Paristamil Navigation Paristamil advert login

சட்டசபை தேர்தல் அறிக்கை தயாரிக்க தி.மு.க.,வில் குழு அமைப்பு! எம்.பி., கனிமொழி தலைமை ஏற்கிறார்

சட்டசபை தேர்தல் அறிக்கை தயாரிக்க தி.மு.க.,வில் குழு அமைப்பு! எம்.பி., கனிமொழி தலைமை ஏற்கிறார்

18 மார்கழி 2025 வியாழன் 12:22 | பார்வைகள் : 147


சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி வரும் தி.மு.க., தலைமை, தேர்தல் அறிக்கை தயாரிக்க, லோக்சபா எம்.பி., கனிமொழி தலைமையில் குழு அமைத்துள்ளது. அமைச்சர்கள், நிபுணர்கள் உள்ளிட்ட 12 பேர், இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தல், அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை துவக்கி, ஆட்சியை தக்கவைக்கும் முயற்சியில் தி.மு.க., தீவிரமாக பணியாற்றி வருகிறது.

உரிமைத் தொகை

ஆளும் தி.மு.க., கூட்டணிக்கு எதிராக, இந்த தேர்தலில் அ.தி.மு.க., - பா.ஜ., ஒரு அணியாகவும், த.வெ.க., மற்றும் நாம் தமிழர் கட்சிகள் தனித்தனியாகவும் களமிறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், களத்தில் போட்டி கடுமையாக இருக்கும் என்பதால், கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்க, ஆளும் தி.மு.க., தரப்பில் வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல், 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான வாக்குறுதிகள் தயாரிப்பில், கனிமொழி எம்.பி., முக்கிய பங்காற்றினார். தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கைகள், கதாநாயகனாக வர்ணிக் கப்பட்டது. இந்த தேர்தல்களில், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது.

கடந்த சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பஸ் பயணம், ஹிந்து கோவில்களை சீரமைக்க 1,000 கோடி ரூபாய், 'சர்ச்'சுகளை சீரமைக்க 200 கோடி ரூபாய், விவசாயத்துக்கு தனி பட்ஜெட் உள்ளிட்ட 505 வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டன; அவை, வாக்காளர்களிடம் வரவேற்பை பெற்றன.

வரும் சட்டசபை தேர்தலிலும், அது போன்ற வாக்குறுதிகளை அளிக்க, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது. அதனால், கடந்த தேர்தல்களை போலவே, இம்முறையும் தேர்தல் அறிக்கை தயாரிக்க, கனிமொழி தலைமையில் 12 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கை:

கனிமொழி தலைமையிலான குழுவில், செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், அமைச்சர்கள் கோவி.செழியன், தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முக்கிய துறைகள்

மேலும், எம்.எம்.அப்துல்லா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எழிலன் நாகநாதன், கார்த்திகேய சிவசேனாபதி, தமிழரசி ரவிகுமார் உள்ளிட்டோரும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் உள்ளனர்.

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தானம், 'கனவு' அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

முனைவர் பட்டம் பெற்றவர்களில் மூவரும், பேராசிரியர், டாக்டர், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, தொழில் முனைவர் என, முக்கிய துறை களின் நிபுணர்களை முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்துள்ளார்.

மக்கள் கருத்து கேட்பு

தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில், அனைத்து மண்டலங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர், மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் சென்று, பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடி, தேர்தல் அறிக்கை தயாரிக்க உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து, டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், ''தமிழகத்தின் வளர்ச்சி அடிப்படையில், தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். மக்களின் கருத்துகள், நிபுணர்களின் கருத்துகளை கேட்டறிந்து, அவர்களுடைய கோரிக்கைகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும்,'' என்றார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்