Paristamil Navigation Paristamil advert login

சீன விசாவுக்கு லஞ்சம்: காங்., எம்.பி., கார்த்திக்கு சிக்கல்

சீன விசாவுக்கு லஞ்சம்: காங்., எம்.பி., கார்த்திக்கு சிக்கல்

24 மார்கழி 2025 புதன் 06:38 | பார்வைகள் : 616


சீன விசா பணமோசடி வழக்கில், காங்., - எம்.பி., கார்த்தி மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய டில்லி சி.பி.ஐ., நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்த டி.எஸ்.பி.எல்., நிறுவனம், கடந்த 2011ல் பஞ்சாபில் அனல்மின் நிலையம் அமைத்தது. இந்த பணிகளுக்காக, சீன ஊழியர்கள் 263 பேருக்கு விதிமீறி விசா வாங்க முயன்றது. இதற்காக அப்போதைய மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரத்தின் மகன் கார்த்தியை அணுகியதாக கூறப்படுகிறது.

அவருக்கு நெருக்கமாக இருந்த பாஸ்கரராமன் என்பவர் மூலம், 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று, சீன ஊழியர்களுக்கு விசா பெற்று கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, 2020ல் வழக்கு பதிந்து விசாரணை நடத்திய சி.பி.ஐ., கடந்த 2022ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அதில், தற்போதைய சிவகங்கை தொகுதி காங்., - எம்.பி., கார்த்தி, அவரது உதவியாளர் பாஸ்கரராமன், விரால் மேத்தா, அனுப் அகர்வால், மன்சூர் சித்திக் மற்றும் சேத்தன் ஸ்ரீவஸ்தவா ஆகியோரது பெயர்கள் சேர்க்கப் பட்டன.

இந்நிலையில், இவ்வழக்கு டில்லி சி.பி.ஐ., நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி மற்றும் ஏழு பேர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார். வழக்கில் இருந்து சேத்தன் ஸ்ரீவஸ்தவா மட்டும் விடுவிக்கப்பட்டார்.

ஐ.என்.எக்ஸ்., மீடியா மற்றும் ஏர்செல் - மேக்சிஸ் வழக்குகளில், கார்த்தி மீது அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது சீன விசா பணமோசடி வழக்கிலும் பெயர் சேர்க்கப்பட்டிருப்பது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்