தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க முயற்சி: நெல்லை கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
21 மார்கழி 2025 ஞாயிறு 08:14 | பார்வைகள் : 158
தமிழகத்தின் அமைதியை எப்படி சீர்குலைக்கலாம் என பலர் யோசிப்பதாக, முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் நேற்றிரவு கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், அவர் பேசியதாவது:
அன்பு நெறியை, பண்பு நெறியாக வளர்த்தெடுப்பதுதான் கொண்டாட்டங்களின் அடிப்படை. வெறுப்புணர்வு என்பது பாவங்களை செய்யத் துாண்டும். அன்பு என்பது அத்தனை பாவங்களையும் போக்கும்.
அப்படிப்பட்ட அமைதியான, அன்பான, சகோதரத்துவ உணர்வுமிக்க சமுதாயத்தை கட்டமைக்கும் கடமை நமக்குள்ளது. இதுதான் இன்றைய இந்தியாவுக்கு தேவை.
ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்களும் ஒருதாய் வயிற்று பிள்ளைகளாக வாழ வேண்டும். அதற்கு கிறிஸ்துமஸ் போன்ற விழாக்கள் துணை நிற்க வேண்டும். மதச்சார்பின்மை, மத நல்லிணக்கத்தை விரும்பும் நாங்கள், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக என்றும் இருப்போம்.
தி.மு.க., என்பது சிறுபான்மையினர் நலனில், உண்மையான அக்கறை கொண்டுள்ள இயக்கம். தி.மு.க., ஆட்சிதான் சிறுபான்மையினரின் பொற்கால ஆட்சி. சிறுபான்மையினருக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் தேர்வு கமிட்டியில், அந்தந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் மட்டுமே இருப்பர் என்ற அரசாணையில் கையெழுத்து போட்டு விட்டுதான், இங்கே வந்திருக்கிறேன்.
ராமநாதபுரம் மாவட்டம், மூக்கையூர் கிராமத்தில் உள்ள, தொன்மையான புனித யாக்கோபு சர்ச், 1.40 கோடி ரூபாயில் சீரமைக்கப்படும்.
புதிய விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே நியமிக்கப்பட்ட, 470 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.
எந்த மத பாகுபாடும் இல்லாமல் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம்; திருப்பணி செய்கிறோம். இதற்கு தமிழக மக்கள் பக்கபலமாக உள்ளனர். இது சிலரின் கண்களை உறுத்துகிறது.
தமிழகத்தின் அமைதியை எப்படி சீர்குலைக்கலாம்; ஒன்றாக பழகும் மக்களை எப்படி எதிரிகளாக பிரிக்கலாம் என்று பலர் யோசிக்கின்றனர். ஆன்மிகத்தின் பெயரில் சில அமைப்புகளை அழைத்துச் செல்லும் வழி, வன்முறைக் கான பாதை என்பதை, தமிழகம் உணர்ந்துள்ளது.
மதத்தின் பெயரால் உணர்வுகளை துாண்டுபவர்களை சந்தேகப்படுங்கள்; கவனமாக இருங்கள் என்ற பைபிள் வாசகத்தை குறிப்பிட விரும்புகிறேன்.
மத்திய பா.ஜ., அரசுக்கு, மதச்சார்பின்மை என்ற சொல்லே வேப்பங்காயாக கசக்கிறது. தமிழகத்திலும், தனது திட்டத்தை செயல்படுத்த நினைக்கிறது. எப்படிப்பட்ட ஆபத்தையும், பா.ஜ.,வின் நாசக்கார திட்டத்தையும் எதிர்த்து, முறிடியக்கும் வலிமை தமிழகத்திற்கும் தி.மு.க.,வுக்கும் உண்டு.
எஸ்.ஐ.ஆரை பொறுத்தவரை, இன்னும் நமது பணிகள் முடியவில்லை. ஓட்டுரிமை பறிக்கப்பட்டிருந்தால், அந்த வாக்காளர் பெயரை பட்டியலில் சேர்ப்பதற்கான பணிகளை, தி.மு.க., நிர்வாகிகள் செய்வர்.
யாரும் கவலைப்பட வேண்டாம். நம்மை ஓட்டுப் போடவிடாமல் தடுக்க, பா.ஜ, அரசு பல்வேறு முயற்சிகளை செய்யும். அதை முறியடித்து, வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan