ஆன்டிபயாடிக்கின் அதிகப்படியான பயன்பாட்டினால் புற்றுநோய் ஏற்படுமா ?
22 கார்த்திகை 2025 சனி 12:35 | பார்வைகள் : 113
ஆன்டிபயாடிக்கின் அதிகப்படியான மற்றும் தவறான பயன்பாடு உடனடி பக்கவிளைவுகள் மட்டுமின்றி, நீண்ட காலத்தில் குடல் ஆரோக்கியத்தை சீர்குலைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி, புற்றுநோய் உள்ளிட்ட பல தீவிர நோய்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உலக ஆண்டிபயாடிக் விழிப்புணர்வு வாரத்தை (நவம்பர் 18-24) முன்னிட்டு, உலகளவில் ஆண்டிபயாடிக்கின் பொறுப்பான பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
ஆன்டிபயாடிக், உயிர்களை காப்பாற்றும் மருந்துகள் என்றாலும், அவற்றின் அதிகப்படியான பயன்பாடு ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்பு என்கிற மிகப்பெரிய உலக சுகாதார அச்சுறுத்தலை உருவாக்குகிறது. அதே நேரத்தில், இவ்வகை மருந்துகள் குடலின் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளை அழிப்பதன் மூலம் உடல் இயக்கத்திற்கு உதவும் இயற்கையான சமநிலையையும் பாதிக்கின்றன.
மேம்பட்ட லேப்ராஸ்கோபி மற்றும் அறுவைச் சிகிச்சை புற்றுநோயியல் நிபுணரான டாக்டர் அப்ரித் பன்சால் இதுபற்றி கூறுகையில், ஆன்டிபயாடிக்குகள், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிப்பதுடன், செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளையும் அழிக்கும். இதன் விளைவாக, உடலின் இயற்கையான நுண்ணுயிர் சமநிலை, மைக்ரோபையோம் பாதிக்கப்படுகிறது.
ஆனால், பலர் சளி, காய்ச்சல் போன்ற வைரஸ் நோய்களுக்கும், ஆன்டிபயாடிக் மருந்துகளை தவறாக பயன்படுத்துகின்றனர். இது எந்த நன்மையும் அளிக்காததோடு, குடல் நுண்ணுயிர்களுக்குச் சேதத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல், மருத்துவர் பரிந்துரைத்த ஆன்டிபயாடிக் மருந்தை பாதியிலேயே நிறுத்துவது, குடல் சமநிலையை மேலும் பாதித்து ஆன்டிபயாடிக் எதிர்ப்பை தூண்டும் அபாயகரமான பழக்கமாகும்.
குடல் நுண்ணுயிர் சமநிலை சீர்குலையும் போது ஏற்படும் டிஸ்பயோசிஸ் நிலை, வீக்கம், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி, அஜீரணம் மற்றும் நீண்டகால செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகள், தொடர்ந்து ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்துகிறவர்களில் பெருங்குடல் புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய்களின் அபாயம் அதிகமாகி இருப்பதாகக் காட்டுகின்றன என்றும் டாக்டர் பன்சால் கூறுகிறார்.
குடலில், நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் குறைந்தால், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் கட்டுப்பாடின்றி பெருகி, நச்சுகளை உருவாக்குகின்றன. இது நாள்பட்ட அழற்சியை உண்டாக்கி, திசுக்களை சேதப்படுத்தி, அசாதாரண செல் வளர்ச்சியை தூண்டுகிறது, இது புற்றுநோய் உருவாகும் சூழலையும் உருவாக்கும்.
ஆன்டிபயாடிக் அதிகப்படியான பயன்பாட்டின் மற்றொரு பெரிய விளைவு ஆன்டிபயாடிக் எதிர்ப்பு பாக்டீரியாக்களின் உருவாக்கம் ஆகும். இவை சாதாரண சிகிச்சைகளுக்கு பதிலளிக்காது, தீவிரமான, நீடித்த மற்றும் உயிருக்கு ஆபத்தான தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. தற்போதைய தகவல்படி, உலகளாவிய முக்கியமான பொது சுகாதார சவால்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்நிலையில், உலக ஆன்டிபயாடிக் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, டாக்டர் பன்சால் பொது மக்களுக்கு பின்வரும் முக்கிய நடைமுறைகளையும் பரிந்துரைக்கிறார்.
- தகுதிவாய்ந்த மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.
- சாதாரண வைரஸ் தொற்றுகளுக்கு ஆன்டிபயாடிக் பயன்படுத்த கூடாது.
- மருத்துவர் அறிவுரைப்படி, மருந்துகளை முழுமையாக எடுத்து முடிக்க வேண்டும்.
- மீதமுள்ள மருந்துகளை பயன்படுத்துதல் மற்றும் சுயமாக மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
எனவே, குடல் நுண்ணுயிர் சமநிலையை மீட்டெடுக்க, நார்ச்சத்து நிறைந்த உணவுகள், புரோபயாடிக் உணவுகள் மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடித்தல் அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
இன்று நாம் ஆன்டிபயாடிக் மருந்துகளை பொறுப்பாக பயன்படுத்தினால், நாளை நமது ஆரோக்கியத்தையும், எதிர்கால தலைமுறைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும்” என்பதே நிதர்சமான உண்மையாகும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan