Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

நசுக்குறாங்க; பிசுக்குறாங்க! : தமிழக காங்.,கட்சியினர் கதறல்

நசுக்குறாங்க; பிசுக்குறாங்க! : தமிழக காங்.,கட்சியினர் கதறல்

27 மார்கழி 2025 சனி 12:34 | பார்வைகள் : 139


மத்தியில் ஆளும் பா.ஜ.,வோ, நம்மை எழ விடாமல் நசுக்கி அழிக்கத் துடிக்கிறது; மாநிலத்தில் ஆளும் தி.மு.க.,வோ, நம்மை வளர விடாமல் கசக்கி பிழியப் பார்க்கிறது' என, தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கருக்கு, அக்கட்சியில் உருவாகியுள்ள புதிய கோஷ்டி கடிதம் எழுதியுள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும் என, டில்லி மேலிடம் விரும்புகிறது. ஆட்சியில் பங்கு மற்றும் அதிக தொகுதிகள் வாயிலாக அதற்கு வித்திட முடியும் என்பதால், தி.மு.க., தலைமைக்கு அழுத்தம் கொடுக்கிறது.

இதற்காக, காங்கிரஸ் சார்பில் ஐவர் குழு அமைக்கப்பட்டு, ஆளும் தி.மு.க.,வுடன் பேச்சு நடத்தப்பட்டது.

கட்டாயம்

'தேர்தல் தேதி அறிவித்த பின், நாங்களும் குழு அமைப்போம்; அப்போது வாருங்கள்; இந்த விஷயங்களை எல்லாம் பேசலாம்' என கூறி, அவர்களை தி.மு.க., தலைமை அனுப்பி வைத்தது. இது, தி.மு.க.,வின் தேர்தல் தந்திரம் என காங்கிரஸ் தலைமை கருதுகிறது.

அதாவது, தேர்தல் தேதி அறிவித்து விட்டால், தி.மு.க., சொல்கிற எண்ணிக்கையையும், தருகிற தொகுதிகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் காங்கிரசுக்கு ஏற்படும்.

தங்களுக்கு செல்வாக்கு இல்லாத தொகுதிகளை காங்கிரசுக்கு தள்ளிவிட்டு, கூட்டணி உடன்பாட்டை முடித்துக் கொள்ளும் திட்டம் என்றும் காங்கிரஸ் தலைமை நம்புகிறது.

எனவே தான், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன், தொகுதிகள் எண்ணிக்கை, ஆட்சியில் பங்கு குறித்து, தி.மு.க.,வின் முடிவை அறிவதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருக்கிறது.

'ஆட்சியில் பங்கு தரவில்லை என்றால், கூட்டணி அமைப்பது குறித்து மாறுபட்டு சிந்திக்க வேண்டும்; மாற்று கூட்டணி அமைக்க வேண்டும்' என, த.வெ.க., கூட்டணியை விரும்பும் காங்கிரஸ் கோஷ்டிகள் வெளிப்படையாகவே பேசத் துவங்கி விட்டன.

இக்கோஷ்டிகளைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் இணைந்து, 'தமிழக காங்கிரஸ் மறுமலர்ச்சி போராளிகள் - புரட்சிகர சக்தி' என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர். அந்த அமைப்பின் சார்பில், கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கருக்கு அனுப்பிஉள்ள கடிதம்:

பா.ஜ.,வை எதிர்க்க வேண்டும் என்பது காங்கிரசாரின் சிந்தனையாக உள்ளது. பா.ஜ., தான் காங்கிரசின் பிரதான எதிரி. பா.ஜ., வளர அனுமதிக்கக் கூடாது. பா.ஜ.,வை தோற்கடித்து, மத்தியில் ஆட்சி அமைப்பதே நம் இலக்கு.

சாத்தியமற்றது

ஆனால், காங்கிரசை நாம் வளர்க்கவில்லை என்றால், பா.ஜ.,வை தோற்கடிப்பது சாத்தியமற்றது. பா.ஜ.,வை எதிர்க்கும் அளவுக்கு நாம் பலமாக இருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது.

