பிரதமர் மோடியின் அடுத்தடுத்த வருகை பா.ஜ.,வுக்கு உதவுமா! சூடுபிடிக்கும் மே.வங்க தேர்தல்
21 மார்கழி 2025 ஞாயிறு 05:14 | பார்வைகள் : 149
மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அங்கு ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான பா.ஜ., தீவிர முனைப்புடன் பணியாற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அம்மாநிலம் மீது பிரதமர் நரேந்திர மோடியும் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். கடந்த மூன்று மாதங்களில் ஐந்து முறை அம்மாநிலத்துக்கு அவர் வருகை தந்துள்ளார். எனினும் இது மட்டுமே பா.ஜ.,வின் வெற்றிக்கு உதவுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.
இங்கு, 2011, 2016 மற்றும் 2021 என, மூன்று சட்டசபை தேர்தல்களிலும் வென்று, தொடர்ந்து 15 ஆண்டுகளாக முதல்வர் அரியணையில் மம்தா பானர்ஜி உள்ளார். இங்கு தமிழகத்துடன் சேர்த்து, 2026 ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.
இந்த முறை ஆளும் திரிணமுல் காங்கிரசை ஆட்சி அதிகாரத்தில் இருந்து விரட்டி அடிக்க எதிர்க்கட்சியான பா.ஜ., தீவிரமாக செயல்பட்டு வருகிறது. நான்காவது வெற்றியை ருசிக்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பணியாற்றி வருகிறார்.
பிரசார உத்தி கடந்த 2021 சட்ட சபை தேர்தலில், மொத்தமுள்ள 294 தொகுதிகளில், 213 இடங்களை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சி அமைத்தார்; பா.ஜ., 77 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
கடந்த , 2016ல், 10.3 சதவீதமாக இருந்த பா.ஜ., ஓட்டு வங்கி, 2021 சட்டசபை தேர்தலிலும், கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்த லிலும், 38 சதவீதமாக அதிகரித்தது.
தற்போது, அங்கு பா.ஜ., ஓட்டு வங்கி 38.5 - 40.6 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில், திரிணமுல் காங்கிரசின் ஓட்டு வங்கி, 43.7 - 48.5 சதவீதமாக உள்ளது. இரு கட்சிகளுக்கு இடையிலான ஓட்டு வங்கி சதவீதத்தின் வித்தியாசம், 7 சதவீ தம் மட்டுமே.
இந்த சூழலில், அங்கு ஆட்சிக் கட்டிலில் பா.ஜ.,வை அமர வைக்க பிரதமர் மோடியையே, அக் கட்சியினர் பெரிதும் நம்பியுள்ளனர்.
அதற்கு உதவும் வகையில், கடந்த ஐந்து மாதங்களில் மூன்று முறை மேற்கு வங்கத்துக்கு பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். கடந்த தேர்தலில், முதல்வர் மம்தாவை குறிவைத்து பே சிய அவர், இந்த முறை தன் பிரசார உத்தியை மாற்றியுள்ளார்.
மம்தாவை சாடுவதை தவிர்த்த பிரதமர், மாநிலத்தில் பின்தங்கியுள்ள வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு குறித்து அதிகம் பேசினார்.
'பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், ஊழல் இருக்காது' என சூளுரைத்தார். மேற்கு வங்க கலாசாரம் மற்றும் பெருமை அழிக்கப்படுவதை தடுக்க பா.ஜ., அரணாக செயல்படும் என்றும் கூறினார். இது ஒரு புறம் இருக்க, ஹிந்துத்வா பிரசாரத்தை மாநில பா. ஜ.,வினர் முன்னெடுத்துள்ளனர்.
சட்டசபை தேர்தலை கருதி, மாபெரும் சனாதன ஒற்றுமை பேரணியை அக்கட்சி சமீபத்தில் நடத்தியது. முன்னெப்போ தும் இல்லாத அளவாக, கடந்த ஏப்ரலில், ஸ்ரீ ராம நவமி விழாவை மிக பிரமாண்ட முறையில் அக்கட்சியினர் கொண்டாடினர். ஆனால் இது, முஸ்லிம்களின் ஓட்டுகளை சிதறடிக்கும் என்பதை அவர்கள் சிந்தி க்கவில்லை.
ஹிந்துத்வா கொள்கையை கையிலெடுத்த மம்தாவும், ஒடிஷாவின் புரி ஜெகன்னாதர் கோவிலை போன்ற கோவிலை மேற்கு வங்கத்தின் திகாவில் திறந்து வைத்தார்.
அரசியல் நாடகம் கோவில் பூசாரிகளுக்கு சம்பளத்தை உயர்த்துதல், துர்கா பூஜை கொண்டாட்டத்தையும் அவர் முன்னெடுத்தார். அதே சமயம், முஸ்லிம் ஓட்டுகளை தக்க வைப்பதிலும் மம்தா பானர்ஜி கவனமாக உள்ளார்.
மொத்தமுள்ள 294 தொகுதிகளில், 120 தொகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்களை கவரும் வகையில், அங்குள்ள சூபி கோவிலான புர்புரா ஷெரீப்பில் நடந்த கொண்டாட்டத்தில், 10 ஆண்டுகளுக் கு பின் மம்தா பானர்ஜி பங்கேற்றார்.
ஹூக்ளியின் தாத்பூரில், 'இஜ்தேமா' எனப்படும் உலகம் முழுதும் இருந்து பல லட்சம் யாத்ரீகர்கள் பங்கேற்கும் முஸ்லிம் மாநாட்டை அடுத்த மாதம் நடத்த அவர் அனுமதி அளித்துள்ளார். இதை தேர்தலுக்கான அரசியல் நாடகம் என, பா.ஜ., விமர்சித்துள்ளது.
எ ஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி பா.ஜ.,வுக்கு சாதகமாக அமைந்தாலும், அது அக்கட்சிக்கு எதிராக திரும்பும் சூழல் மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ளது.
எஸ். ஐ.ஆர்., கணக்கெடுப்பின் போது, மதுவா சமூகத்தினரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது, பா.ஜ.,வுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
மதுவா க்கள் வசிக்கும் நாடியாவுக்கு முதல்வர் மம்தா சமீபத்தில் விஜயம் செய்தார். எஸ்.ஐ.ஆர்., பணிகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய ஆளும் திரிணமுல் காங்கிரஸ், இது ஓட்டு திருட்டு என் றும், வங்க மொழி பேசுபவர்களுக்கு எதிரான செயல் என்றும் கூறி வருகிறது.
சட்டசபை தேர்தலை குறிவைத்து திரிணமுல் காங்., - பா.ஜ., மேற்கொண்டு வரும் பிரசாரங்கள், வரும் காலங்களில் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பீஹாரில் பெற்ற வெற்றியை மேற்கு வங்கத்திலும் ருசிக்க பா.ஜ., விரும்பினாலும், அதற்காக இன்னும் அக்கட்சியின் நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதே நிதர்சனம்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan