கள் 12:24 | பார்வைகள் : 167


தொழிலதிபர்களின் மனைவியரிடம் இருந்து, 200 கோடி ரூபாய் பறித்த வழக்கில், 217 கோடி ரூபாய் வழங்க தயாராக இருப்பதாக மோசடி வழக்குகளில் சிறையில் உள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், டில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பல மோசடிகளில் ஈடுபட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தவர், கேரளாவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர். டில்லியில் இடைத்தரகராக செயல்பட்டு, அதிகார வர்த்தகத்தை கையில் வைத்துக் கொண்டு சொகுசாக வாழ்ந்து வந்தவர்.

அ.தி.மு.க.,வுக்கு இரட்டை இலை சின்னத்தை மீட்டுத் தருவதாக, கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்தபோது, மிகவும் பிரபலமடைந்தார். இவர் மீது பல மோசடி வழக்குகள் உள்ளன. தற்போது இவர் சிறையில் உள்ளார்.

இவர், பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசை காதலிப்பதாக கூறி வருகிறார். இது தவிர, அவருக்கு டில்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சொகுசு பங்களா, விலை உயர்ந்த வாட்சுகள் போன்ற ஆடம்பரப் பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், முன்னணி மருந்து நிறுவனமான, 'ரான்பாக்சி'யின் உரிமையாளர்களான சிவந்தர் சிங் மற்றும் மல்விந்தர் சிங், மோசடி வழக்கு ஒன்றில் சிறை சென்றனர். அவர்களுடைய மனைவியரை தொடர்பு கொண்டு, வழக்கில் இருந்து விடுவிக்க உதவுவதாக சுகேஷ் கூறியுள்ளார். இதற்காக அவர்களிடம் இருந்து, 200 கோடி ரூபாய் வரை பறித்து மோசடி செய்ததாக சுகேஷ் மீது வழக்கு உள்ளது.

இந்நிலையில், இவ்வழக்கில் புகார்தாரர் சிவந்தர் சிங்கின் மனைவி அதிதி சிங்கிற்கு, 217 கோடி ரூபாய் வழங்க தயாராக இருப்பதாக சுகேஷ் சந்திரசேகர் தரப்பில் அவரது வழக்கறிஞர் அனந்த் மாலிக், டில்லி பட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவில், 'சுகேஷ் சந்திரசேகரின் உரிமைகளுக்கு பாதிப்பின்றி இந்த சமரசம் செய்யப்படுகிறது. இது, குற்றத்தை ஒப்புக்கொள்வதாகாது' என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு, அடுத்த ஆண்டு ஜனவரி 3ல் விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனவும் நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்