எஸ்.ஐ.ஆர்., பணிக்கு கால நீட்டிப்பு இல்லை; கணக்கெடுப்பு படிவங்களை வழங்க அறிவுறுத்தல்
25 கார்த்திகை 2025 செவ்வாய் 04:09 | பார்வைகள் : 124
ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வழங்கிய கணக்கெடுப்பு படிவங்களை, பூர்த்தி செய்து விரைவாக ஒப்படைக்க வேண்டும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வேண்டுகோள் விடுத்தார்.
அவர் அளித்த பேட்டி:
இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் மொத்தம், 6.41 கோடி வாக்காளர்கள் பட்டியலில் உள்ளனர். அதில், 6.16 கோடி வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
அடுத்த மாதம், 4ம் தேதி வரை இப்பணிகள் நடக்கும். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்ப பெற்று, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன. இப்பணிகள், 50 சதவீதம் முடிந்துள்ளன.
ஓட்டுச்சாவடி அலுவலர்கள் உள்பட, 83,256 பேர், இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தன்னார்வலர்கள், 33,000 பேரும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். அரசியல் கட்சிகளின், 2.45 லட்சம் ஏஜன்ட்களும், எஸ்.ஐ.ஆர்., பணிகளை கண்காணித்து வருகின்றனர்.
புதிய ஓட்டுச்சாவடிகளுக்கு கூடுதலாக அலுவலர்களை நியமித்துள்ளோம். இதுவரை, 327 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தங்களது பணிகளை, 100 சதவீதம் முடித்துள்ளனர். தகுதியான எந்த வாக்காளர் பெயரும், வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடக்கூடாது.
அதற்காகவே, இத்தனை பேரும் கடுமையாக பணியாற்றி வருகிறோம். தகுதியான வாக்காளர் பெயர் நீக்கப்பட்டு இருந்தால், அதற்கு ஓட்டுச்சாவடி வாரியாக விளக்கம் அளிக்கப்படும்.
இணையதளத்திலும் இதுகுறித்த விபரங்கள் வெளியிடப்படும். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின், தகுதியான வாக்காளர்களிடம் படிவம் பெற்று, இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.
கணக்கெடுப்பு படிவத்தை பெற்ற வாக்காளர்கள், அதை தங்களது ஓட்டுச்சாவடி அலுவலரிடம் விரைந்து ஒப்படைக்க வேண்டும். இந்திய தேர்தல் கமிஷன் வாயிலாக, இதை வாக்காளர்களுக்கு வேண்டுகோளாக வைக்கிறோம்.
எந்த காரணத்தை கொண்டும், கணக்கெடுப்பு பணிக்கு காலநீட்டிப்பு வழங்கப்படாது. திட்டமிட்டபடி டிசம்பர், 4ம் தேதி பணிகள் நிறைவு பெறும். முகவரி மாறியவர்கள் அதே தொகுதிக்குள் இருந்தால், அவர்களை கண்டறிந்து கணக்கெடுப்பு படிவம் வழங்கி வருகிறோம். வேறு தொகுதிக்கு மாறி இருந்தால், படிவம், 8 கொடுத்து, அவர்கள் பட்டியலில் சேருவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்து கையெழுத்திட்டு கொடுத்த அனைவரது பெயரும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். இதை தேர்தல் கமிஷன் தெளிவாக சொல்லியிருக்கிறது.
மேலும், ஒரு வீட்டில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், ஒரு தெருவில் வசிப்பவர்கள் பெயர்கள், அந்த பாகத்தில் வரிசையாக முறையாக இடம் பெறும் வகையிலான பணிகளையும் தேர்தல் கமிஷன் மேற்கொள்ள உள்ளது.
எந்த கட்சிக்கும் ஆதரவாக, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செயல்படவில்லை. அனைவரும் நடுநிலையுடன் பணியாற்றி வருகின்றனர். வெளிமாநிலத்தை சேர்ந்த 869 பேர், தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு உரிய படிவங்களை அளித்துள்ளனர். புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு, 18 வயது நிரம்பிய 3,000 பேர் படிவம் கொடுத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan