Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

விக்ரம் பிரபுவின் ‘சிறை’ படம் எப்படியிருக்கு?

விக்ரம் பிரபுவின் ‘சிறை’ படம் எப்படியிருக்கு?

25 மார்கழி 2025 வியாழன் 13:31 | பார்வைகள் : 246


வேலுார் சிறையில் இருக்கும் கொலை குற்றவாளி அக் ஷய்யை, சிவகங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்த பஸ்சில் அழைத்து செல்கிறார் போலீஸ் ஏட்டய்யா விக்ரம்பிரபு. அந்த பயணத்தில் நடந்தது என்ன? யாரை கொலை செய்தார் அக் ஷய். அவருக்கு விடுதலை வாங்கிக்கொடுக்க விக்ரம்பிரபு எடுத்த முயற்சிகள் பலித்ததா? அக் ஷய், அவர் காதலி அனிஷ்மா சேர்ந்தார்களா? இதுதான் சிறை படத்தின் கதை. டாணாக்காரன் தமிழ் கதை எழுத, சுரேஷ் ராஜகுமாரி இயக்கி இருக்கிறார். இது திருச்சியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. 1990களில் இந்த கதை நடக்கிறது.

கைதி, போலீஸ், சிறை, கோர்ட், காதல் பின்னணியில் பல படங்கள் வந்திருந்தாலும், முதல் சில காட்சிகளிலேயே இது வழக்கமான படம் அல்ல என்று சொல்லாமல் சொல்லிவிடுகிறார் இயக்குனர். இன்னொரு கைதியை ஆஜர்படுத்த செல்லும்போது ஏற்படுகிற சண்டையில் விக்ரம்பிரபு செய்கிற தரமான சம்பவம், 'அட,வித்தியாசமாக இருக்கிறதே' என்று நம்மை ஆவலாக படம் பார்க்க துாண்டுகிறது. இதற்குமுன்பு சில படங்களில் போலீசாக நடித்து இருந்தாலும் இதில் ஏ.ஆர்.போலீசாக வந்து படத்துக்கு தனது இயல்பான நடிப்பால் உயிர் கொடுத்து இருக்கிறார் விக்ரம்பிரபு.

மனைவியுடன் ஊடல், நண்பனுக்காக அதிகாரிகளிடம் பேசுவது, கொலை குற்றவாளியான இன்னொரு ஹீரோ அக் ஷய்யை நடத்தும் விதம், குறிப்பாக, விசாரணை கமிஷனில், கோர்ட்டில் அவர் நடந்து கொள்ளும் விதம் என பல இடங்களில் நடிப்பால் ஸ்கோர் செய்து இருக்கிறார். பல சீன்களும் போலீஸ் கதைகளில் புது விஷயங்களை சொல்லியிருக்கிறது. கிளைமாக்சில் அக் ஷய்க்காக அவர் செய்கிற சீனும், போலீஸ் கடமை பற்றி வகுப்பு எடுக்கிற காட்சியும் மாஸ். படம் பார்க்கும் போலீசார், அவர்களின் குடும்பத்தினர் விக்ரம்பிரபுவை பாராட்டுவது நிச்சயம். இந்த மாதிரி ஒரு போலீஸ் இருந்தால் நல்லா இருக்கும் என மக்களும் நினைப்பார்கள்..

