Paristamil Navigation Paristamil advert login

தலைவர் 173 பட இயக்குநர் இவரா ?

தலைவர் 173 பட  இயக்குநர் இவரா ?

23 கார்த்திகை 2025 ஞாயிறு 13:00 | பார்வைகள் : 143


ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் நீண்ட கால நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். 1990களுக்கு பின் இவர்கள் படங்களில் இணைந்து நடிப்பதை தவிர்த்து வந்தனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரஜினியும், கமலும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேச்சு அடிபட்டது. ஆனால் அப்படத்திற்கு முன்னதாக கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்கிற அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியான. அதுமட்டுமின்றி அப்படத்தை சுந்தர் சி இயக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.

ஆனால் அறிவிப்பு வெளியான ஒரே வாரத்தில் அப்படத்தில் இருந்து விலகியதாக சுந்தர் சி அறிக்கை வெளியிட்டார். அவர் அதற்கான காரணத்தை வெளிப்படையாக சொல்லாவிட்டாலும், அவர் சொன்ன கதையில் ரஜினிக்கு திருப்தி இல்லாததால் தான் சுந்தர் சி அதில் இருந்து வெளியேறி இருப்பார் என பேச்சு அடிபட்டது. இதுகுறித்து கமல்ஹாசன் பேசுகையில், ரஜினிக்கு திருப்தி அடையும் வரை கதை கேட்போம் என கூறி இருந்தார். இதன்மூலம் சுந்தர் சி சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்காததால் தான் அவர் இப்படத்தில் இருந்து விலகி இருக்கிறார் என்பது வெட்டவெளிச்சமாக தெரிந்தது.

சுந்தர் சி விலகிய பின்னர் தலைவர் 173 திரைப்படத்தை யார் இயக்குவார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது. கார்த்திக் சுப்பராஜ், எச்.வினோத் ஆகியோர் இயக்கினால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கூறிவர, தனுஷ் இப்படத்தை இயக்க முனைப்பு காட்டி வருவதாக பேச்சு அடிபட்டது. அதன்பின்னர் ஆர்.ஜே.பாலாஜி ரஜினிக்கு கதை சொல்லி இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவையெல்லாம் ரஜினிக்கு திருப்தி அளிக்கவில்லை என தெரிகிறது. இதனால் அவர்கள் இருவரையும் ரஜினிகாந்த் ரிஜெக்ட் செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், தலைவர் 173 படத்தை இயக்குவதற்கான போட்டியில் மேலும் ஒரு இளம் இயக்குநர் களத்தில் இறங்கி இருக்கிறார். அவர் வேறுயாருமில்லை தேசிய விருது வென்ற பார்க்கிங் என்கிற திரைப்படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தான். இவர் ரஜினிக்கு கதை சொல்லி இருப்பதாகவும், அந்தக் கதை ரஜினிக்கு பிடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் தலைவர் 173 திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்