தமிழகத்தில் பா.ஜ.,வை சித்தாந்த ரீதியாக உண்மையாக எதிர்க்கும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டும் தான்; இது தான் உண்மை. ஆனால், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ., தலைமை, நாடு முழுதும் நம்மை நசுக்குகிறது. மாநிலத்தில் ஆளுங்கட்சியாக உள்ள தி.மு.க., தலைமை, நம்மை கூட்டணியில் வைத்துக் கொண்டே வளர விடாமல் தடுக்கிறது. இந்த சூழலில், எந்த பலத்துடன் போய் பா.ஜ.,வை எதிர்க்க முடியும்?பா.ஜ.,வை எதிர்ப்பதாக தி.மு.க.,வும் கூறுகிறது; அது உண்மையான எதிர்ப்பா அல்லது அரசியல் நாடகமா என்பது தெரியவில்லை.

எதிர்ப்பு

அது, சமூக மனசாட்சி அடிப்படையில் அமைந்த அரசியல் அல்ல; வெறும் எதிர்ப்பு என்ற பெயரில் அரங்கேற்றப்படும் நாடகம். மத்திய பா.ஜ., அரசு, திட்டங்களில் இருந்த காந்தி, நேரு, ராஜிவ் ஆகியோரின் பெயர்களை நீக்குகிறது; அதன் வாயிலாக, காங்கிரசை நசுக்கி அழிக்கப் பார்க்கிறது.

தமிழகத்தில் நடக்கும் தி.மு.க., அரசு, காமராஜர், இந்திராவின் புகழை மெதுவாகவும், நாகரிகமாகவும் அழிக்கிறது; அதன் வாயிலாக, காங்கிரசை கசக்கிப் பிழிகிறது. மத்தியில் உள்ள பா.ஜ., மாடல், மாநிலத்தில் உள்ள தி.மு.க., மாடல் ஆகிய இரண்டும், ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.

இரண்டு சக்திகளுக்கும் இடையில் சிக்கி, காங்கிரஸ் பலவீனமாக நிற்கிறது. அதற்கு எதிர்ப்பு சக்தி இல்லை என்பது போல் சித்தரிக்கப்படுகிறது. அதன் அடையாளம் படிப்படியாக நீர்த்துப் போகும்படி செய்யப்படுகிறது.

இது, இந்திய ஜனநாயகத்திற்கே ஆபத்து. மத்திய அரசு மட்டுமல்ல; தி.மு.க., அரசும் கூட, எதிர்ப்பு குரல்களை ஒடுக்க பெரும் ஆர்வத்துடன் செயல்படுகிறது. பா.ஜ., நம் எதிரி என்றால், தி.மு.க.,வும் கூட அரசியல் எதிரி தான். இதே கருத்தைத்தான் அரசியல் அரங்கில் நடிகர் விஜயும் வலியுறுத்தி வருகிறார்.

இரண்டையும் ஒரே நேரத்தில் எதிர்க்க, முதலில் நாம் தமிழகத்தில் பலம் பெற வேண்டும். அதற்கு நமக்கு தேவை என்னவென்றால், சுதந்திரமான அரசியல். ஒரு தெளிவான மற்றும் கொள்கை அடிப்படையிலான கூட்டணி; கூட்டு சித்தாந்த ஒற்றுமை; வலுவான அடித்தள ஒருமைப்பாடு.

பாதுகாப்பு

வெறுமனே பா.ஜ.,வை எதிர்ப்போம் என சொல்வது அரசியல் அல்ல. நாம் வலிமையாக இருக்க வேண்டும்; அசைக்க முடியாதவர்களாக இருக்க வேண்டும். அப்போது தான், உண்மையான எதிர்ப்பு சாத்தியமாகும்.

பா.ஜ.,வை மட்டும் எதிர்ப்போம் என சொல்லும் காங்கிரசுக்குள் இருக்கும் பலர், தங்கள் இதயத்தில் தி.மு.க.,வை பாதுகாப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதன் விளைவாக, அவர்கள் தி.மு.க.,வுக்காகவே பணியாற்றுகின்றனர்.

ஏனென்றால், தமிகத்தில் தி.மு.க., ஒரு சக்தி வாய்ந்த கட்சியாக கருதப்படுகிறது. அதிகாரத்துடன் இணைவதன் வாயிலாக எளிதாக பயன் பெறலாம் என அவர்கள் நம்புகின்றனர். பாதுகாப்பு, பொறுப்பு, பதவிகள், இந்த சுயநல மனப்பான்மை ஒரு வழக்கமாகி விட்டது.

இவர்கள் தான் இன்று சத்தியமூர்த்தி பவனில் அமர்ந்து, தங்களை காங்கிரசார் என்றும், தேசியவாதிகள் என்றும் அழைத்துக் கொள்கின்றனர்; அவர்கள் தான், உண்மையான காங்கிரசின் துரோகிகள். இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்