Paristamil Navigation Paristamil advert login

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா சார்பில் ரூ.4,050 கோடி நிதியுதவி

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா சார்பில் ரூ.4,050 கோடி நிதியுதவி

24 மார்கழி 2025 புதன் 05:38 | பார்வைகள் : 588


இலங்கையில், 'டிட்வா' புயலால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, அந்நாட்டின் மறுசீரமைப்பு பணிகளுக்காக, 4,050 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது.

நம் அண்டை நாடான இலங்கையில், சமீபத்தில் வீசிய டிட்வா புயல் அந்நாட்டில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே, பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ள இலங்கையில், இந்த இயற்கை பேரிடரால் ஏற்பட்ட சேதத்தை சீர்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, உலக நாடுகள், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்டவைகளிடம் இருந்து இலங்கை கடன் உதவி கோரி வருகிறது.

இந்நிலையில், நம் அண்டை நாடு என்கிற முறையில், இலங்கைக்கு மத்திய அரசு, அந்நாட்டில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க 4,050 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்து உள்ளது.

இலங்கைக்கு, பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு பிரதிநிதியாக சென்றுள்ள, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டார். மேலும், பிரதமர் எழுதிய கடிதத்தையும் அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயகேவிடம் ஜெய்சங்கர் வழங்கினார்.

இந்தியா வழங்கும் இந்த நிதியுதவியில், 3,150 கோடி ரூபாய் சலுகை கடன் என்றும், 900 கோடி ரூபாய் மானியங்கள் அடங்கும் என்றும் அவர் கூறினார்.

இதுகுறித்து ஜெய்சங்கர் கூறுகையில், “அண்டை நாடுகளுக்கே முன்னுரிமை என்ற கொள்கையின் அடிப்படையில், இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு துணையாக நிற்க வேண்டியது இந்தியாவின் கடமை,” என, குறிப்பிட்டார்.

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத் உள்ளிட்டோரையும் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

புயல் பாதிப்பு ஏற்பட்டவுடன், 'ஆப்பரேஷன் சாகர் பந்து' என்ற பெயரில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 1,100 டன் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பி உதவியதற்கு, இலங்கை தலைவர்கள் நன்றி தெரிவித்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்