திருப்பரங்குன்றம் வழக்கு; மலை மீது இருப்பது தீபத்துாண் என்பதற்கு ஆதாரம் இல்லை: தமிழக அரசு
19 மார்கழி 2025 வெள்ளி 11:09 | பார்வைகள் : 137
திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற, தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததற்கு எதிராக தாக்கலான மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில், 'அது தீபத்துாண் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை' என, தமிழக அரசு தரப்பு தெரிவித்தது. அனைத்து தரப்பினரின் வாதங்கள் நிறைவடைந்ததால், தீர்ப்பை ஒத்திவைத்தது உயர் நீதிமன்ற மதுரை கிளை.
மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கின், மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன் நேற்று 5வது நாளாக நடந்தது.
தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமனும், மனுதாரர்களான ராம ரவிக்குமார், பரமசிவம், அரசு பாண்டி, கார்த்திகேயன் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.ஸ்ரீராம், வள்ளியப்பன், கார்த்திகேயன், வழக்கறிஞர்கள் அருண் சுவாமிநாதன், நிரஞ்சன் எஸ்.குமார் ஆகியோரும் ஆஜராகினர்.
ராமன்: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள துாணில் தீபம் ஏற்றப்பட்டது என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆதாரத்தை ராம ரவிக்குமார் உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் தரப்பில் தாக்கல் செய்யவில்லை. தமிழக அரசு தரப்பில், தர்கா நிர்வாகம் உள்ளிட்ட யாருக்கும் ஆதரவான நிலைப்பாடு எடுக்கவில்லை. தர்கா நிர்வாகம், தனியாக மேல்முறையீடு செய்து வழக்கறிஞரை நியமித்து வாதத்தை முன்வைத்துள்ளது.
1923 சிவில் வழக்கு அடிப்படையில் மதுரை கீழமை நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் திருப்பரங்குன்றம் மலையை ஆய்வு செய்தார். அவர், 'மலை உச்சியில் தர்கா மட்டுமே உள்ளது. வேறு வழிபாட்டு தலத்திற்குரிய கட்டுமானம் எதுவும் இல்லை' என, தீர்ப்பில் பதிவு செய்துள்ளார்.
காலம் காலமாக தீபம் ஏற்றும் இடத்திற்கு பதிலாக, மலை உச்சியில் ஏற்ற உத்தரவிடக்கோரி தாக்கலான வழக்கை, தனி நீதிபதி வேணுகோபால், 2014ல் தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து தாக்கலான மேல்முறையீட்டு மனுவை, நீதிபதிகள் கல்யாணசுந்தரம், பவானி சுப்பராயன் அமர்வு, 2017ல் தள்ளுபடி செய்தது.
இது தொடர்பான மற்றொரு வழக்கில், 1996ல் விசாரித்த நீதிபதி கனகராஜ், 'மனுதாரர் அறநிலையத்துறையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுக வேண்டும்' என, உத்தரவிட்டார்.
1923 முதல் 2025 வரை பல்வேறு வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளில், தீபத்துாண் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
இவ்விவகாரத்திற்கு ஏற்கனவே சட்ட ரீதியாக தீர்வு காணப்பட்டுவிட்டது. அதற்கு மீண்டும் உயிரூட்ட முடியாது. தற்போது, ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனு மீது, தனி நீதிபதி தவறான முடிவு எடுத்து உத்தவிட்டுள்ளார்.
உச்சிப்பிள்ளையார் கோவில், மலையின் பாதியில் அமைந்துள்ளது. அங்கு, 100 ஆண்டுகளுக்கு மேல் தீபம் ஏற்றப்படுகிறது. அந்நடைமுறையை, ஒரே நாள் இரவில் தனி நீதிபதியின் உத்தரவுப்படி மாற்றியமைக்க முடியாது.
வழிபாட்டுத் தலங்கள் சட்டப்படி, நாடு சுதந்திரம் அடைந்தபோது, வழிபாட்டுத்தலங்கள் எந்த நிலையில் இருந்தனவோ, அதே நிலையில் தற்போதும் தொடர வேண்டும்; மாற்றம் செய்ய முடியாது.
ராம ரவிக்குமார் தரப்பு, 'மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்' என, மட்டுமே குறிப்பிட்டு, திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலருக்கு மனு அனுப்பியது. ஆனால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவில், 'தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவை செயல் அலுவலர் நிராகரித்துள்ளார். இதுபோன்ற சூழலில், அறநிலையத்துறை சட்டத்தின் குறிப்பிட்ட பிரிவின்படி, நான்கு கட்ட நிலையில் இணை கமிஷனர், கமிஷனர் உள்ளிட்டோரிடம் தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. கமிஷனர், இணை கமிஷனரிடம் அரசு பாண்டி மனு அளித்துள்ளார். அதை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க தயார்.
நீதிபதிகள்: இவ்விவகாரத்தை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொண்டே செல்வது?
எஸ்.ஸ்ரீராம், வள்ளியப்பன், கார்த்திகேயன்: சூபி கலாசாரத்தை பின்பற்றி தர்காவில் தீபம் ஏற்றப்படுகிறது. ஆனால், தீபத்துாணில் தீபம் ஏற்ற ஆட்சேபிக்கப்படுகிறது. மலை மேல் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றப்படும் என்பதற்கு கோவில் நிர்வாகம் வெளியிட்ட புத்தகத்தில் குறிப்பு உள்ளது.
மலையிலுள்ள கல்லாத்திமரம், கோவிலின் தலவிருட்சமாகும். அதில், தர்கா தரப்பினர் கொடியை கட்டி வைத்துள்ளனர். கோவிலுக்கு சொந்தமான அப்பகுதியை, தர்கா தரப்பில் உரிமை கோர வாய்ப்புள்ளது.
அரசு தரப்பில் கூறுவது போல், அறநிலையத்துறையின் குறிப்பிட்ட சட்டப்பிரிவின்படி கோவில் திருவிழாவில் முதல் மரியாதை அளித்தல் உள்ளிட்ட சில விஷயங்களுக்காக மட்டுமே அதிகாரிகளை அணுக முடியும்.
மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி செயல் அலுவலரிடம் மனு அளித்ததும், கோவில் நிர்வாகம் தரப்பு விரைவாக செயல்பட்டு, தீபத்துாணை மூடி மறைத்துள்ளது. இதனால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவில், தீபத்துாணில் தீபம் ஏற்றுவது உள்ளிட்ட இதர நிவாரணங்கள் கோரப்பட்டது. அது தீபத்துாண்தான் என்பதற்கு போதுமான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளோம். இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ரிட் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுகிறது. நீதிமன்ற அவமதிப்பு மேல்முறையீட்டு வழக்குகள் மீதான விசாரணை ஜன., 7க்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan