Paristamil Navigation Paristamil advert login

கோவை மெட்ரோ திட்ட அறிக்கையில் முரண்பாடுகள்; அம்பலப்படுத்தியது மத்திய அரசு

கோவை மெட்ரோ திட்ட அறிக்கையில் முரண்பாடுகள்; அம்பலப்படுத்தியது மத்திய அரசு

22 கார்த்திகை 2025 சனி 10:25 | பார்வைகள் : 100


கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை, திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை துல்லியமாக குறிப்பிட்டு, மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையின் சார்பு செயலாளர் சரோஜினி சர்மா அனுப்பிய கடிதத்தில், திட்ட அறிக்கையில் உள்ள முரண்பாடுகள் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளன.

கோவையில் மெட்ரோ ரயில் இயக்குவதற்கான சாத்தியக் கூறுகளை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆய்வு செய்தது. முதலில், திருச்சி ரோடு, அவிநாசி ரோடு, சத்தியமங்கலம் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு என நான்கு வழித்தடங்களில், 144 கி.மீ., துாரத்துக்கு மெட்ரோ ரயில் இயக்க ஆலோசிக்கப்பட்டது.

இரு வழித்தடங்கள்

முதல்கட்டமாக, அவிநாசி ரோடு மற்றும் சத்தி ரோடு என இரு வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டன. உத்தேசமாக, 10 ஆயிரத்து 740 கோடி ரூபாயில், 34.4 கி.மீ., துாரத்துக்கு,

32 நிறுத்தங்கள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி குழுவினர் கள ஆய்வு செய்தனர்.

இத்திட்டத்துக்கு அனுமதி மற்றும் நிதியுதவி கேட்டு, மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறைக்கு, தமிழக அரசு விரிவான திட்ட அறிக்கை அனுப்பியது. அதை பரிசீலித்த மத்திய அரசு, 'மெட்ரோ ரயில்' கொள்கையை சுட்டிக் காட்டி, சி.எம்.பி., எனப்படும் (Comprehensive Mobility Plan) என்கிற முழுமையான நகர போக்குவரத்து திட்ட அறிக்கை கேட்டு, திருப்பி அனுப்பியது. அதன்பின், கூடுதல் ஆவணங்கள் இணைத்து, மீண்டும் அறிக்கை அனுப்பப்பட்டது.

இச்சூழலில், மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையின் சார்பு செயலாளர் சரோஜினி சர்மா, தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறையின் முதன்மை செயலருக்கு. மூன்று பக்க கடிதம் அனுப்பியுள்ளார். அதில், மூன்றாம் பக்கத்தில் இருந்த தகவல்களை மட்டுமே சமூக வலைதளங்களில் பரவ விட்டு, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்து விட்டதாக, ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டு, பரப்பப்படுகிறது.

கடிதத்தில் என்ன இருக்கிறது?

மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு, தமிழக அரசு இடையே 50:50 சதவீத நிதி ஒதுக்கீடு அடிப்படையில், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்த, 16.2.2024 மற்றும் 29.11.2024 ஆகிய தேதிகளில் கடிதம் அனுப்பி, ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. கோவை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக, மெட்ரோ ரயில் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதலின் படி, விரிவான திட்ட அறிக்கை கவனமாக பரிசீலிக்கப்பட்டது.

சராசரி பயண வேகம்

கோவை மாநகராட்சி பகுதியில் சராசரி பயண வேகம் மணிக்கு 21.7 கி.மீ., உள்ளூர் திட்ட குழும பகுதியில் மணிக்கு 24.5 கி.மீ., பீக் ஹவர்ஸ் சமயத்தில், சராசரி வேகம் மணிக்கு 23.1 கி.மீ., பயணிகளுடன் செல்லும்போது 14.09 கி.மீ.,க்கு சராசரி பயண நேரம் 27.96 நிமிடங்களாகும்.

நகர்ப்புற வழித்தடத்தில் சராசரி வேகம் மணிக்கு, 30 கி.மீ., மெட்ரோ ரயில் சராசரி வேகம் மணிக்கு 34 கி.மீ., இதன்படி கணக்கிட்டால், சாலையில் இயக்கப்படும் போக்குவரத்து சராசரி வேகம், 'மெட்ரோ' வேகத்துக்கு சமமாகவே இருக்கிறது.

கார் பயணத்தின் சராசரி துாரம் 7.5 கி.மீ., இரு சக்கர வாகன பயணம் 5.8 கி.மீ., பஸ் பயணம் 7.3 கி.மீ., மினி பஸ் பயணம் 6.6 கி.மீ., மட்டுமே. இத்தகைய குறுகிய பயண துாரங்களில், பயணிகள் மற்ற போக்குவரத்து முறைகளில் இருந்து (கார், பஸ், இருசக்கர வாகனம்) மெட்ரோவுக்கு மாறினாலும், அவர்களுக்கு சராசரியாக 2-3 நிமிடங்களே நேரச்செலவு

குறையும். இதனால், பிற போக்குவரத்து முறைகளில் இருந்து, மெட்ரோவுக்கு பயணிகள் மாறுவது சாத்தியமற்றது.

பயணிகள் எண்ணிக்கை

கோவை மெட்ரோ திட்டம் 34 கி.மீ., துாரத்துக்கு திட்டமிடப்பட்டு, தினமும் 5.9 லட்சம் பயணிகள் செல்வார்கள் என, கணித்திருப்பது அதிகமாக தோன்றுகிறது. ஏனெனில், சென்னை மெட்ரோ பேஸ்-1 (55 கி.மீ.,) வழித்தடத்தில், 2025 பிப்., மாதத்தில் சராசரியாக 4 லட்சம் பயணிகளே சென்றுள்ளனர்.

* விரிவான திட்ட அறிக்கையின் படி, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கோவை மாநகராட்சி பகுதியில் மக்கள் தொகை 15.84 லட்சம். தவிர, உள்ளூர் திட்ட குழும பகுதியில் வசிக்கும் மக்கள் 7.7 லட்சம். தற்போது முன்மொழிந்துள்ள மெட்ரோ வழித்தடங்கள் உள்ளூர் திட்ட குழும பகுதிக்கு சேவை அளிக்காததால், அப்பகுதி மக்கள் மெட்ரோ பயன் படுத்த வாய்ப்பில்லை.

* கோவை மாநகராட்சி பகுதி 257 சதுர கி.மீ., பரப்பு கொண்டது. உள்ளூர் திட்ட குழுமம் 1,287 சதுர கி.மீ., பரப்பு கொண்டது. இது, மாநகராட்சி பரப்பை விட, ஐந்து மடங்கு அதிகம். அதனால், மெட்ரோ பயணிகள் எண்ணிக்கை கணிக்கப்பட்டதை விட, குறிப்பிடத்தக்க அளவில் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாலை அகலம் குறைவு

* மெட்ரோ வழித்த டத்தில் 79 சதவீத பகுதிகள், 20 மீட்டருக்கு குறைவாகவே அரசுக்கு சொந்தமான சாலைகளின் எல்லைகள் அமைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் 15 மீட்டருக்கும் குறைவாக உள்ளது.உக்கடம் முதல் கோவை ரயில்வே ஸ்டேஷன் சந்திப்பு வரை, இணைப்பு பாதை அமைக்க, நவாப் ஹக்கீம் சாலையில் (என்.எச்., ரோடு) 10 - 12 மீட்டர், பெரிய கடை வீதியில் 18 - 22 மீட்டர், ஸ்டேட் பாங்க் ரோடு 22 - 24

மீட்டர் அகலத்துக்கே சாலை இருக்கிறது.

கோவை ரயில்வே ஸ்டேஷன் சந்திப்பில் இருந்து, ஹோப்ஸ் காலேஜ் செல்லும் வழித்தடத்தில், ஒசூர் ரோடு வழியாக அவிநாசி ரோடு செல்வதற்கு, 22 - 24 மீட்டருக்கே சாலை உள்ளது.

கோயமுத்துார் ரயில்வே ஸ்டேஷன் சந்திப்பில் இருந்து, ராமகிருஷ்ணா மில்ஸ் வழித்தடத்தில் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு (கலெக்டர் அலுவலகம் அருகே) 7 - 10 மீட்டர், டாக்டர் நஞ்சப்பா ரோடு 18 - 22 மீட்டர், காந்திபுரம் மெட்ரோ ஸ்டேஷன் அமைவிடத்தில் 8 - 12 மீட்டர் சாலைஎல்லை இருப்பதாக, திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம், மெட்ரோ வழித்தடத்தில் பல இடங்களில், போதுமான சாலை வசதி இல்லை என்பது தெரியவருகிறது. 22 மீட்டர் அகலத்துடன் முன்மொழியப்பட்ட, உயர்

மட்ட மெட்ரோ அமைப்பை அமைக்க, போதுமான சாலை வசதி இல்லாத காரணத்தால், தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்றதாக இருக்கலாம். தேவையான

இடங்களில் கட்டடங்களை இடிக்க வேண்டிய சூழல் வரும். இது, அதிக செலவையும், பொதுமக்களுக்கு சிரமத்தையும் ஏற்படுத்தும்.

* விரிவான திட்ட அறிக்கையில், மூன்று ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என முன்மொழியப்பட்டுள்ளது. இது, நடைமுறையில் சாத்தியமாகத் தெரியவில்லை.

* கோவையின் மக்கள் தொகை, 2011 கணக்கெடுப்பின் படி, 15.84 லட்சம் என திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மெட்ரோ கொள்கை 2017ன் படி, மக்கள் தொகை 20 லட்சம் மற்றும் அதற்கு மேல் உள்ள நகரங்கள் மட்டுமே, மெட்ரோ உள்ளிட்ட பெரிய அளவிலான பொது போக்குவரத்து திட்டங்களை திட்டமிட முடியும்.

* மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தின் முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டது. மாநில அரசு அங்கீகரித்த 'காம்ப்ரிஹென்சிவ் மொபிலிட்டி பிளான்' (Comprehensive Mobility Plan) படி, தற்போதைய பயணிகள் தேவை, அதிவிரைவு பஸ் போக்குவரத்து (Bus Rapid Transit System) அமைப்புக்கு ஏற்ற வகையில் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

* மெட்ரோ ரயில் கொள்கை 2017ன் படி, மக்கள் தொகை 20 லட்சம் மற்றும் அதற்கு மேல் இருக்கும் நகரங்கள், மெட்ரோ உள்ளிட்ட 'மாஸ் டிரான்சிட்' அமைப்புகளை திட்டமிடலாம். ஆனால், மதுரை மக்கள் தொகை 2011 கணக்கெடுப்பின் படி, 15 லட்சம் மட்டுமே.

* மெட்ரோ திட்டங்கள் அதிக செலவு கொண்டவை. நீண்ட கால தேவையை கணக்கில் கொண்டு துல்லியமாக திட்டமிட வேண்டும். அதிவிரைவு பஸ் போக்குவரத்து அமைப்பு உள்ளிட்ட திட்டங்கள் ஏற்றது.

* இவ்விஷயங்களை கருத்தில் கொண்டு, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங் களுக்கான விரிவான திட்ட அறிக் கைகள், திருப்பி அனுப்பப்படுகின்றன. இவ்வாறு, அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்