Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் தொலைபேசி அழைப்பு மற்றும் இணைய வரி தொடர்பில் முக்கிய அறிவிப்பு

இலங்கையில் தொலைபேசி அழைப்பு மற்றும் இணைய வரி தொடர்பில் முக்கிய அறிவிப்பு

19 கார்த்திகை 2025 புதன் 09:58 | பார்வைகள் : 852


கைப்பேசி பயனர்கள் இணையச் சேவைகளுக்கு 20.3% வரியும், வழக்கமான குரல் அழைப்புகளுக்கு 38% சதவீத வரியும் செலுத்த வேண்டும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரசாங்க நிதிப் பற்றிய குழுக்கூட்டத்தின் போது இந்த விளக்கம் வழங்கப்பட்டது.

குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, முற்கொடுப்பனவு மொபைல் சேவைகளைப் பயன்படுத்தும் நுகர்வோர் மீது விதிக்கப்படும் உண்மையான வரி குறித்து கேள்விகளை எழுப்பினார்.

இந்தக் கேள்விக்குப் பதிலளித்த தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் இந்திரஜித் ஹந்தபங்கொட, தொலைத்தொடர்பு வரிகளின் கட்டமைப்பு தொடர்பில் விளக்கமளித்தார்.

ஹந்தபங்கொடவின் கூற்றுப்படி, இணையப் பயன்பாட்டிற்கு தொலைத்தொடர்பு வரி விதிக்கப்படுவதில்லை, ஆனால் நுகர்வோர் இணைய சேவைகளுக்கு சுமார் 20.3% பயன்பாட்டு வரியைச் (effective tax) செலுத்துகின்றனர் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிராட்பேண்ட் தொடர்பான குரல் வசதிகள் உட்பட, குரல் சேவைகளுக்கு 38.4% பயன்பாட்டு வரி விதிக்கப்படுகிறது.

கலாநிதி ஹர்ச டி சில்வா, ஒரு பயனர் டேட்டா மற்றும் குரல் தொடர்பு இரண்டிலும் ஈடுபடும்போது, 100 ரூபாயை முற்கொடுப்பனவாக செலுத்தினால் எவ்வளவு தொகையை உண்மையில் பயன்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

100 ரூபாய் டேட்டா பயன்பாட்டிற்காக சுமார் 20.4% குறைக்கப்படுகிறது என்றும், குறிப்பாக 80 ரூபாவை பயன்படுத்த முடியும் என கூறினார்.

அதே சமயம் குரல் அழைப்புகளுக்கு அதிகப்படியான 38.4% வரி விதிக்கப்படுகிறது என்றும், நுகர்வோருக்கு இறுதியாகக் கிடைக்கும் பயனுள்ள தொகை அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டு முறையைச் சார்ந்தது என்றும் ஹந்தபங்கொட மீண்டும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்ட போதிலும், ரூபாய் 100 முற்கொடுப்பனவுக்கு பயன்படுத்தக்கூடிய மதிப்பைக் குறிக்கும் ஒரு திட்டவட்டமான பதிலை அவரால் வழங்க முடியவில்லை.

பயன்பாட்டு சேர்க்கைகள் நுகர்வோருக்கு நுகர்வோர் மாறுபடும் என்பதால் அவரால் உறுதியான பதிலை வழங்க முடியவில்லை எனக் கூறப்படுகின்றது.

இந்தக் கூட்டத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பலிஹேனவும் சில பகுதிகளில் போதிய இணைய வசதிகள் இன்மையினால் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து கவலைகளை எடுத்துரைத்தார், மேலும் இந்த விஷயத்தில் அவசர கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்