Paristamil Navigation Paristamil advert login

நாங்கள் தற்குறி அல்ல; ஆச்சர்யக்குறி என்கிறார் விஜய்

நாங்கள் தற்குறி அல்ல; ஆச்சர்யக்குறி என்கிறார் விஜய்

23 கார்த்திகை 2025 ஞாயிறு 14:40 | பார்வைகள் : 100


நாங்கள் தற்குறி அல்ல; ஆச்சர்யக்குறி. மாற்றத்துக்கான அறிகுறி,'' என காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவரும், நடிகருமான விஜய் பேசினார்.

காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது: நாட்டிற்காக உழைப்பதற்காகவே அண்ணாதுரை பிறந்தார். பொதுநலத்தில் தான் நாள் முழுவதும் கண்ணாக இருந்தார் என்று எம்ஜிஆர் பாட்டு ஒன்று பாடி இருக்கிறார். அதனை கேட்டு இருப்பீங்க, அப்படிப்பட்ட காஞ்சி தலைவர் அண்ணாதுரை பிறந்த மாவட்டம் தான் காஞ்சிபுரம் மாவட்டம்.

தன்னுடைய வழிகாட்டி என்பதால், தான் ஆரம்பித்த கட்சியின் கொடியில் அண்ணாதுரை படத்தை வைத்தவர் எம்ஜிஆர். ஆனால் அண்ணாதுரை ஆரம்பித்த கட்சி அதன் பிறகு கைப்பற்றியவர்கள் என்ன எல்லாம் பண்ணுகிறார்கள். நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியுமா என்ன மக்களே? உங்களுக்கு தான் அது நல்லா தெரியுமே?

வன்மத்தோடு...

தனிப்பட்ட முறையில் எங்களுக்கும், அவங்களுக்கும் எந்த பிரச்னையும் கிடையாதுங்க, எந்த வாயக்கால் வரப்பு தகராறு எல்லாம் ஏதுமே கிடையாதுங்க, அப்படி இருந்தாலும் அதனை நாம் கண்டுகொள்ள போவது கிடையாது.

அவர்கள் வேண்டுமானால் எங்கள் மீது வன்மத்தோடு இருக்கலாம். நாங்கள் அப்படி இல்லை. ஆனால் உங்களை, என்னை, நம்ம எல்லோரையும் பொய் சொல்லி நம்பி வைத்து, ஓட்டு போட வஞ்சு ஏமாத்தினாங்க இல்ல, அப்படி ஏமாற்றி ஆட்சிக்கு வந்து, மக்களுக்கு நல்லது செய்வது போல் நடிக்கிறாங்க, நாடகம் ஆடிகிறார்கள், அவர்களை எப்படி நாம் கேள்வி கேட்காமல் இருக்க முடியும்?

அதனால் அவர்களை கேள்வி கேட்காமல் நாம் விட போவது இல்லை. இதனை காஞ்சிபுரம் மண்ணில் இருந்து சொல்கிறேன் என்றால், இந்த மண்ணுக்கும் நமக்கும் ஒரு தொடர்பு ஏற்படுகிறது.

கொள்கை இல்லையா?

முதல் களப்பயணம் தொடங்கியது பரந்தூரில் இருந்து தான். இன்றைக்கு மன வேதனைக்கு பிறகு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்து இருப்பது காஞ்சிபுரம் மாவட்டம் தான். மக்களிடம் செல் என்று சொன்ன அண்ணாதுரையை மறந்தது யார்?

மக்களுக்காக சட்டபூர்வமாக எல்லா நல்லவற்றையும் செய்ய வேண்டும். ஒட்டுமொத்த மக்களுக்காக செய்ய வேண்டும். அந்த ஒரே லட்சியத்தில் தான் அரசியலுக்கு வந்துள்ளோம். கொள்கை என்ன கிலோ என்ன, விலை என்ன கேட்கிற அளவுக்கு, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சமத்துவம் சம வாய்ப்பு என்று கூறும் எங்களுக்கு கொள்கை இல்லை என்கிறார் முதல்வர்.

வக்பு சட்டத்தை எதிர்த்து முதலில் சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்ற எங்களுக்கு கொள்கை இல்லையா? இவர்கள் கொள்கையே கொள்ளை தான்.

பாசாங்கு காட்டாதே...!

பவள விழா பாப்பா, நீ பாசாங்கு காட்டாதே பாப்பா, நீ நல்லவர்கள் போல் நடிப்பதை பார்த்து நாடே பாப்பா என்று சொல்லும். நாங்கள் இன்னும் விமர்சனங்கள் செய்ய ஆரம்பிக்கவே இல்லையே, இன்னும் நாங்கள் அடிக்க ஆரம்பிக்கவே இல்லையே, அதற்குள் அலறினால் எப்படி?

அதனால் உங்களது அரசவை புலவர்கள் யாராவது இருந்தார்கள் என்றால், அவர்களின் கண்ணீரை துடைத்து விடுங்கள்.

