Paristamil Navigation Paristamil advert login

கிரிப்டோகரன்சி மூலம் கேரளாவில் ரூ.330 கோடி ஹவாலா பரிவர்த்தனை

கிரிப்டோகரன்சி மூலம் கேரளாவில் ரூ.330 கோடி ஹவாலா பரிவர்த்தனை

2 கார்த்திகை 2025 ஞாயிறு 11:23 | பார்வைகள் : 174


கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த இருவருக்கு சொந்தமான நிறுவனம், தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவிற்கு பூக்களை பல ஆண்டுகளாக ஏற்றுமதி செய்து வருகிறது. சமீபத்தில், இவர்கள் கிரிப்டோகரன்சி மூலம் வருவாய் ஈட்டியதை, வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு கண்டறிந்தது.

இது தொடர்பாக கேரளாவின் கொச்சியில் உள்ள புலனாய்வு பிரிவினர், குற்றச்சாட்டுக்குள்ளான நபர்களின் வீடுகள், அலுவலகங்கள் அமைந்துள்ள மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கடந்த மூன்று நாட்களாக சோதனை நடத்தினர்.

இதில், முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், பண பரிவர்த்தனைகளை மறைக்கும் நோக்கில் பல்வேறு நபர்களின் பெயர்களில் பல கிரிப்டோ கணக்குகளை உருவாக்கியது தெரியவந்தது.

இதில், ஒரு நபர் கேரளாவின் மலப்புரம் மற்றும் கோழிக்கோட்டை மையமாக வைத்தும், மற்றொரு நபர் மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் இருந்தபடியும், கிரிப்டோ கணக்குகளை கையாண்டதை வருமான வரித்துறையினர் கண்டறிந்தனர்.

இவர்கள், கிரிப்டோகரன்சி மூலம் மட்டும், 330 கோடி ரூபாய் வரை ஹவாலா பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதை வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவினர் கண்டறிந்தனர். எனினும், முழு பரிவர்த்தனை தொடர்பான விபரங்கள், ஆய்வுக்குப்பின் தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்