10 சீட் கூடுதலாக வாங்கினால் புரட்சிகர மாற்றம் ஏற்படப் போவதில்லை; திருமா
21 மார்கழி 2025 ஞாயிறு 06:14 | பார்வைகள் : 168
விமர்சனங்களைத் தாண்டி தி.மு.க., கூட்டணியில் நீடிக்க காரணம் பதவி, பொருள் ஆசை இல்லை என்பதுதான்,' என வி.சி.க., தலைவர் திருமாவளவன் மதுரையில் பேசினார்.
எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குனர் கதிர் எழுதிய 'கறுப்பு ரட்சகன்' புத்தகம் வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது. பேராசிரியை செம்மலர் தலைமை வகித்தார். புத்தகத்தை வி.சி.க., தலைவர் திருமாவளவன் வெளியிட, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் பெற்றுக் கொண்டார்.
சண்முகம் பேசுகையில், 'தீண்டாமை, ஜாதியத்தை கடைப்பிடிப்பவர்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டும். இந்தியாவில் கல்வி, மருத்துவத்திற்கு கிறிஸ்தவம் சிறந்த பங்களிப்பு செய்துள்ளது. தற்போது சிறுபான்மை மக்களுக்கு எதிராக மதவாத அச்சுறுத்தல் உள்ளது,' என்றார்.
திருமாவளவன் பேசியதாவது: தேர்தல் கூட்டணி குறித்து நான் எடுத்த முடிவுகள் பற்றி விமர்சனம் உண்டு. தி.மு.க., மீது விமர்சனம் இருந்தாலும் அதை உயர்த்திப் பிடிக்கிறீர்கள் என்கின்றனர். 2009 தேர்தலில் முள்ளிவாய்க்கல் போரின்போது தி.மு.க., கூட்டணியில் இருந்தது பற்றி தற்போதும் விமர்சனம் உண்டு. தேர்தல் அரசியலில் கொள்கைக்கு பாதிப்பு ஏற்படாமல், இயக்கம் உயிர்ப்புடன் இருக்கும் வகையில், தனிமைப்பட்டுவிடாமல் முடிவெடுக்க வேண்டியுள்ளது. அரசியல் கட்சி நடத்துவது இடர்பாடு நிறைந்தது.
வேங்கைவயல் பிரச்னையில் என்ன செய்தீர்கள் என்ற கேள்வி என்னை நோக்கி உண்டு. சம்பவம் நடந்த 2 வது நாளில் புதுக்கோட்டையிலும் அதைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தினோம். தமிழக முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலர் ஆகியோரிடம் பலமுறை பேசினேன். கூட்டணி என்பதற்காக உரிமைகளை விட்டுக் கொடுத்து, மக்களை மறந்து எனது நலனை சிந்தித்ததில்லை. கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க., அரசு நிர்வாகம் அல்லது காவல்துறையை எதிர்த்து எங்களைப் போல் போராட்டம் யாரும் நடத்தியதில்லை. இதை யாரும் பேசுவதில்லை.
முதல்வர் வருத்தப்பட்டார்
போலீசாரை கடுமையாக நான் விமர்சித்ததாகக்கூறி முதல்வர் நேரில் அழைத்து வருத்தப்பட்டார். 'நாம்தான் நேரில் சந்திக்கிறோம். மனம் திறந்து பேசுவது வாடிக்கைதானே. ஏன் பொதுவெளியில் பேசுகிறீர்கள்' என வருத்தப்பட்டார். கருணாநிதி தி.மு.க., தலைவராக இருந்தபோது அக்கூட்டணியில் நாங்கள் இருந்தாலும், இலங்கை தமிழர் பிரச்னையில் அ.தி.மு.க., மற்றும் பிற தலைவர்களுடன் இணைந்து போராடினேன்.
தேர்தல் பற்றி நான் தேர்தல் நேரம் மட்டுமே சிந்திப்பேன். பதவி பெரிதல்ல. 10 சீட்கள் கூடுதலாக வாங்கினால் புரட்சிகர மாற்றம் ஏற்படப்போவதில்லை. அதுதான் பெரிது என்றால் கூடுதலாக சீட் தரும் இடங்களைத் தேடி என்னால் போய்விட முடியுமே. இவ்வளவு விமர்சனங்களைத் தாண்டி தி.மு.க.,கூட்டணியில் நீட்டிக்க காரணம் பதவி, பொருள் ஆசை இல்லை என்பதுதான் என்றார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan