Paristamil Navigation Paristamil advert login

மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்; திருப்பூரில் பா.ஜ., அண்ணாமலை கைது

மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்; திருப்பூரில் பா.ஜ., அண்ணாமலை கைது

19 மார்கழி 2025 வெள்ளி 12:09 | பார்வைகள் : 140


மாநகராட்சி குப்பை விவகாரத்தை சரியாக கையாளாததை கண்டித்தும், சின்னக்காளிபாளையம் கிராம மக்களுக்கு ஆதரவாகவும், திருப்பூரில் நேற்று பா.ஜ., மேற்கொள்ள இருந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். போராட்டத்தில் பங்கேற்க வந்த மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்பட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் மாநகரில் சேகரமாகும் குப்பைகளை, அருகில் உள்ள சின்னக்காளிபாளையத்தில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்திவருகின்றனர். கடந்த, 16ம் தேதி, குப்பை கொட்ட சென்ற லாரிகளை, கிராம மக்கள் தடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றபோது, பொதுமக்கள் தரப்பில் நான்கு பேரும், போலீஸ் தரப்பில் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் உள்பட நான்கு பேரும் காயமடைந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதை தொடர்ந்து, 10 பிரிவுகளின் கீழ் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பத்து பேரை நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.

சின்னக்காளிபாளையம் மக்களுக்கு ஆதரவாக, பா.ஜ. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தலைமையில் திருப்பூரில் நேற்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. அனுமதி மறுக்கப்பட்டதால், குமரன் சிலை, ரயில்வே ஸ்டேஷன் சுற்றுப்பகுதிகளில் நேற்று மாலை, 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்துக்காக வந்து, ஆங்காங்கே பேக்கரி, டீ கடைகளில் நின்று கொண்டிருந்த பா.ஜ.வினரை, உள்ளே புகுந்து போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று, வேனில் ஏற்றினர். கைதுக்கு மறுத்தவர்களை, போலீசார் இணைந்து, 'தர தர' வென இழுத்துச்சென்று, வேனில் ஏற்றினர். பா.ஜ. வினரை உள்ளே அனுமதித்த டீக்கடை, பேக்கரிகளின் ஷட்டர்களை போலீசார் இழுத்து மூடினர்.இதற்கிடையே நேற்று மாலை 4:00 மணியளவில் குமரன் சிலை முன், காரில் அண்ணாமலை வந்தார். அங்கு சில நிமிடங்கள் உரையாற்றினார் .

அவர் உள்பட 500க்கும் மேற்பட்டோரை கைது செய்த போலீசார், காலேஜ் ரோட்டிலுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

கமிஷனுக்காக ஊரை குப்பை மேடாக்குவதா?

அண்ணாமலை ஆவேசம்

திருப்பூர், குமரன் சிலை முன், காரில் வந்த அண்ணாமலை பேசியதாவது: கோவையில் கல்லுாரி மாணவியை பலாத்காரம் செய்தவன் தைரியமாக சுற்றிக்கொண்டிருக்கிறான். பெண்கள் மீது கை வைப்பவனையெல்லாம் கைது செய்வதில்லை. ஆனால், நியாயமான முறையில், போராடும் மக்களுக்கு ஆதரவாக யாராவது வந்தால், போலீசார் அவர்களை தாக்குகின்றனர். குப்பை பிரச்னைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது எந்தவிதத்தில் நியாயம். தி.மு.க.வினர், வட இந்தியர்கள் என யாரை கொச்சைப்படுத்துகின்றனரோ, அவர்களெல்லாம் தங்கள் நகரை துாய்மையாக வைத்திருக்கின்றனர். துாய்மையில், இந்துார் மாநகராட்சி முதலிடத்தில் உள்ளது. தமிழகம் வளர்ந்துவிட்டதாக சொல்கிறோம்; ஆனால், இங்குள்ள சிலர், ஒன்றுசேர்ந்து, கமிஷனுக்காக, நமது ஊரை குப்பை மேடுகளாக மாற்றி வருகின்றனர். திருப்பூர் மேயர் ஊழல் செய்வதற்கென்றே இருக்கிறார். அவருக்கு, ஊரக பகுதி மக்களின் நலன், சுகாதாரத்தில் அக்கறையில்லை. குப்பையை மறுசுழற்சி செய்வதில்லை. நாளை முதல், போலீசாரை வேலை வாங்க, நாம் என்ன செய்யவேண்டுமோ, அதனை செய்வோம். போலீசாரின் தவறுக்கு, நாளை முதல் சடுகுடு ஆட்டம் ஆடலாம். சின்னக்காளிபாளையம் மக்களுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன்; குப்பை பிரச்னைக்கு எதிராக, தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். ஆனால், இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு, வரும் சட்டசபை தேர்தலில்தான் இருக்கிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்