Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

அயர்லாந்தை உலுக்கும் மரணக் காப்பகம் - 11 குழந்தைகளின் உடலங்கள் மீட்பு

அயர்லாந்தை உலுக்கும் மரணக் காப்பகம் - 11 குழந்தைகளின் உடலங்கள் மீட்பு

27 மார்கழி 2025 சனி 06:06 | பார்வைகள் : 687


அயர்லாந்தின் டூவாம் நகரில் உள்ள முன்னாள் தாய்-சேய் இல்லத்தின் வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியின் போது, மேலும் 11 குழந்தைகளின் உடலங்கள் அடங்கிய புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அந்நாட்டின் இருண்ட வரலாற்றை மீண்டும் ஒருமுறை உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னர் இதே காப்பக வளாகத்திலிருந்த பழைய கழிவுநீர் தொட்டி ஒன்றிற்குள் இருந்து 796 குழந்தைகளின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.

அவர்களுக்கு முறையான இறுதிச் சடங்குகளோ அல்லது கல்லறை அடையாளங்களோ செய்யப்பட்டிருக்கவில்லை. தற்போது மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சியின் போது, ஏற்கனவே உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து 15 மீட்டர் தொலைவில் மேலும் 11 குழந்தைகளின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவை பெட்டிகளில் அடைக்கப்பட்டு, நிலத்தடியில் ஒரு மீட்டருக்கும் குறைவான ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்தன.

இங்கு புதைக்கப்பட்டவர்கள் பிறந்த குழந்தைகள் முதல் 9 வயது வரையிலான சிறுவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

டப்ளின் நகரிலிருந்து 220 கிலோமீட்டர் மேற்கே அமைந்துள்ள இந்த காப்பகம் 1925 முதல் 1961 வரை செயற்பட்டு வந்தது.

அந்த காலப்பகுதியில், திருமணத்திற்குப் புறம்பாகப் பிள்ளைகளைப் பெற்றெடுத்த தாய்மார்கள், சமூகத்தாலும் குடும்பத்தாலும் ஓரங்கட்டப்பட்டு இந்த காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

பெரும்பாலும் அவர்கள் வலுக்கட்டாயமாகத் தத்தமது குழந்தைகளிடமிருந்து பிரிக்கப்பட்டனர். கேத்தரின் கோர்லஸ் (Catherine Corless) என்ற வரலாற்றாசிரியர் 2014 ஆம் ஆண்டு வெளியிட்ட திடுக்கிடும் தகவல்களுக்குப் பின்னரே இது குறித்த உத்தியோகபூர்வ விசாரணைகள் ஆரம்பமானது. அயர்லாந்து முழுவதும் இது போன்ற 18 இல்லங்கள் இருந்துள்ளன.

76 ஆண்டுகளில் சுமார் 56,000 பெண்கள் மற்றும் 57,000 குழந்தைகள் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். நாடு முழுவதும் உள்ள இவ்வாறான இல்லங்களில் சுமார் 9,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அயர்லாந்து வரலாற்றின் "மிகவும் இருண்ட மற்றும் அருவருப்பான இரகசியம்" என வர்ணிக்கப்படும் இந்தச் சம்பவம் குறித்து தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள அகழ்வாராய்ச்சிப் பணிகள் சுமார் 2 ஆண்டுகள் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்