மக்களின் பிரச்னை குறித்து பேச தான் இங்கு வந்து இருக்கிறோம். இந்த மக்களின் ரத்தத்துடன் பாலாறு சேர்ந்து ஓடுகிறது, இந்த ஆற்றினை அழித்து விட்டார்கள். மணலை கொள்ளை அடித்து இருக்கிறார்கள், இதில் ரூ.4730 கோடி மதிப்புள்ள மணல் கொள்ளை அடித்து இருக்கிறார்கள். இதற்கான ஆதாரம் கோர்ட், அமலாக்கத்துறையிடம் இருக்கிறது.

ஆத்திரம்

காஞ்சிபுரம் பட்டு என்று சொன்னால் உலத்திற்கே தெரியும். அதனை தயாரித்து கொடுக்கும் நெசவாளர்கள் நிலைமை என்ன தெரியுமா? வறுமை, துன்பம், கந்துவட்டி கொடுமை. அவர்களுக்கு மக்களை பத்தி யோசிப்பதற்கு நேரம் இல்லை. இந்த அரசு பரந்தூர் விவகாரத்தில், எங்களுக்கும், விவசாயிகளுக்கு எந்த காரணத்தையும் கூறி தப்பிக்க முடியாது.

மக்களுக்காக, மக்கள் பிரச்னையை பேசுவதால், ஆட்சியில் இருப்பவர்களுக்கு நமது மேல் ஆத்திரம் வர தானே செய்யும்.

இப்பொழுது கூட கரூர் பற்றி பேசுவேன் என்று எதிர்பார்த்து இருப்பார்கள். அது குறித்து அப்புறம் பேசுகிறேன்.

ஆட்சிக்கு வருவோம்


நம்ம ஆட்சிக்கு வந்தால், அது என்ன வந்தால், வருவோம். மக்கள் கண்டிப்பாக நம்மளை வர வைப்பாங்க, மக்களுக்கான ஆட்சியை மக்களே விரும்பி வர வைக்க தானே செய்வாங்க, அப்படி மக்களால் அமைக்கப்பட ஆட்சியில் என்ன செய்ய போகிறோம் என்று தேர்தல் அறிக்கையில் விளக்கமாக கொடுப்போம். அதற்கு முன், நான் சிறியதாக கொஞ்சம் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

வாக்குறுதிகள்:

1.எல்லோருக்கும் நிரந்தர வீடு இருக்கணும்,

2.வீட்டுக்கு ஒரு மோட்டார் சைக்கிள் இருக்கணும்

3.கார் லட்சியம். ஒவ்வொரு வீட்டிலும் கார் இருக்கும் வகையில் பொருளாதார மேம்பாடு

4.ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு படித்திருக்கணும்

5.வீட்டில் குறைந்தபட்சம் ஒருவருக்கு நிரந்தர வருமானம்

6.அதற்கான வேலைவாய்ப்பு உருவாக்கணும்

7.அதற்கு தகுந்தபடி கல்வியில் சீர்திருத்தம்

8.அரசு மருத்துவமனைக்கு பயமின்றி நம்பி செல்லும் வகையில் வசதி

9.பருவமழையில் எதுவும் பாதிக்காமல் இருக்கும் வகையில் மேம்பாடு

10.மீனவர்கள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், அரசு

ஊழியர்கள், ஆசிரியர்களிடம் கருத்து கேட்டு பாதுகாப்பு, வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

11.தொழில் வளர்ச்சியில் கவனம் இருக்கும்.

12.சட்டம் ஒழுங்கு கண்டிப்புடன் இருக்கும்.

இதற்கான விரிவான திட்டங்கள் எல்லாம் எங்கள் தேர்தல் அறிக்கையில் இருக்கும். இந்த விஜய் சும்மா ஏதும் சொல்ல மாட்டான். ஒன்று சொன்னால் அதை செய்யாம விடமாட்டான். அது மக்களுக்கு நன்றாக தெரியும். ஏன்டா இந்த விஜயை தொட்டோம், ஏன்டா விஜய் கூட இருக்கும் அந்த மக்களை தொட்டோம், நினைச்சி, நினைச்சி வருத்தப்படப்போகிறீர்கள்.

மாற்றத்துக்கான அறிகுறி. தற்குறிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, வாழ்நாள் முழுவதும் விடையே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உங்கள் அரசியலேயே கேள்விக்குறியாக்க போகிறார்கள்,

இந்த போட்டி எப்படி இருக்க போகுது என்றால், மக்களுக்காக மக்களோடு மக்களாக இருக்கும் நம்மளை மக்களே தேர்வு செய்ய போகிறார்கள். ஆல்ரெடி தேர்வு செய்தாச்சு, நம்பிக்கையுடன் இருங்கள், வெற்றி நிச்சயம், மீண்டும் சந்திக்கும் வரை நன்றி, வணக்கம்.இவ்வாறு விஜய் பேசினார்.

கருத்து சொல்லுங்க வாசகர்களே!

'நாங்கள் தற்குறி அல்ல; ஆச்சர்யக்குறி; மாற்றத்துக்கான அறிகுறி' என்கிறார் விஜய். இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

1.தற்குறியா?

2.ஆச்சர்யக்குறியா?

3.மாற்றத்துக்கான அறிகுறியா?

வர்த்தக‌ விளம்பரங்கள்