Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

பனையூரில் விஜய் கார் முற்றுகை; அதிருப்தி நிர்வாகிகள் ஆவேசம்

பனையூரில் விஜய் கார் முற்றுகை; அதிருப்தி நிர்வாகிகள் ஆவேசம்

24 மார்கழி 2025 புதன் 10:38 | பார்வைகள் : 143


பனையூரில் தவெக தலைவர் நடிகர் விஜய் காரை, அக்கட்சியின் அதிருப்தி நிர்வாகிகள் திடீரென முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.

தவெகவில் 120 மாவட்ட செயலாளர்களை அக்கட்சியின் தலைவரும், நடிருமான விஜய் அறிவித்துள்ளார். இன்னும் சில தொகுதிகளுக்கு மட்டுமே நிர்வாகிகள் நியமனம் நிரப்பப்படாமல் உள்ளது.

அதில், குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படாமல் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் எஞ்சிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் இன்று(டிச.23) நடைபெறும் என்று சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நடிகர் விஜய்யின் பனையூர் அலுவலகம் முன்பு கட்சி நிர்வாகிகள் வர ஆரம்பித்தனர். தூத்துக்குடியில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியை தவிர மற்ற 5 தொகுதிகளுக்கும் மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தூத்துக்குடி மத்திய மாவட்டத்துக்கு சாமுவேல் ராஜ் என்ற நிர்வாகி, மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட உள்ளதாக பேச்சுகள் எழுந்தன. ஆனால் சாமுவேலை நியமிக்கக்கூடாது என்று அவரது எதிர்தரப்பு நிர்வாகியான அஜிதா ஆக்னல் என்பவர், தமது ஆதரவாளர்களுடன் பனையூர் வந்தார். அவரை அலுவலகம் வரும் சிறிது தூரம் முன்பே பவுன்சர்கள் தடுத்து நிறுத்தி இருக்கின்றனர். மேலும் அவர்களை அங்கிருந்து கலைந்து போகுமாறும் அறிவுறுத்தி உள்ளனர்.

ஆனால் அதை பொருட்படுத்தாத அஜிதா ஆக்னல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நடிகர் விஜய்யிடம் தமது அதிருப்தியை வெளிப்படுத்த காத்திருந்தனர். இவர்களை போன்று திருத்துறைப்பூண்டியில் இருந்தும் தவெகவின் அதிருப்தி நிர்வாகிகள் விஜய்யிடம் புகார் தெரிவிக்க காத்திருந்தனர்.

ஒரு கட்டத்தில் தனக்கு பதவி இல்லை என்பதை தெரிந்துகொண்ட அஜிதா ஆக்னல், ஆதரவாளர்களுடன் எங்கும் செல்லாமல் விஜய்யின் வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்தார். காரில் விஜய் வர, அவரை தமது ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.

காரின் முன்பகுதியில் ஆதரவாளர்கள் திரள, அவர்களை பாதுகாப்புக்காக வந்திருந்த பவுன்சர்கள் அகற்ற எத்தனித்தனர். ஆனால் தொடர்ந்து அதிருப்தியாளர்கள் முன்னேற முயல அங்கு ஒரு வித பதற்றமும், பரபரப்பும் எழுந்தது. பொறுப்பு வழங்குவதாக கூறி, ஏமாற்றி விட்டதாக புகார்கள் கூறியபடி அவர்கள் கோஷம் எழுப்பினர்.

அதிருப்தியாளர்கள் ஒருபக்கம் முற்றுகையில் ஈடுபட, பவுன்சர்களின் உதவியுடன் விஜய் தமது காரை நிறுத்தாமல் பனையூர் அலுவலகத்திற்குள் நுழைந்தார். காலை முதல் காத்திருந்தும் விஜய் சந்திக்காமல் போனதால் அஜிதா உள்ளிட்டோர் தொடர்ந்து அதிருப்தியில் அங்கேயே முகாமிட்டனர்.

விஜய் தரப்பில் இருந்து எவ்வித அழைப்பும் இல்லாததால் பனையூர் கட்சி அலுவலகம் முன்பு, தமது ஆதரவாளர்களுடன் அஜிதா ஆக்னல் தர்ணாவில் ஈடுபட்டார். இதையறிந்த, நிர்மல் குமார் சமாதான பேச்சுவார்த்தைக்காக அழைத்தார். ஆனால், அங்கே இருந்த அஜிதா ஆக்னல் ஆதரவாளர்கள் அதை ஏற்காமல் விஜய் இங்கு வரவேண்டும் என்று குரல் எழுப்ப, அடுத்த நொடியே நிர்மல்குமார் அங்கிருந்து சென்றார்.

தர்ணாவில் ஈடுபட்டுள்ள அஜிதா ஆக்னல் ஆதரவாளர்கள் கூறியதாவது;

காலை முதல் சாப்பிடாமல் இங்கேயே இருக்கிறோம். விஜய் எங்கள் முன்பு இங்கு வர வேண்டும். அவர் வராமல் நாங்கள் போகமாட்டோம். எங்களை அழைத்து பேச மாட்டேன் என்கிறார்கள். சாமுவேல் என்பவர் யார்? விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்தே உழைத்து இருக்கிறோம், போஸ்டர்கள் ஒட்டியுள்ளோம். பணம் வாங்கிக் கொண்டு பொறுப்பை கொடுத்துள்ளனர்.

30 ஆண்டுகளாக உழைத்தவர்களுக்கு தான் அதன் வலி தெரியும். தூத்துக்குடியில் தவெக என்றால் யாருக்கு தெரியும், அஜிதா ஆக்னல் என்று சொன்னால் மட்டும் தான் தெரியும். அவரை தவிர்த்து இங்கு யாரும் ஜெயிக்க முடியாது. சும்மா பதவி கேட்கவில்லை,

உழைத்ததால் கேட்கிறோம். அதற்கு இப்போது என்ன மரியாதை. மக்கள் இயக்கத்தில் எவ்வளவோ நல்லது செய்திருக்கிறோம். பொறுப்பை கொடுத்தவர்களில் யாருக்கேனும் அமைப்பில் பதிவெண் இருக்கிறதா? அவர்களில் யாரிடமாவது, உறுப்பினர் அடையாள அட்டை உள்ளதா?

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அஜிதா ஆக்னல் ஆதரவாளர்களுடன் தொடர்ந்து போராட்டம் நடத்திய அதே வேளையில், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக சாமுவேல் ராஜ் நியமிக்கப்பட்டு உள்ளதாக தவெக தலைவர் நடிகர் விஜய் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கையெழுத்திட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது .

இரவு வரை போராடிய அஜிதா ஆக்னல், இறுதி வரை எங்களின் பயணம் விஜய்யுடன் தொடரும் என்று கூறி போராட்டத்தை முடித்துக் கொண்டார். அதன் பின்னர் அவர் தமது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்