Paristamil Navigation Paristamil advert login

இலங்கையின் சில பிரதேசங்களில் வெள்ள அபாயம்!

இலங்கையின் சில பிரதேசங்களில் வெள்ள அபாயம்!

23 கார்த்திகை 2025 ஞாயிறு 10:48 | பார்வைகள் : 235


தெதுரு ஓயா மற்றும் அத்தனகலு ஓயாவைச் அண்மித்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தெதுரு ஓயாவின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக, அதன் நீர்மட்டம் வெள்ளம் ஏற்படக்கூடிய மட்டத்தை நெருங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தற்போது தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு, வினாடிக்கு 19,400 கன அடி என்ற வேகத்தில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீர்த்தேக்கத்திற்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து, வெளியேற்றும் அளவு அடுத்து வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கப்படலாம்.

இதன் காரணமாக தெதுரு ஓயாவை அண்மித்துள்ள வாரியபொல, நிக்கவெரட்டிய, மஹவ, கொபேய்கனே, பிங்கிரிய, பள்ளம, சிலாபம், ஆராச்சிக்கட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும்.

அத்தனகலு ஓயா நீரேந்துப் பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்துள்ளது.

நீர் அளவீடுகளின் ஆய்வின்படி, அடுத்த 24 மணித்தியாலங்களில் அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா பள்ளத்தாக்குகளின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாய நிலை காணப்படுகின்றது.

திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகலு, மஹர, கம்பஹா, மினுவாங்கொடை, ஜா-எல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்நிலப் பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள தாழ்நிலங்கள் ஊடாகச் செல்லும் வீதிகள் சில இடங்களில் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.

எனவே, இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், குறித்த பகுதிகள் ஊடாகப் பயணிக்கும் வாகன சாரதிகளும் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்