Paristamil Navigation Paristamil advert login

கல்லத்தி மரத்தில் நிலா பிறை கொடி; ஹிந்து மக்கள் கட்சி கண்டனம்

கல்லத்தி மரத்தில் நிலா பிறை கொடி; ஹிந்து மக்கள் கட்சி கண்டனம்

23 மார்கழி 2025 செவ்வாய் 11:21 | பார்வைகள் : 181


திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான மலை மேல் உள்ள தலவிருட்சமான கல்லத்தி மரத்தில் சந்தனக்கூடு விழாவிற்காக இஸ்லாமியர்கள் நிலா பிறை கொடியை ஏற்றியதற்கு ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன் கண்டனம் தெரிவித்தார்.

அவரது அறிக்கை:

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற கோரி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தும் போலீசார் மூலம் தி.மு.க., அரசு தடுத்து நிறுத்தியது.

மலை மேல் உள்ள சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான மலை மீது உள்ள கல்லத்தி மரத்தில் நிலா பிறை போட்ட கொடி மரத்தை தர்கா நிர்வாகம் ஏற்றப் போவதை தடுக்க கோரி சில தினங்களுக்கு முன்பு திருமங்கலம் ஆர்.டி.ஓ., கோயில் நிர்வாகம், கோயில் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக மனு அனுப்பியிருந்தோம்.

திருமங்கலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த அமைதி பேச்சு வார்த்தையில் கோயில் நிர்வாகம், போலீசார், தர்கா நிர்வாகத்தினர் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர். பேச்சுவார்த்தையில் வழக்கம் போல இந்த வருடமும் கல்லத்தி மரத்தில் கொடி ஏற்றலாம் என தர்கா நிர்வாகத்திற்கு ஆர்.டி.ஓ., உத்தரவிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட தொல்லியல் துறை, ஹிந்து அமைப்புகள், ஊர் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரையும் அழைத்து கூட்டம் நடத்துவது தான் அமைதி கூட்டம். ஆனால் யாரையும் அழைக்காமல் நடத்தியுள்ளனர்.

சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான மரத்தில் வழக்கம் போல் கொடியேற்றலாம் என எதன் அடிப்படையில் ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார். கல்லத்தி மரத்தில் தர்கா நிர்வாகம் சார்பில் கொடியேற்றுவதற்கும், கல்லத்தி மரத்தை ஆக்கிரமிப்பதற்கும் துணை போகும் விதமாக ஆர்.டி.ஓ., கோயில் நிர்வாகமும் மறைமுகமாக உடந்தையாக பல ஆண்டுகளாக இருந்துள்ளது தற்போது வெட்ட வெளிச்சம் ஆகிறது. இவ்வாறு தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்