மஹாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., கூட்டணி அபாரம்!
22 மார்கழி 2025 திங்கள் 09:19 | பார்வைகள் : 143
மஹாராஷ்டிராவில், 246 நகராட்சிகள் மற்றும், 42 நகர பஞ்சாயத்துகள் என, மொத்தம் 288 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான ஆளும், 'மஹாயுதி' கூட்டணி, 212ல் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான 'மஹா விகாஸ் அகாடி' கூட்டணி, 48 உள்ளாட்சி அமைப்புகளை மட்டுமே கைப்பற்றி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., இடம் பெற்ற மஹாயுதி கூட்டணியின் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 246 நகராட்சிகள் மற்றும் 42 நகர பஞ்சாயத்துகள் என, மொத்தம் 288 உள்ளாட்சி அமைப்புகளுக்கு, கடந்த 2 மற்றும் 20ம் தேதிகளில், இரு கட்டங்களாக தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில், ஆளும் மஹாயுதி கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான காங்., - உத்தவ் தாக்கரேயின் சிவசேனா - சரத் பவாரின் தேசியவாத காங்., இடம் பெற்ற மஹா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 246 நகராட்சிகளில், ஆளும் மஹாயுதி கூட்டணி, 178ஐ கைப்பற்றி சாதித்துள்ளது.
இதில், பா.ஜ., 100; துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா 45; மற்றொரு துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்., 33 நகராட்சிகளை கைப்பற்றி உள்ளன. மஹா விகாஸ் அகாடி கூட்டணி, 41 நகராட்சிகளையே பிடித்துள்ளது.
இதில், காங்., 26; உத்தவ் சிவசேனா ஏழு; தேசியவாத காங்., சரத் சந்திர பவார் பிரிவு எட்டு இடங்களிலும் வென்றுள்ளன. மற்ற 27 நகராட்சிகளை இதர கட்சிகள் கைப்பற்றி உள்ளன.
அதேபோல, 42 நகர பஞ்சாயத்துகளில், 34ஐ மஹாயுதி கூட்டணி கைப்பற்றி உள்ளது. பா.ஜ., 23; சிவசேனா எட்டு; தேசியவாத காங்.,3 நகர பஞ்சாயத்துகளிலும் வென்றுள்ளன. மஹா விகாஸ் அகாடி கூட்டணி, ஏழு பஞ்சாயத்துகளை மட்டுமே பிடித்துள்ளது.
கடந்தாண்டு சட்டசபை தேர்தல் வெற்றியை தொடர்ந்து, மீண்டும் ஒரு முறை ஆளும் மஹாயுதி கூட்டணி தன் பலத்தை நிரூபித்துள்ளது. மஹாயுதி கூட்டணி தரப்பில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர், மாநிலத்தின் மூலைமுடுக்கெல்லாம் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அது, தற்போது அவர்களுக்கு கை கொடுத்துள்ளது.
ஆனால், மஹா விகாஸ் அகாடி கூட்டணியில் ஒருங்கிணைப்பே இல்லை. காங்., சில பகுதிகளில் கடுமையாக போராடினாலும், உத்தவ் சிவசேனா நிர்வாகிகள் களத்துக்கே வரவில்லை. சரத் பவார் தரப்பு நிர்வாகிகள், தங்கள் சொந்த தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்தினர். இதுவே, அக்கூட்டணியின் தோல்விக்கு காரணமாகக் கூறப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan