Paristamil Navigation Paristamil advert login

இந்தியாவுக்கு சவாலாக மாறியுள்ள வங்கதேசம்: பார்லி., குழு எச்சரிக்கை

இந்தியாவுக்கு சவாலாக மாறியுள்ள வங்கதேசம்: பார்லி., குழு எச்சரிக்கை

19 மார்கழி 2025 வெள்ளி 07:09 | பார்வைகள் : 324


வங்கதேசத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மற்றும் பாகிஸ்தான் - சீனாவின் தலையீடு காரணமாக நடக்கும் அரசியல் மாற்றங்கள், 1971 போருக்கு பின் இந்தியாவுக்கான மிகப் பெரிய சவாலாகி மாறியுள்ளதாக நம் வெளியுறவு துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு அறிக்கை அளித்துள்ளது.

பார்லிமென்ட் வெளியுறவு நிலைக்குழுவுக்கு காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தலைமை தாங்குகிறார். இவர் தலைமையிலான எம்.பி.,க்கள் குழுவினர் அரசுக்கு வெளியுறவு விவகாரங்களில் பல ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியா - வங்கதேசம் உறவு குறித்து அக்குழுவினர் சமீபத்தில் அறிக்கை சமர்பித்தனர். அதில் கூறியிருப்பதாவது: வங்கதேசத்தில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் 1971-க்குப் பின் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது. அந்நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எழுச்சி, உள்நாட்டு அரசியல் மாற்றங்கள், சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு அதிகரிக்கும் செல்வாக்கு ஆகியவை இதற்கு முக்கிய காரணங்கள்.

இது நீண்டகால நோக்கில் இரு தரப்பு உறவை ஆழமாக பாதிக்கும். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை தொடர்ந்து தடை செய்து வைத்திருப்பதால், போட்டி சக்திகளுக்கு இடம் உருவாகியுள்ளது.

இளைஞர்கள் தலைமையிலான தேசியவாத உணர்வு வலுவடைந்து வருகிறது. இஸ்லாமிய குழுக்களின் எழுச்சியுடன் இவர்கள் இணைந்தால், இது நம் நாட்டின் பாதுகாப்புக்கும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக அமையலாம்.

எனவே மத்திய அரசு வங்கதேச இடைக்கால அரசுடன் நல்ல தொடர்பை வைத்திருக்க வேண்டும். அந்நாட்டு மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்