Paristamil Navigation Paristamil advert login

நைஜீரியாவில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த 130 மாணவர்கள் மீட்பு!

நைஜீரியாவில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த 130 மாணவர்கள் மீட்பு!

22 மார்கழி 2025 திங்கள் 16:20 | பார்வைகள் : 860


நைஜீரியாவில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த பாடசாலை மாணவர்களில் 130 பேரை அந்நாட்டு இராணுவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) உயிருடன் மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி நைஜீரியா நாட்டின் நைஜர் மாகாணத்தில் பபிரி நகரில் உள்ள ஒரு தனியார் கத்தோலிக்க பாடசாலைக்குள் பயங்கரவாதிகள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் என 315 பேரை துப்பாக்கிமுனையில் கடத்திச் சென்றுள்ளனர்.

கடத்தப்பட்டவர்களில் 303 மாணவர்களும் 12 ஆசிரியர்களும் அடங்குவர் என்றும் ஆயுததாரிகள் 10 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியரையும் கடத்தியுள்ளதாகவும் நைஜீரிய கிறிஸ்தவ சங்கம் (CAN) தெரிவித்துள்ளது.

அதனையடுத்து, மாணவர்களை ஆயுததாரிகளிடமிருந்து உயிருடன் மீட்க அந்நாட்டு இராணுவம் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வந்தது.

இதற்கிடையில் கடத்தப்பட்ட 48 மணிநேரத்துக்குள் 50 மாணவர்கள் பயங்கரவாதிகளிடம் தப்பிச் சென்று பெற்றோரிடம் தஞ்சமடைந்ததாக கிறிஸ்தவ சங்கம் தெரிவித்தது.

பின்னர், இம்மாத தொடக்கத்தில் 100 மாணவர்களை பயங்கரவாதிகள் விடுவித்ததாகவும் செய்திகள் வெளியாகின.

அதனைத் தொடர்ந்து, நேற்று 130 மாணவர்களை நைஜீரிய இராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஆயுததாரிகள் பிடித்துவைத்துள்ள எஞ்சிய 30க்கும் மேற்பட்ட மாணவர்களின் நிலை தொடர்பான எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

நைஜீரியா ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளரான பயோ ஒனனுகா நேற்று கடத்தப்பட்ட மாணவர்களிலிருந்து மீட்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை பற்றிய விபரங்கள் தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

அத்துடன் அவர், மீட்கப்பட்ட மாணவர்கள் சிரித்தபடி கையசைக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளமையும் பல நாடுகளின் கவனத்தை பெற்றுள்ளது.

மேலும், மீட்கப்பட்ட மாணவர்கள் இன்று (22) நைஜர் மாகாணத்தின் மின்னா நகரை சென்றடைந்துவிடுவர் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்