ஒருவரை கொன்ற குற்றத்துக்காக 5 ஆண்டுகளாக விசாரணை கைதியாக ஜெயிலில் இருக்கும் கேரக்டரில் வருகிறார் அக் ஷய். அவரின் கெட்அப், டயலாக் டெலிவரி, போலீசிடம் கெஞ்கிற சீன், காதல், குடும்ப சென்டிமென்ட் காட்சிகளை உணர்ச்சிபூர்வமாக எடுத்து இருக்கிறார் இயக்குனர். அவர் நடிப்பும் பொருந்தி இருக்கிறது. கிளைமாக்சில் காதலிக்காக அவர் துடிக்கிற சீனும், கோர்ட்டில் நீதிபதியிடம் பேசுகிற சீனும் செம. 1987களில் வரும் சிவகங்கை பெண்ணாக கலக்கியிருக்கிறார் புதுமுகம் அனிஷ்மா, அவரின் லவ் போர்ஷன் மட்டுமல்ல, காதலுக்காக அவர்படுகிற பாடும், தவிப்பதும் டச்சிங். விக்ரம்பிரபு மனைவியாக வருகிற அனந்தா தம்பிராஜா சில சீன்களில் வந்தாலும், அவர் முகமும், வசனங்களும் கியூட்

இவர்களை தவிர, ஒரு முக்கியமான சீனில் பலரையும் பீல் பண்ண வைக்கிறார் மூணாறு ரமேஷ். நீதிபதியாக வருகிற தேனப்பனும் மனதில் நிற்கிறார். ஹீரோ அம்மாவாக வருபவர், ஹீரோயின் அக்கா, விக்ரம்பிரபுவின் போலீஸ் நண்பர்கள், இன்னொரு நீதிபதி என பல கேரக்டர்கள் கதைக்கு மனதில் பதிய வைக்கும் அளவுக்கு, சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். ஹீரோயின் அக்கா கணவராக வருகிற ரகுவின் நடிப்பும், அவர் செய்கிற செயல்களும் வில்லத்தனத்தின் உச்சம்.

அந்த கால வேலுார் பஸ்ஸ்டாண்ட், சிவகங்கை கோர்ட், போலீஸ் ஸ்டேஷன், சிவகங்கை கிராமம் ஆகியவற்றை தத்ரூபமாக காண்பித்து இருக்கிறது மாதேஷ்மாணிக்கத்தின் ஒளிப்பதிவும். மன்னிச்சிரு, நீலோத்தி பாடல்களில் மட்டுமல்ல, பின்னணி இசையிலும் கலக்கி படத்தை இன்னொரு நிலைக்கு அழைத்து சென்று இருக்கிறார் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். பிலோமின் எடிட்டிங் கச்சிதம்.

ஆயுதப்படை போலீஸ் நடைமுறைகள், அவர்களுக்கு இருக்கும் பிரச்னைகள், கைதிகளை ஆஜர் படுத்த செல்லும்போது நடக்கும் விஷயங்கள், கீழ் கோர்ட் விதிகள், விசாரணை கைதிகளின் நிலை, ஒரு பெயரால் உருவாகும் சந்தேகம் என பல புதுவிஷயங்களை கதையில் சொல்லியிருப்பது பிளஸ். சிவகங்கையில் நடக்கும் ஹீரோ, ஹீரோயின் காதல், அடுத்து வரும் பிரச்னைகளும் விறுவிறுப்பாக இருக்கிறது. வழக்கமான காமெடி, குத்துபாடல், ஹீரோயிச பில்டப் இல்லாதது படத்தை தரமாக்கி இருக்கிறது. படத்தில் வரும் பஸ் சம்பந்தப்பட்ட, கோர்ட் சம்பந்தப்பட்ட காட்சிகள் அவ்வளவு எதார்த்தம், விறுவிறுப்பு

நிஜக்கதை என்பதால் சிறை திரைக்கதையில் உயிர் இருக்கிறது. போலீசிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள். போலீசுக்கும் இவ்வளவு பிரச்னைகள் இருக்கிறது. போலீஸ்காரர்கள் இப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என்பதை அழுத்தமாக சொல்லியிருப்பது டச்சிங். எளியவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். நீதிபதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் காண்பித்து இருப்பது சபாஷ். கதை, திரைக்கதை, நடிப்பு, சொல்லும் விஷயம் என எல்லாற்றிலும் நிறைவாக இருக்கிறது 'சிறை'

வர்த்தக‌ விளம்பரங்கள்